tamilnadu epaper

வாசகர் கடிதம் (சின்னஞ்சிறுகோபு)-08.05.25

வாசகர் கடிதம் (சின்னஞ்சிறுகோபு)-08.05.25


  நலம் தரும் மருத்துவம் பகுதியில் புடலங்காயில் பொரியல் செய்து சாப்பிட்டால் நரம்புகளுக்கு புத்துணர்வு கிடைக்கும். நினைவாற்றல் அதிகரிக்கும் என்று ஆரம்பித்து, புடலங்காயின் மருத்துவக் குணங்களை பட்டியலிட்டிருந்த விதம் ஆச்சரியமாக இருந்ததுடன், இனி உணவில் அவ்வப்போது சேர்த்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தையும் ஏற்படுத்தியது.


  கோடை விடுமுறையிலும் குழந்தைகளை அந்த கிளாஸ், இந்த கிளாஸ் என்று அனுப்பிக்கொண்டிருந்தால் அவர்களுக்கு ஒரு வெறுப்புதான் ஏற்படும். அவர்களுக்கு வீட்டைச் சுத்தமா வச்சுக்கிறது, சமையல் செய்யறது, பொது இடங்களில் எப்படி நடந்துக்கொள்வது போன்ற வாழ்க்கைகக்கு உதவக்கூடிய நடைமுறை பழக்க வழக்கங்களை சொல்லித் தரலாம்' என்ற நன்னிலம் இளங்கோவனின் 'வாழ்க்கைப் பாடம்' சிறுகதை எல்லோருக்கும் உதவும் நல்ல பாடமாகும்.


  தமிழ்நிலாவின் 'வரவும் செலவும்' சிறுகதையின், மனிதர்களின் அருமை புரியும்படி குழந்தைகளை வளர்க்க வேண்டும்' என்ற கருத்து மிகவும் நல்ல கருத்தாகும்.


  கா.ந. கல்யாணசுந்தரத்தின் அமெரிக்கபயணம் கட்டுரையை நானும் அமெரிக்காவிலிருந்தே படித்தேன். அமெரிக்க நாட்டின் பிரான்சன் நகரத்தைப்பற்றி, அங்குள்ள குகைகளைப் பற்றியெல்லாம் நிறைய புகைப்படங்களுடன் எழுதியிருந்த விதம் மனதை கொள்ளைக் கொண்டது.


  தினம் ஒரு தலைவர்கள் வரிசையில் தமிழகத்தைச் சேர்ந்த மூவலூர் ராமாமிர்தம் என்ற பெண்மணியை பற்றி படித்து வியந்துப் போனேன். அந்த காலத்திலேயே தமிழகத்தில் இப்படிப்பட்ட சமூக சீர்திருத்தவாதியாக ஒரு பெண் இருந்திருக்கிறார் என்பது பெருமைக்குரிய தகவலாக இருந்தது.


  ' முடங்கிக் கிடந்தால் வாழ்வில்லை. தடங்கள் பார்த்தால் மகிழ்ச்சியில்லை' என்ற சுதந்திரத்தின் மகிழ்மையை உணர்த்திய தமிழ்நிலாவின் 'வானப் பறவை' என்ற கூண்டுப்பறவையை பற்றிய கவிதை என் மனதில் இன்னும் சுற்றி சுழன்றுக் கொண்டிருக்கிறது.


  ஆப்ரகாம் லிங்கன் தன்னுடைய பள்ளி ஆசிரியருக்கு எழுதியகடிதம் என்ற சிவ.முத்து லட்சுமணனின் சிறப்பான தகவல், மாணவர்கள் வாழ்க்கையில் எவற்றையெல்லாம் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதை உணர்த்தியது. இது மிகவும் பயனுள்ள தகவலாகும்.


-சின்னஞ்சிறுகோபு,

சிகாகோ.