tamilnadu epaper

வாசகர் கடிதம் (வெ.ஆசைத்தம்பி)-03.05.25

வாசகர் கடிதம் (வெ.ஆசைத்தம்பி)-03.05.25


அதிமுக செயற்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. திமுகவை வீழ்த்துவதற்கே மெகா கூட்டணி என்று கூறியிருக்கிறார்கள்.

அவர்கள் நிறைவேற்றி இருக்கும் தீர்மானங்களில் ஒன்று கூட மக்களை உசுப்பி விடக் கூடியதாக இல்லை.


ஒரு கட்சி செயற்குழுவை கூட்டினால் ஏதாவது தீர்மானம் போட வேண்டும் என்ற சம்பிரதாயத்துக்காக போடப்பட்டவை போல தெரிகிறது. மக்களைப் பொருத்தவரை ஊழல் ஒரு பொருட்டே இல்லை. ஆளுங்கட்சி ஊழல் நிறைய செய்தால்தான் நமக்கு இலவசங்கள் தாராளமாக கிடைக்கும் என்ற ஒருவித கணக்கை பெரும்பாலான மக்கள் போடுகிறார்கள்.


2026 இல் எடப்பாடி பழனிச்சாமியை தமிழக முதல்வராக மாற்றுவோம்

என்று ஒரு தீர்மானம் இருக்கிறது. அதை நினைத்தால் தான் சிரிப்பு வருகிறது. பாஜகவை பற்றி சரியான புரிதல் அதிமுகவுக்கு இல்லையோ என்று எண்ணத் தோன்றுகிறது. 


பாஜகவினர் ஒரு மாநிலத்தில் நான்கு இடங்களில் ஜெயித்தால் கூட மற்ற கட்சிகளில் இருந்து ஜெயித்தவர்களை ஐபிஎல் விளையாட்டைப் போல் தங்கள் கட்சியில் சேர்த்து ஆட்சி அமைக்கும் வல்லமை படைத்தவர்கள்.


தலைக்கு மேல் ஊழல் கத்தி ஊசலாடிக் கொண்டிருக்கும் அரசியல்வாதிகள் கூட்டம் கூட்டமாக தங்களை காப்பாற்றிக் கொள்வதற்காக பாஜகவில் இணையும் வாய்ப்பை மறுப்பதற்கு இல்லை.

ஏனென்றால் இன்றைய அரசியல்வாதிகள் பலரும் மடியில் தாங்க முடியாத கனத்துடன் தான் உலவிக் கொண்டிருக்கிறார்கள்.


மாநிலங்களின் ஆட்சியை கைப்பற்றும் பாஜகவின் டெக்னிக் இது தான்.


உக்ரைனுக்கு அளித்து வந்த ஆயுத உதவியை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நிறுத்தி இருந்தார். இப்போது திடீரென்று ஆயுத உதவி செய்வோம் என்று கூறுகிறார். உக்ரைன் நாட்டின் கனிம வளங்களை தனது நாட்டிற்கு மடை மாற்றுவதற்காக இந்த பண்டமாற்று வியாபாரம் செய்கிறார். ட்ரம்ப்பின் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று வாய்க்கு வந்தபடி சித்தம் போக்கு சிவன் போக்கு என்று ஆட்சி நடத்தும் செயலுக்கு இது ஒரு உதாரணம்.


 -வெ.ஆசைத்தம்பி 

தஞ்சாவூர்