tamilnadu epaper

வாசகர் கடிதம் (சின்னஞ்சிறுகோபு)-13.05.25

வாசகர் கடிதம் (சின்னஞ்சிறுகோபு)-13.05.25



  'உனக்கும் கீழே பலர் உண்டு' என்ற வளர்மதி ஆசைத்தம்பியின் சிறுகதை மனதிற்கு ஆறுதல் தரும் சிந்தனைக்குரிய சிறந்த சிறுகதை. நமக்கு எவ்வளவோ கஷ்டங்கள் வரலாம். இதைவிட அதிக கஷ்டங்களை படுபவர்களும் இருக்கிறார்கள் என்பதை உணர்ந்தாலே, நமது கஷ்டம் சிறிதுதான் என்பதை உணர்ந்து மீண்டு எழமுடியும். கவலைகளை உதறித் தள்ளி தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் இதைப்போன்ற கதைகள்தான் இன்றைய சமுதாயத்திற்கு இப்போது தேவையாகும்.


  சசிகலா திருமாலின் 'சப்தமிடும் மௌனங்கள்...' தொடர்கதையை படித்து, என்ன ரகு இப்படியெல்லாம் செய்ய ஆரம்பித்துவிட்டான் என்று திடுக்கிட்டுப் போனேன். எப்படியோ இலக்கியா ரகுவை பழைய மனநிலைக்கே கொண்டு வந்துவிட்டாள் என்பது மகிழ்ச்சியை தருகிறது.


  கூறைநாடு புனுகீஸ்வரர் சிவன் கோவிலின் சிறப்பு கட்டுரையை படித்தேன். நான் மயிலாடுதுறையில் பத்து வருடங்கள் வசித்தவன் என்ற முறையில் அந்த கோவிலைப்பற்றி அறிந்திருக்கிறேன். ஆனாலும் இந்த கட்டுரையாசிரியர் இந்த கோவிலைப்பற்றி சொன்னதைவிட அந்த கோவிலின் ஸ்தல மரமான பவளமல்லிகை மரத்தைப்பற்றியும், அதன் பூவை பற்றியும் சொன்னதுதான் அதிகம். அதுவும் மிகவும் சுவாரஷ்யமாகதான் இருந்தது. பவள மல்லிகையும், பாரிஜாதமும் ஒரே பூ என்பதே எனக்கு இப்போதுதான் தெரியும். இந்த கட்டுரையை படித்து முடித்தபோது என் நினைவில் புனுகு வாசனை எதுவும் வரவில்லை. ஆனால் பவளமல்லிகை வாசனை வந்தது!


  லட்சுமி கிருஷ்ணமூர்த்தி அவர்களை பற்றிய கட்டுரையை படித்தபோது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அதற்கு காரணம் இவர் பதிப்பித்த பல புத்தகங்களை 1972-ம் வருட வாக்கில் நான் மாணவனாக இருந்த காலத்தில் எங்கள் ஊர் நூலகத்தில் படித்திருக்கிறேன். அதோடு இவர் பொறுப்பில் நூலகம் மாதப் பத்திரிகை வெளிவந்தபோது, அந்த பத்திரிகையின் 1972-ம் வருட ஆகஸ்ட் மாத இதழில் நூலகம் சம்பந்தமாக நான் வரைந்து அனுப்பிய கார்ட்டூன் பிரசுரமாகியது. அது என்னுடைய முதல் கார்ட்டூன் என்பதால் இந்த விபரமெல்லாம் இன்னும் என் மனதில் பசுமையாக இருக்கிறது. லட்சுமி கிருஷ்ணமூர்த்தியின் அரசியல் சேவையை விட, அவர் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு செய்த சேவை மிகப்பெரியது.


  புதுக்கவிதை பகுதியில் 'குப்பைத் தொட்டியில் அன்னையர் தினம்' என்ற கவிதையை படிக்கும்போதே வருத்தமாக இருந்தது. பதை பதைக்க வைக்கும் சோகங்கள் மிகுந்த ஒரு செயலை, கவிஞர் ச.ஜெனிட்டா எவ்வளவு எளிமையாக நகைச்சுவையாக சொல்லியிருக்கிறார். இந்த சோகக்கவிதையின் நடையும் சொல்லியிருக்கும் விதமும் பாராட்டும்படி இருக்கிறது.


  எமலோகத்தில் பாவ புண்ணியங்களை கணக்கெடுக்கும் கணக்குப் பிள்ளையாக பணி புரியும் சித்ரகுப்தனுக்கு திருவண்ணாமலை, திருப்பூர் சின்னாண்டி பாளையம், தேனி மாவட்டம் சின்னமனூர், சிதம்பரம் போன்ற ஊர்களில் கோயில் இருக்கிறது என்பது போன்ற பல அரிய தகவல்களை தந்த 'சித்ரா பௌர்ணமி' என்ற க.ரவீந்திரனின் கட்டுரை சிறப்பாக இருந்தது. 


-சின்னஞ்சிறுகோபு,

  சிகாகோ.