tamilnadu epaper

சகிப்பு

சகிப்பு


செல்போன் சிணுங்கியது.


அதிகாலை ஐந்து முப்பது மணி. 


இந்த நேரத்தில் யார் நம்மை அழைப்பது என்று யோசிக்கும்போதே செல்போன் ஓசை அடங்கி விட்டது .


யாரோ மிஸ்டு கால் கொடுத்து இருக்கிறார்கள்.


போனை பார்த்தாள்.  அவளது மாமியார்

அழைத்து இருக்கிறார். இந்த நேரத்தில் அழைக்க மாட்டாரே....என்று பதறினாள்.


கலவரத்துடன் ரூமை விட்டு

வெளியே வந்தால் ஆவி பறக்கும் காபியை கையில் வைத்துக் கொண்டு அவரது மாமியார் நிற்கிறார்.


" என்ன அத்த இது .....? "

அவளுக்கு வார்த்தைகள் வெளிவரவில்லை.


" முதல்ல காப்பிய குடி ! "


காபியை சுவைத்தபடியே சமையலறைக்குள் நுழைந்தால் வெண்ணெய் கத்தரிக்காய் குழம்பு வாசம்

மூக்கை துளைத்தது.


சாதம், குழம்பு,  பொரியல் எல்லாம் ஹாட் பேக்குகளில் சூடாக வைக்கப்பட்டிருந்தன.


" இதை எல்லாம் நான்தான்

செஞ்சேன். காலை நாலு மணிக்கு மேல் தூக்கம் வற்றது கிடையாது "


" அந்த நேரத்துல ஏதாச்சும்

பிரயோஜனமா செய்யலாமேன்னு 

தோனுச்சி "


" இனிமேல் மதிய சமையல்

என்னோடையது. நீயும் பாவம் சமையலையும் செஞ்சுகிட்டு பிள்ளையையும் 

ஸ்கூலுக்கு தயார் படுத்திகிட்டு ஆபீசுக்கும் ஒடறே ... காலை டிபனை மட்டும் நீ பாத்துக்கோ ..." என்றார்.


மாமியாருக்கு ரொம்ப உடம்பு முடியாம போயி ஆஸ்பத்திரியில ஒரு மாசம் பெட்ல இருந்தாங்க.  இவள் தான் மாமியார் கூடவே இருந்து அவர்களை பராமரித்து நல்ல முறையில் டிஸ்சார்ஜ் செய்து  நேற்றுதான் வீட்டுக்கு அழைத்து வந்தாள்.


" என்னடா எப்பவும் டெரரா இருக்குற நம்ம மாமியார் இப்போ இப்படி மாறிட்டாங்கன்னுதானே பாக்குற.....? "


" ஒத்த பிள்ளைய பெத்த அம்மாக்களுக்கே உண்டான

பொஸசிவ்னெஸ்தான் நான்

உன்னை பாடாய் படுத்தியதுக்கு காரணம் " 


" ஒரு மகளை விட மேலாக

ஆஸ்பத்திரியில என்ன கவனிச்சிகிட்ட ..... அப்ப எல்லாம் நான் குற்ற 

உணர்வுல  கூனி குறுகி போனது எனக்குதான் தெரியும். இப்ப நீ பாக்குறது

நல்ல குணமுடைய உன்னோட புது மாமியார் "

என்று சொல்லி மருமகளை கட்டி அணைத்தார் "


ரூமில் இருந்து வெளியே வந்த அவரது மகன் 

" என்னம்மா .....வட துருவமும் தென் துருவமும் ஒன்னா இணையுது. ஒண்ணுமே புரியலையே " என்று விழித்தான். 


                   *******


ஐயா இது எனது சொந்த கற்பனை என்றும் வேறு பத்திரிக்கைக்கு அனுப்பவில்லை என்று உறுதி கூறுகிறேன்.



வளர்மதி ஆசைத்தம்பி

தஞ்சாவூர்.