மிருகக்காட்சி சாலைகள் என்றால், நமக்கு சட்டென நினைவுக்கு வருவது மைசூரின் சாமராஜேந்திர மிருகக்காட்சி சாலை. இதே போன்று ஷிவமொக்காவிலும், ஒரு அற்புதமான மிருகக்காட்சி சாலை, சுற்றுலா பயணியரை சுண்டி இழுக்கிறது. இங்கு அரிய விலங்குகள், பறவைகள் உள்ளன.
மைசூரின் சாமராஜேந்திரா மிருகக்காட்சி சாலை, பெங்களூரு ரூரல் மாவட்டத்தின், பன்னரகட்டா பூங்கா சுற்றுலா பயணியரை ஈர்த்தன. பெங்களூரு நகருக்கு வெகு அருகில் இருப்பதால், பன்னரகட்டா பூங்காவுக்கு அதிகமான சுற்றுலா பயணியர் வருகின்றனர். இப்போது ஷிவமொக்காவில் உள்ள, தாவரகொப்பா புலிகள் சரணாலயமும், சுற்றுலா பயணியரை ஈர்க்க துவங்கியுள்ளது.
இதற்கு முன் ஜோக் நீர் வீழ்ச்சியை காண, உள்நாடு, வெளிநாடுகளில் இருந்து, பெருமளவில் சுற்றுலா பயணியர் ஷிவமொக்காவுக்கு வந்தனர். ஆனால் இப்போது தாவரகொப்பா புலிகள், சிங்கங்கள் சரணாலயத்துக்கு அதிகம் வருகின்றனர்.
சவாரி செய்து, விலங்குகளை கண்டு மகிழ்கின்றனர். சமீப நாட்களாக, மைசூரு மிருகக்காட்சி சாலை, பன்னரகட்டாவை தொடர்ந்து, தாவரகொப்பா விலங்குகள் சரணாலயம், பிரபலமடைந்துள்ளது.
இங்கு புலிகள், சிங்கம் உட்பட, பலவிதமான அரிய வகை விலங்குகள், பறவைகளை காணலாம். மனதை மகிழ்விக்கும் இயற்கை காட்சிகளும் கொட்டி கிடக்கின்றன. அடர்ந்த வனப்பகுதி நடுவே, 600 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில், வன விலங்குகள் சரணாலயம் அமைக்கப்பட்டுள்ளது. வனப்பகுதியில் விலங்குகள் சுதந்திரமாக நடமாடுவதை, இங்கு காணலாம்.
இன்னிசையாக ஒலிக்கும் பறவைகளின் ரீங்காரம், புலி, சிங்கங்களின் கர்ஜனையை கேட்கலாம். இங்கு கரடி, சிறுத்தை, காண்டா மிருகம், மான்கள், காட்டெருமை என, பல்வேறு விலங்குகளை காணலாம். வனத்துறையின் வேன், ஜீப்பில் சவாரி சென்றால் இயற்கை எழிலுடன், விலங்குகளின் உலகத்தையே காணலாம். ஒரு நாள் சுற்றுலாவுக்கு ஏற்ற இடம்.
சரணாலயத்துக்குள் நுழைந்தால் புதிய உலகத்தில் நுழைந்த உணர்வு ஏற்படும். கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு வேளையில் இங்கு அதிகமான சுற்றுலா பயணியர் வருவர்.
எப்படி செல்வது?
பெங்களூரில் இருந்து, 305 கி.மீ., மங்களூரில் இருந்து 200 கி.மீ., உடுப்பியில் இருந்து 145 கி.மீ., மைசூரில் இருந்து 249 கி.மீ., தொலைவில் ஷிவமொக்கா உள்ளது. இங்கிருந்து ஒன்பது கி.மீ., தொலைவில், தாவரகொப்பா விலங்குகள் சரணாலயம் உள்ளது.
கர்நாடகாவின் அனைத்து நகரங்களில் இருந்தும், ஷிவமொக்காவுக்கு கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ்கள், ரயில்கள் இயக்கப்படுகின்றன. தனியார் பஸ் வசதியும் உள்ளது. ஷிவமொக்காவில் விமான நிலையமும் உள்ளதால், விமானத்திலும் வரலாம். ஷிவமொக்காவில் இறங்கி, இங்கிருந்து வாடகை வாகனங்களில். வன விலங்குகள் சரணாலயத்துக்கு செல்லலாம். சொந்த வாகனங்களிலும் வரலாம். இங்கு பார்க்கிங் வசதி உள்ளது.
அனுமதி நேரம்: காலை 10:00 மணி முதல், மதியம் 1:00 மணி வரை. மதியம் 2:15 மணி முதல், மாலை 5:00 மணி வரை.
தொடர்பு எண்: 94481 25892, 08182 - 222983
அருகில் உள்ள சுற்றுலா தலங்கள்: ஷிவப்பா நாயகா அரண்மனை, காந்தி பூங்கா, சக்ரேபைலு யானைகள் முகாம், பத்ரா வன விலங்குகள் சரணாலயம், ஜோக் நீர் வீழ்ச்சி.