தக்காளி, வெங்காயம், இஞ்சி, பூண்டு இதெல்லாம் எதுவுமே சேர்க்காமல் வெறும் மசாலா பொடிகளை மட்டுமே கொட்டி செய்த சிக்கன், மட்டன் குழம்பு சாப்பிட்டுவிட்டு விழா மேடை முன்பு போடப்பட்டிருந்த சேர்களில் ஒன்றில் அமர்ந்திருந்தேன். பல்லிடுக்கில் அகப்பட்டிருந்த கறித் துணுக்குகளை நாக்கு கொண்டே விடுவிக்க பிரயத்தனப்பட்டுக்கொண்டிருந்தேன்.
விஷேச வீட்டுக்காரர்கள் மட்டுமே பரவலாக அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒழுங்கற்று சிதறியிருந்த சேர்களில் அமர்ந்திருந்தார்கள். விழாவில் பங்கெடுத்தோர் கூட்டம் பெரும்பாலும் களைந்து போயிருந்தது.
விழா ஏற்பாட்டாளர்களில் ஒருவரான பெரியவர் ஒருவர் என்னருகில் வந்து அமர்ந்துகொண்டு பேச்சுக்கொடுத்ததில் எங்கள் பேச்சு வெவ்வேறு தளங்களுக்கு இடம்மாறிக்கொண்டேயிருந்து கடைசியில் சாப்பாடு விசயத்தில் வந்து நின்றது.
"சாப்டீங்களா சாப்பாடு எப்படி?" என்றார். நான் நல்லாயில்லை என்ற உண்மையைச் சொன்னால் வருந்துவாரோ என்ற எண்ணத்தில் "ம் நல்லா பண்ணியிருந்தாங்க" என்றேன்.
"சமைச்சவங்க ரொம்பப் பிஸி. ஆள பிடிக்கவே முடியாது. ஏதோ எங்க அதிர்ஷ்டம் முன்கூட்டியே புக் பண்ணியதால வாச்சுக்கிட்டாங்க..." என்றார். நான் ஒன்றும் பேசாமல் தலையாட்டி வைத்தேன்.
மாமீச ஐட்டங்களுக்கு இஞ்சி பூண்டு சேர்கலனா செரிமானப் பிரச்சனை நிச்சயம் உருவாகும். அதுவும் 40 ஐ தாண்டியவர்களுக்கு உறுதியாக வரும். அல்லது 40ல் இருப்பவர்கள் மாமீசத்தின் பக்கம் போகாமலிருப்பதுதான் நல்லது.
"கறி போதுமான அளவுக்கு வச்சாங்களா, கரண்டிக்கு அஞ்சு பீஸாவது விழும்படிதான் குழம்பு ஊத்தனும் என்று கண்டிப்பா சொல்லிட்டோம். அதே போல சிக்கன் வறுவல் வைக்கவும் சற்று பெரிய கப்பாதான் பார்த்து வாங்கினோம். அந்த கப்புல சிக்கன் பீஸ்கள் எப்படியும் பத்தாவது பிடிக்கும்" என்றார்.
அவர் சொல்லிக்கொண்டிருக்கும் போதே என்னருகில் அமர்ந்து சாப்பிட்ட என் மகளின் ஞாபகம்தான் கண் முன் நின்றது.
அவள் கறி எதையுமே தொடவில்லை. சிக்கன் ஒரு மலைபோலும் மட்டன் ஒரு மலைபோலும் அவள் இலையில் குவிக்கப்பட்டிருக்க, அவள் நடுவில் இருந்த சோற்றில் மட்டுமே கை வைத்து நோண்டிக்கொண்டிருந்தாள். சாப்பிடுறியா இல்லையா என விழிகளாலேயே நான் அதட்டியதை புரிந்து கொண்டவளாய் அவளும் விழிகளாலேயே எனக்கு எதிர்த்தாக்குதல் அனுப்பினாள். 'சமைச்சவன் மட்டும் என் கைக்கு கிடைச்சானா அவன இந்த இடத்திலேயே ரசம் வச்சிடுவேன்' என்பதாய் அவள் விழிகள் கனன்றது.
குழம்பில் மஞ்சள்தூளின் பச்சைவாசம் அப்படியே இருந்தது. மல்லிப்பொடியும் சரியாக வெந்து கொதிக்காமல் கறியோடு நர
நரத்து ஒட்டிக்கிடந்தது.
அந்தப் பெரியவரைப் பார்த்து "நீங்க சாப்டீங்களா?" என்றேன். இவர் சாப்பிட்டிருந்தால் நிச்சயம் சமையலின் லட்சனம் என்ன என்பதை புரிந்துகொண்டிருப்பார் என்ற நோக்கத்தில்தான் கேட்டேன்.
"ம்..." என்று பரிபூரணமாய் தலையாட்டினார். எனக்கு ஆச்சர்யமாய் இருந்தது. என்ன இவர் சாப்பிட்டும் சமையலின் தரம் புரியாதவராக இருக்கிறாரே என்று நினைத்துக்கொண்டிருக்கையிலேயே "என்னத்தச் சாப்பிட்டு என்னத்த கண்டோம் தம்பி. என் நாக்குச் செத்துப்போயி இருவது வருசத்துக்கு மேல ஆச்சு.எதத்தின்னாலும் மண்ணத் தின்ன மாதிரிதான் இருக்கு" என்றார்.
எனக்கு லேசாக வயிற்றைக் கலக்குவது போல பட்டது.
வேக வேகமாக மண்டபத்தின் பின்புறமிருந்த கழிப்பறை நோக்கி நகர்ந்தேன். அங்கு என்னைப்போலவே ஏற்கனவே வயிற்றை கலக்கியோர் கூட்டம் அலைமோதிக்கொண்டிருந்தது.
●
*கவியோவியத்தமிழன்,*
அய்யலூர்-624801,
திண்டுக்கல் மாவட்டம்.
••