நல. ஞானபண்டிதனின் 'தாலி' என்ற சிறுகதையை படித்தேன். இது தமிழர்களின் பண்பாடு, தெய்வநம்பிக்கை, பதிபக்தியை உணர்த்தும் சிறுகதையாக இருந்தது.
பிரபாகர்சுப்பையாவின் 'கனவு இல்லம்' என்ற சிறுகதை, பல வாடகை வீடுகளில் குடியிருந்து அல்லல்கள் பல பட்ட சுந்தரின் கதை நம்மைப்போன்ற பலரின் கதையாக இருந்தது. ஆனாலும் சுந்தர் கடைசியில் சொந்தவீடு கட்டி வாடகைக்கு விட்டபோது, தன்னைப்போல அவர்களும் கஷ்டப்படக்கூடாது என்று நினைத்த அவனது நியாயமான நல்ல மனது போற்றவேண்டிய அற்புதமாகும்.
விஜி சம்பத் அமெரிக்க பயணம் கட்டுரையில் அங்கே இந்தியாவில் சேலத்திலிருந்து புறப்பட்டு, இங்கே அமெரிக்காவில் டெக்சாஸில் உள்ள ப்ளவர் மவுண்ட் என்ற இடத்திற்கு வரும்வரையும் நிகழ்ந்த புதுபுது அனுபவங்களை சுவையாக விவரித்திருந்தார். அவரது டெக்சாஸ் அனுபவங்களை நான் சிகாகோவிலிருந்து படிக்கும்போது எனக்கும் என் மனைவிக்கும் நாங்கள் சென்னையிலிருந்து சிகாகோ புறப்பட்டு வந்த நினைவுகள் மனக்கண்முன் வந்துப் போயிற்று.
ஆன்மிக ரீதியில் வைகாசி மாதத்தின் சிறப்புகளை சொல்லியிருந்த வனஜா நாகராஜனின் கட்டுரை என் மனதை மிகவும் கவர்ந்தது. இதைப்போல் ஒவ்வொரு மாதமும் ஆனி, ஆடி, ஆவணியென்று ஒவ்வொரு தமிழ் மாதத்தின் பெருமையை சொல்லும் கட்டுரைகளை தமிழ்நாடு இ.பேப்பர் வெளியிட வேண்டும்.
தினம் ஒரு தலைவர்கள் வரிசையில் நாடக நடிகர் விஸ்வநாத தாஸின் வரலாறு படிக்க சுவாரஷ்யம் மிகுந்ததாக இருந்தது. அதுவும் அவர் நாடகத்தில் நடித்துக்கொண்டிருந்தபோது, மயில் மேல் ஆமர்ந்து தேசபக்தி பாடல்களைப் பாடிக்கொண்டிருக்கும்பொழுதே அவரின் உயிர் பிரிந்தது ஆச்சரியத்தையும் திகைப்பையும் ஏற்படுத்தியது!
நான் தமிழ்நாடு இ.பேப்பரில் ஒரு எழுத்தையும் விடாமல் படிக்கும் பழக்கம் உள்ள ஆர்வமான வாசகன். அதனால் நூல் விமர்சனத்தையும் படித்தேன். பழமொழிக் கதைகள் என்ற புத்தகத்தில் 13 சிறுகதைகளை 13 பெண்கள் சேர்ந்து எழுதியிருக்கிறார்கள் என்பதை படித்தபோது ஆச்சரியமாக இருந்தது. இப்போதெல்லாம் புத்தக உலகில் எவ்வளவோ புதுமைகள் நடக்கிறது!
நடேஷ் கன்னாவின் 'புகழ்போதை' என்ற ராமாயண கிளைக்கதையை படித்தேன். இந்த கதை இதுவரை நான் அறியாதது. புகழ்போதைக்கு ஆளாகக்கூடாது என்பதை உணர்த்திய இந்தகதை எல்லோருடைய மனதிலும் நின்று நிலைக்க வேண்டிய ஒன்றாகும்.
-சின்னஞ்சிறுகோபு,
சிகாகோ.