மனிதம் பேணி வாழ்க!
கால்களால் மிதித்தாலும்
கடலென்றும் வருந்தாது
அலைகளாய் மீண்டுவந்து மோதும்
கைகளால் அடித்தாலும்
காற்றென்றும் வருந்தாது
தென்றலாய் மீண்டுவந்து தழுவும்
வெட்டிச் சிதைத்தாலும்
காறிஉமிழ்ந்தாலும்
பொறுமையால் வெல்லுமிந்த பூமி
பட்டுத் துணியாலே
பாதை இருக்காது என்பதைச்
சொல்வதுதான் அனுபவச் சாமி
முயன்று முயன்று
முட்டி மோதினால்
மலைகளும் ஒருநாள் உடையும்
துவண்டு வீழ்ந்து
தோற்றுப் போனால்
துளிகளும் கடலாய் மாறும்
இயன்ற வரையில்
ஈவது ஒன்றே
எப்பொழு தும்நமை உயர்த்தும்
வியந்து போற்றும்
செய்கையை ஆற்று
வெற்றியை நாளும் நல்கும்
ஆற்றின் போக்கில்
போவதி னாலே
ஆவது எதுவும் இல்லை
தோற்றுப் போகும்
மனிதர் களாலே
உலகம் இயங்குவ தில்லை
ஏற்றுக் கொள்ளும்
தோல்விகள் நம்மை
என்றும் உயர்த்துவ தில்லை
போற்றும் வகையில்
செய்கையை ஆற்று
பொன்போல் வாழ்வை மாற்று
காற்றின் உருவம்
இல்லையென் றாலும்
காற்றே உயிரின் எல்லை
ஏற்றுக் கொள்ளும்
பணியில் உன்னை
யாரென உலகில் காட்டு
ஊற்றுக் கண்ணாய்
இருந்தே உதவு
உலகம் உன்னைப் போற்றும்
மாற்றும் உலகில்
நிலைத்து நிற்க
மனிதம் பேணி வாழ்வாய்!
இராம வேல்முருகன்
வலங்கைமான்