முகில் தினகரனின் 'தங்கராசுவின் தங்க மனசு' சிறுகதையை படித்து, தங்கராசுவின் புது சிந்தனையை அறிந்து ஆச்சரியப்பட்டேன். தன்னை மட்டும் நினைக்காமல், தனது அடுத்தடுத்த தலைமுறைகளைப் பற்றியும் சிந்தித்து முடிவு எடுத்த அவனது அறிவு பாராட்டதக்கதுதான். தங்கராசுவின் குடும்பம் 'உயர்ந்து' வாழ வாழ்த்துகிறேன்!
பிரபாகர்சுப்பையாவின் 'மனிதன் என்பவன் தெய்வமாகலாம்' என்ற சிறுகதை, ஒரு அரசு வங்கி அதிகாரி மக்களுக்கு எப்படியெல்லாம் சேவை செய்ய வேண்டும் என்பதை உணர்த்தியது. இப்போதெல்லாம் ஒரு சிறு வேலையாக அரசு வங்கிக்கு சென்றாலே அரைநாள் ஆகிவிடுகிறது. மக்களைப் பற்றி கவலைப்படாமல், ஆமைவேகத்தில் செயல்படும் அரசு வங்கி ஊழியர்கள் அனைவரும், இந்த வங்கி மேனேஜர் விக்னேஷ் போல் செயல்பட்டால் நன்றாக இருக்கும்!
க.அன்பழகனின் 'வாழ்ந்தே தீருவோம்' தொடரில் சரவணனும் வள்ளியம்மையும் சென்னை வந்துவிட்ட பிறகும், அடுத்து என்ன நடக்குமோ என்று ஒரு பயம் இருந்துக்கொண்டேதான் இருக்கிறது. தஞ்சம் தருகிறேன் என்று சொல்லியிருந்த ஆனந்த்தும், அவனோட அம்மா இறந்து போயிட்டாரென்று சாவியையும் கொடுக்காமல் ஊருக்கு போய் விட்டதும் கொஞ்சம் திகைப்பாக இருக்கிறது. சென்னையில் முதல்நாள் முதல் வேலையே பூட்டை உடைக்கும் வேலையாயென்று மனதுக்கு கொஞ்சம் நெருடலாக இருக்கிறது.
புகழ்பெற்ற தமிழறிஞர்களில் ஒருவரான தெ.போ.மீனாட்சிசுந்தரம் பன்மொழிப்புலவர் என்று அழைக்கப்படுகிறவர் என்று தெரியும். ஆனாலும் அவர் சமஸ்கிருதம், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, பிரெஞ்சு, ஜெர்மன் மொழிகளை அறிந்திருந்தார் என்பது ஆச்சரியப்பட வைத்தது. ஆரம்பத்தில் வழக்கறிஞராகவும், சென்னை மாநகராட்சியின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினராகவும் பணியாற்றிய இவர், பிறகு மொழியியல் ஆர்வம் கொண்டு பட்டங்கள் பெற்றுப் பல கால்லூரிகளில் பேராசிரியராகவும், பின்னர் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தராகவும் 1966 முதல் 1971 வரை பணியாற்றினார். தமிழக அரசின் கலைமாமணி விருதையும், இந்திய அரசின் பத்மபூசண் விருதையும் பெற்றார் என்ற இவரது சாதனை வாழ்க்கை வரலாறு பிரமிப்பை தந்தது.
புதுக்கவிதை பகுதியில் 'காதல் அல்லது காதல்' கவிதையில், 'எதில் தொடங்கினாலும் காதலில் முடிப்பது உன் வழக்கம்! எதில் தொடங்கினாலும் முத்தத்தில் முடிப்பது என் வழக்கம்' என்கிற இந்த கவிஞர் முத்து ஆனந்த், தான் ஒரு முத்த ஆனந்த் என்பதை சொல்லாமல் சொல்லியிருக்கிறார்!
இப்போது நான் உட்பட பலருக்கு உடல் எடையை குறைப்பதுதான் பெரிய பிரச்சனையாக இருக்கிறது.
உடல் எடையை குறைப்பதற்கு தினமும் கீரை சாப்பிடுங்கள், புரோதங்கள் நிறைந்த ஸ்நாக்ஸ், சாப்பிடும் முன் தண்ணீர் குடிப்பது ஆகியவற்றுடன் உடற்பயிற்சியும் அவசியம்' என்று குறிப்பிட்டிருப்பது பயன் தரக்கூடிய தகவலாக இருக்கிறது. பல்சுவை நிறைந்த பயனுள்ள நாளிதழ் என்றால் அது நம்ம தமிழ்நாடு இ. பேப்பர்தான்!
-சின்னஞ்சிறுகோபு,
சிகாகோ.