பிரபாகர்சுப்பையாவின் 'பள்ளிக்கூடம் போகலாமா' என்ற சிறுகதையை படித்தபோது, படிப்பதைவிட மாடு மேய்ப்பது கடினமான வேலை என்பது புரிந்தது. கொஞ்சம் சிரிப்பு வந்தாலும் இது உண்மைதான் என்பது நன்றாகவே புரிந்தது. இந்த சிறுகதையை பள்ளிக்கூட ஆசிரியர்கள் படித்தால், அப்புறம் யாரையும் பார்த்து "நீ மாடு மேய்க்கத்தான் லாயக்கு!" என்று திட்ட மாட்டார்கள்!
'தாய் கிழவி தாய் கிழவி...' என்ற சிறுகதை குபீர் சிரிப்பு ரகம்! பாலசந்தரின் இந்த கதையை படித்து நான் வாய்விட்டு சிரித்துவிட்டேன். வெற்றிலை பாக்கு இடிக்கும் சிறு உரல் உலக்கையை காணவில்லையென்று அந்த கிழவி செய்த அலம்பலை நினைத்தால் இப்போதும் சிரிப்பு வருகிறது!
நிரஞ்சனாவின் 'யாதுமாகி நின்றவள்!' தொடர்கதை ஒரே மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைப்பது உற்சாகமாக இருக்கிறது. சொல்லப்போனால் இந்தவாரத் தொடர் யாழினிக்கு பிடித்த மஸ்கொத் அல்வா போல, எனக்கும் இனித்தது!
திருநாவுக்கரசர் என்றதுமே அவர் உருவம் நமது நினைவில் அவர் கையில் வைத்திருக்கும் 'உழவாரப் படை' என்ற கருவியுடன்தான் நினைவுக்கு வரும். கோயில்களை சுத்தம் செய்துக்கொண்டே இருந்தால்தான் அது பாழடையாமல் இருக்கும். அதுக்கு உழவாரப்பணி மிக முக்கியம். அதனால் உழவாரப்பணியைவிடச் சிறந்த புண்ணியம் வேறில்லை என்பது உண்மைதான்!
செக்கிழுத்த செம்மல் என்று புகழப்படும் ' வ.உ. சி' யென்னும் வ.உ. சிதம்பரம்பிள்ளை அவர்களை தமிழகத்தில் அறியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். எத்தனையோ புத்தகங்கள், நாடகங்கள், சினிமாயென்று இவரது வாழ்க்கையை பலரும் படம்பிடித்துக் காட்டியிருக்கிறார்கள். தமிழ்நாடு இ.பேப்பரில் வெளிவந்த இவரைப்பற்றிய சுருக்கமான கட்டுரையும் சிறப்பாக இருந்தது.
இப்போதும் 'சிறகடிக்கும் ஆசை' என்ற ஒரு தொலைக்காட்சி தொடரில் மூன்று பிள்ளைகளுக்கு தந்தையாக சிறப்பாக நடித்து வருகிறார் இயக்குனர் ஆர்.சுந்தரராஜன். அவரது வெற்றிகரமான திரைப்பட வாழ்க்கையை முத்து ஆனந்த் சுவையாக சொல்லியிருந்தவிதம் சிறப்பாக இருந்தது.
-சின்னஞ்சிறுகோபு,
சிகாகோ.