இளநீர் குடிப்பது ஆரோக்கியத்திற்கு நல்லது என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான்! ஆனால் இளநீர் குடிப்பதால் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளாயென்று வியப்பில் ஆழ்த்திவிட்டது தமிழ்நாடு இ.பேப்பர். முகப்பருக்கள் வருவதையும் இளநீர் தடுக்கும். குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கும் பெரிதும் உதவும் போன்ற ஏராளமான தகவல்கள் எல்லோருக்கும் பயன் அளிக்கும் அற்புதமாகும்.
சீர்காழி ஆர். சீதாராமனின் 'மணல் வீடு' என்ற சிறுகதை ஒரு ஏழை சிறுவன், ஒரு பணக்கார சிறுவன் இருவர்களின் சிந்தனைகளையும், எதிர்கால நல்ல நம்பிக்கைகளையும் உணர்த்தியது. அந்த ஏழைச்சிறுவனின் நம்பிக்கையும் ஒருநாள் உண்மையாகும். இது ஒரு சிறந்த சிறுகதையாக இதயத்தில் நிற்கிறது.
தமிழ்ச்செம்மல் நன்னிலம் இளங்கோவனின் 'விழிப்புணர்வு' என்ற சிறுகதை இப்போதுள்ள கிராமிய சூழ்நிலைகளை, நாட்டு நடப்பை, மக்களின் மனநிலைகளை நன்கு உணர்த்தியது. தமிழ்நாட்டில் 12000 கிராமங்கள் இருக்கின்றன என்ற புள்ளிவிபரம் இந்த எழுத்தாளரின் தகவல் சொல்லும் ஆர்வத்தைக் காட்டுகிறது. மக்களுக்கு விழிப்புணர்வு வந்தால்தான் நாடு உயரும் என்பதை இந்த சிறுகதை நமக்கு தெளிவாக உணர்த்துகிறது.
சசிகலா திருமாலின் 'சப்தமிடும் மௌனங்கள்' தொடர்கதை குதூகலமாக போகிறது. தயங்கி தயங்கி யோசித்த இலக்கியா, தீபக்கிடம் காதலை சொல்லியவிதம் ரம்யமாக இருக்கிறது. அருமையான காதல் கதை!
'பங்குனி மாதம் உத்திர நட்சத்திரம் வரும் நாள் பங்குனி உத்திரம்' என்பது மட்டும்தான் எனக்குத்தெரியும். எம்.ராதாகிருஷ்ணன் 'பங்குனி உத்திரம்' என்ற கட்டுரை மூலம் அதன் முழு புராண வரலாற்றையும் அழகாக கூறி அசத்திவிட்டார். இந்த கட்டுரை என் மனதை வெகுவாக கவர்ந்தது.
தினம் ஒரு தலைவர்கள் வரிசையில் 'பரமசிவ சுப்பராயன் வரலாறு' அவரது செல்வம், கல்வி, சிறந்த ஆளுமைத்திறன் எல்லாவற்றையும் உணர்த்தியது. அதோடு அந்த கட்டுரை அந்தகால நாட்டின் அரசியல் நிலமைகளையும் தெளிவாக சொல்லியது. இவரைப்போலவே இவரது மனைவி, மகன்களும் அரசியலில் மிகச் செல்வாக்கான நிலையில் இருந்தது பாராட்டதக்கது.
பூஞ்சோலையில் புகுந்த தேன்வண்டுபோல புதுக்கவிதை பகுதியில் புகுந்து வெளியே வரும்போது மனம் மகிழ்ச்சியில் கிறுகிறுத்துதான்
வரவேண்டியிருக்கிறது. விதம் விதமான கவிதைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு அழகு மலர்!
படிப்பறிவு மட்டும் போதாது.படிப்பறிவை விட அனுபவ அறிவே முக்கியம் என்பதை 'காமராஜரின்திறமை' என்ற தகவல் உணர்த்தியது. அதனால்தான் தன்னலமற்ற அவரது ஆட்சிகாலத்தில் நாடு பல நல்ல மாற்றங்களுக்கு ஆரம்ப வழியானது!
சும்மா சொல்லக்கூடாது; தமிழ்நாடு இ.பேப்பர் எல்லாவகையிலும் தரமாக இருப்பதுடன் சுவையாகவும் இருக்கிறது!
-சின்னஞ்சிறுகோபு,
சிகாகோ.