tamilnadu epaper

ரிக்கி பாண்டிங்கின் உற்சாகப் பேச்சு... தாயகம் திரும்பாத பஞ்சாப் கிங்ஸ் வெளிநாட்டு வீரர்கள்

ரிக்கி பாண்டிங்கின் உற்சாகப் பேச்சு... தாயகம் திரும்பாத பஞ்சாப் கிங்ஸ் வெளிநாட்டு வீரர்கள்

புதுடெல்லி,


இந்தியா - பாகிஸ்தான் இடையே நிலவிய போர் பதற்றத்தால் நாட்டில் அசாதாரணமான சூழல் நிலவியது. இதனால், 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் ஒரு வாரம் நிறுத்தப்படுவதாக இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்தது. இதையடுத்து பெரும்பாலான வெளிநாட்டு வீரர்கள் தாயகம் திரும்பினர். இன்னும் 12 லீக் மற்றும் இறுதிப்போட்டி உள்பட 4 பிளே-ஆப் சுற்று என மொத்தம் 16 ஆட்டங்களை நடத்த வேண்டி உள்ளது.


சில தினங்களுக்கு முன்னர் இரு நாடுகளும் போர் நிறுத்த அறிவிப்பை வெளியிட்டன. இதன் காரணமாக ஐ.பி.எல். போட்டியை மீண்டும் தொடங்க இந்திய கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதையொட்டி ஐ.பி.எல். நிர்வாக குழு உறுப்பினர்களும், கிரிக்கெட் வாரிய நிர்வாகிகளும் நேற்று ஆலோசனை நடத்தினர். இதையடுத்து எஞ்சிய ஐ.பி.எல். தொடர் வரும் 16 அல்லது 17ந் தேதிகளில் தொடங்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.


பெரும்பாலான வெளிநாட்டு வீரர்கள் தாயகம் திரும்பிய நிலையில், பஞ்சாப் அணியை சேர்ந்த வெளிநாட்டு வீரர்களை மட்டும் அவர்களது நாட்டிற்கு செல்ல விடாமல் ரிக்கி பாண்டிங் டெல்லியில் தங்க வைத்துள்ளதாக தற்போது ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் வெளியான தகவலின் படி, பஞ்சாப் அணியை சேர்ந்த மார்க்கஸ் ஸ்டாய்னிஸ், ஆரோன் ஹார்டி, ஜோஷ் இங்கிலிஸ், சேவியர் பார்லெட் போன்ற வெளிநாட்டு வீரர்களும் இங்குள்ள சூழ்நிலை காரணமாக தாயகம் திரும்ப நினைத்த வேளையில் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் அவர்களிடம் பேசி உள்ளார்.


அதன்படி, இங்குள்ள சூழல் தற்காலிகமானது தான் என்றும் நிச்சயம் ஐ.பி.எல் தொடர் மீண்டும் நடக்கும். இதனால், அவசரப்பட்டு யாரும் நாடு திரும்ப வேண்டாம். நிச்சயம் நிலைமை எல்லாம் சரியாகி மீண்டும் ஐ.பி.எல் தொடர் நடைபெறும். அதுவரை நீங்கள் என்னுடைய பாதுகாப்பில் டெல்லியில் தங்குங்கள் என வெளிநாட்டு வீரர்களுக்கு உறுதி கொடுத்து சமாதானம் செய்து அவருடன் தங்க வைத்துள்ளார்.


தற்போது பஞ்சாப் அணியில் மார்கோ யான்செனை தவிர்த்து மற்ற வெளிநாட்டு வீரர்கள் இந்தியாவிலே இருப்பதாக கூறப்படுகிறது. யான்சென் மட்டும் துபாயில் உள்ளதாக கூறப்படுகிறது. தாயகம் திரும்ப தயாராக இருந்த வீரர்களை, ரிக்கி பாண்டிங் இந்தியாவிலேயே தங்க வைத்து எப்படியாவது கோப்பையை வென்றுவிட வேண்டும் என்ற உத்வேகத்தில் இருப்பதை இந்த செயல் வெளிகாட்டுகிறது.