tamilnadu epaper

ஓய்வறியா ஓவியா

ஓய்வறியா ஓவியா


     அன்று நர்ஸ் ஓவியாவுக்கு பணி நிறைவு நாள்.அந்த ஏரியா முழுவதும் ஓவியா மிகவும் பிரபலம். அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளைக் கண்டாலே எரிந்து விழுந்து மரியாதை இல்லாமல் பேசி கடனுக்கு தங்கள் பணியை செய்பவர்கள் மத்தியில் குறிஞ்சி மலராய் பூத்தவள் ஓவியா. புன்னகை வழியும் முகத்தோடு நோயாளிகளிடம் அவள் பேசும் பேச்சிலேயே அவர்களின் பாதி வியாதி குணமாகிவிடும் . நர்ஸ்

பணியையே உயிரினும் மேலாய் நேசித்ததால்

வந்த பதவி உயர்வுகளையெல்லாம் கூட வேண்டாம் என்று மறுத்தவள்.


      அவள் ஆஸ்பத்திரியில் நுழைகிறாள் என்றால்

மிகச் சரியாக காலை 7:00 மணி என்று அர்த்தம். பல பிரசவ கேஸ்களை அவர்களின் வீட்டுக்கே சென்று சுகப்பிரசவமாக டெலிவரி பார்த்தவள் என்பதால் அவர்களுக்கெல்லாம் இவள் தெய்வமாகவே விளங்கினாள். டெலிவரி பார்த்து முடிந்ததும் குழந்தையைக் கையில் எடுத்துக் கொஞ்சுவதில் அப்படி ஒரு அலாதி இன்பம் அவளுக்கு.


    "இவ்வளவு வயதாகியும் ஏன் திருமணமே செய்து கொள்ளவில்லை?" என்று யாராவது கேட்டால் "எனக்குத்தான் ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டதே !"என்று அவர்களை திகைக்க வைத்து பின் "நான் என் நர்ஸ் தொழிலைத்தான் ஏற்கனவே திருமணம் செய்து கொண்டு விட்டேனே" என்று கள்ளம் கபடம் இல்லாமல் சிரிப்பாள்.


    இதோ சென்ற மாத

கடைசி நாள். அன்று மருத்துவத் துறையே

திரண்டு வந்து பணி நிறைவு பாராட்டு விழா நடத்தியது. சும்மா பெயருக்குப் பாராட்டாமல் அனைவருமே மனம் திறந்து பாராட்டினார்கள் என்பது அவர்களின் பேச்சிலேயே தெரிந்தது. சிலர் கண் கலங்கவும் செய்தார்கள் .நெஞ்சம் நெகிழ்ந்து போய் அமர்ந்திருந்தாள்

ஓவியா.நினைவுப் பரிசெல்லாம் கொடுத்து முடிந்ததும் "நீங்கள் ரிட்டயர் ஆகிப்போவது 

எங்களுக்கு பேரிழப்புத் தான் .இருந்தாலும் என்ன செய்வது? இனிமேலாவது நீங்கள் ஓய்வெடுங்கள் "என்று மனமே இல்லாமல் 

வழியனுப்பி வைத்தனர் . ஹாஸ்பிடலில் இருந்து வரும் வழியில் அந்த ஊர்க்காரர்களும் வரிசையாக இருபுறமும் நின்று அவளைப் பாராட்டி விடை கொடுத்தனர்.


    அடுத்த நாள் காலை. அதே வெள்ளுடை தேவதையாய் பணிக்கு கிளம்பினாள் ஓவியா.

அந்தத் தெருவாசிகள்

'என்ன இது ஓய்வு பெற்றதையே இவள் மறந்து விட்டாளா?' என்று தங்களுக்குள்ளே பேசிக் கொண்டனர் .ஒரு சிலர் கேட்கவே கேட்டுவிட்டனர்.


     அவளோ புன்னகைத்தபடியே

"போன வாரமே டவுன்ல இருக்குற சுகம் மருத்துவமனை யில் நர்ஸ் வேலைக்கு இன்டர்வியூ அட்டென்ட் பண்ணி செலக்ட் ஆயிட்டேன் .இன்னைல இருந்து அங்க ஜாயின் பண்ணப் போறேன். நம்மளால எல்லாம் ஓய்ந்து ஒரு இடத்துல உட்கார முடியாது. என்னைக்கும் நான் உங்களோட சேவையில் தான் இருப்பேன்" என்று பதில் அளித்துவிட்டு கம்பீரத்துடன் சென்ற 

ஓவியாவை மெய்சிலிர்க்க பார்த்தனர் அனைவரும்.



அனுப்புதல்:

ப. கோபிபச்சமுத்து, எம்.ஏ.,பி.எட்.,எம்.ஃபில்.,

பாரதியார் நகர்,

கிருஷ்ணகிரி-1