தொழிற்சாலையில் மதிய உணவிற்கான சங்கு ஒலித்ததும் முதல் ஆளாக வெளியேறி சைக்கிளை எடுத்துக் கொண்டு வேகமாய் வீட்டை அடைந்தான் குமார்.
அவனுக்காகக் காத்திருந்த அவன் தாய் லட்சுமி அவன் வந்ததும் வராததுமாய் உணவைப் பரிமாறினாள்.
உணவை வாயில் வைத்தவன் மறு வினாடியே கத்தினான் "ச்சை...என்ன சாம்பார் இது?... கருமம்... கருமம்... வாயில வைக்க முடியலை!" சொல்லியவாறே சாம்பார் சாதத்தை ஒதுக்கி வைத்து விட்டு, சாதத்தில் ரசத்தைப் போட்டுப் பிசைந்தான்.
தாயை முறைத்தவாறே ரசம் சாதத்தை விழுங்கியவன், "வ்வேய்ய்ய்" என்று வாந்தி எடுப்பவன் போல் அபிநயத்து விட்டு, "இந்த சாப்பாட்டைச் சாப்பிடுவதை விட பட்டினியே மேல்!" என்று சொல்லி விட்டு, வேகமாய் எழுந்து கை கழுவி விட்டு வந்தவன்,
'ஏம்மா... முந்தியெல்லாம் அருமையா சமைப்பே இல்ல?... இப்ப ஏம்மா இப்படி பழி வாங்குற?" கேட்டான்.
"வயசாயிடுச்சு இல்லடா... அதனால தாண்டா" என்றாள் லட்சுமி.
அடுத்த நாள்... அதற்கடுத்த நாள்... என்று தொடர்ந்து பத்து நாட்கள் அம்மாவின் சமையல் கொடுமையை அனுபவித்த குமார் ஒரு கட்டத்தில் அதைத் தாங்க முடியாமல், "அம்மா... நாளைக்கு ஞாயிற்றுக்கிழமை.... எனக்கு லீவு.... நான் காலையில நேரத்தில் எந்திரிச்சு... பெருந்துறை வரை போயிட்டு வர்றேன்!" என்றான்.
"எங்கே?... உன் மாமனார் வீட்டுக்கா?"
"ஆமாம்... என் கூடச் சண்டை போட்டுட்டுப் போய் அப்பன் வீட்ல உட்கார்ந்திட்டிருக்காளே.... என் மனைவி ராதா.... அவகிட்டச் சமாதானம் பேசி... எப்படியாவது திரும்பக் கூட்டிட்டு வரப் போறேன்"
அதைக் கேட்டு உள்ளுக்குள் மகிழ்ந்த லட்சுமி, "சரி...சரி... அவ வந்ததுக்கப்புறம் எனக்கு இங்க என்ன வேலை? அவ வந்ததும் நான் கிளம்புறேன்" என்றாள்.
அதிகாலையில் எழுந்து, பாத்ரூமிற்குள் சென்று, அவசர அவசரமாய்க் குளிக்க ஆரம்பித்தான் குமார். குளிக்கும் போதும் மனசுக்குள் "எப்படியாவது சமாதானம் பேசி ராதாவைத் திரும்பக் கூட்டிட்டு வந்தே ஆகணும்!" தீர்மானித்துக் கொண்டான்.
அப்போது பாத்ரூமிற்குள் அவன் இருப்பது தெரியாமல் பக்கத்து வீட்டுக்காரியிடம் லட்சுமி சொல்லிக் கொண்டிருந்தாள்.
"பங்கஜம்.... என்னோட திட்டம் பலிச்சிடுச்சு... பத்து நாளா என் மகனுக்கு படு கண்றாவியாச் சமைச்சு போட்டேன்... அதன் எதிரொலியா இன்னிக்கு அவன் பெருந்துறை கிளம்பிட்டு இருக்கிறான்... பொண்டாட்டிய திரும்ப கூட்டிட்டு வர"
"அப்படியா?... பரவாயில்லை!" என்றாள் பக்கத்து வீட்டுக்காரி.
"எப்படியோ அதுக ரெண்டும் ஒண்ணு சேர்ந்து சந்தோஷமாய்ப் பிழைக்கணும்.... அதுக்காகத்தான் நான் வேணும்னே மோசமாச் சமைச்சேன்... மகன் கொடுத்த வசைகளையெல்லாம் வாங்கிக் கட்டிக்கிட்டேன்" என்றாள் லட்சுமி சோகமாய்.
பாத்ரூமிலிருந்த குமார் நெகிழ்ந்து போனான். "அம்மா... உன்னோட ஒவ்வொரு செய்கையிலுமே ஒரு அர்த்தம் இருக்கும்!... அது அடுத்தவங்களுக்கு நன்மையாகத்தான் இருக்கும்!"னு அப்பா சாகறதுக்கு முன்னாடி என்கிட்ட சொல்லிட்டுத் தான் போனார்... அது சத்தியமான உண்மைன்னு நான் இப்ப புரிஞ்சுகிட்டேன்மா"
-முகில் தினகரன்,
கோயமுத்தூர்