அமர்ந்து கதைத்த திண்ணைகள் எல்லாம்
ஆளுயர மதில்களால் அடைபட்டுக் கிடக்கின்றன..
பூட்டியே கிடக்கின்றன வாசல் கதவுகள்
திறக்காத மனித மனங்களின் அடையாளமாய்..
முகப்பூச்சு இல்லா வாழ்த்துக்களும் கூட
முடிந்து போகின்றன அலைபேசி செய்தியோடு..
முகம் மலர்ந்த உபசரிப்புகள் எல்லாம்
நினைவுப் பெட்டகங்களில் மட்டும் பொக்கிஷமாக..
குறுகிப் போன மனித மனங்களோடு
முட்டி மோதி தோற்றுப் போய்
வாசல் வரை கூட எட்டிப் பார்க்காமல்
திரும்பிச் சென்று விடுகின்றன
இன்றைய விருந்தோம்பல்கள்..