இந்தியா – அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்த கூட்டறிக்கை: வெள்ளை மாளிகை வெளியிட்டது
டிரம்புக்கு பிரதமர் மோடி நன்றி
வாஷிங்டன், பிப்.7–
இந்தியா – அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்த கூட்டறிக்கையை வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ளது.
அமெரிக்கா – இந்தியா இடையேயான வர்த்தக ஒப்பந்த கூட்டறிக்கையை இறுதி செய்திருக்கும் இருநாடுகளுக்கான கூட்டறிக்கையை வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ளது.
அதில் கூறியிருப்பதாவது:–
பரஸ்பர மற்றும் இருதரப்புக்கும் நன்மை பயக்கும் வர்த்தகம் குறித்த இடைக்கால ஒப்பந்தத்திற்கான ஒரு முடிவை அமெரிக்காவும், இந்தியாவும் எட்டியுள்ளன.
அமெரிக்காவின் அனைத்து தொழில்துறை பொருட்கள், உணவு மற்றும் விவசாயப் பொருட்களுக்கான வரிகளை இந்தியா நீக்கும் அல்லது குறைக்கும். விவசாயப் பொருட்களில் உலர்த்தப்பட்ட தானியங்கள், சிவப்பு சோளம், புதிய மற்றும் பதப்படுத்தப்பட்ட பழங்கள், சோயாபீன் எண்ணை, ஒயின் மற்றும் மதுபானங்கள் ஆகியவை அடங்கும். தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்களை அகற்ற விதிக்கப்பட்ட இந்தியாவின் சில விமானங்கள், விமான பாகங்களுக்கான வரிகளை அமெரிக்கா நீக்கும். ஜவுளி, ஆடை, தோல், காலணிகள் உட்பட இந்தியாவில் இருந்து வரும் பொருட்களுக்கு அமெரிக்கா 18% பரஸ்பர வரியை விதிக்கும்.
அடுத்த 10 ஆண்டுகளில் பாதுகாப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்காக அமெரிக்காவுடன் ஒரு ஒப்பந்தத்தை இந்தியா உறுதி அளித்துள்ளது.
அடுத்த 5 ஆண்டுகளில் 500 பில்லியன் டாலர் மதிப்புள்ள அமெரிக்க எரிசக்தி, விமானப் பொருட்கள், விலைமதிப்பற்ற உலோகங்கள், தொழில்நுட்ப பொருட்கள் மற்றும் நிலக்கரியை இந்தியா வாங்க திட்டமிட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்தியா மீதான 25% வரி ரத்து
இதனிடையே இந்தியா மீதான 25 சதவிகித அபராத வரியை ரத்து செய்யும் உத்தரவில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டார்.
ரஷ்யாவிடம் இருந்து தொடர்ந்து இந்தியா எண்ணெய் வாங்கி வருவதைக் கண்டித்த அமெரிக்க அதிபர் டிரம்ப், முதலில் 25 சதவிகித வரியையும் பின்னர் கூடுதலாக 25 சதவிகித அபராத வரியையும் விதித்திருந்தார்.
அதன்பின்னர், இந்திய- அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு விட்டதாகவும், இந்தியா மீதான 25 சதவிகித அபராத வரியை 18 சதவிகிதமாக குறைப்பதாகவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த 2–ந் தேதி தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், ரஷ்ய எண்ணெய் வாங்குவதற்கு எதிராக இந்தியா மீது விதித்த 25 சதவிகித அபராத வரியை ரத்து செய்யும் உத்தரவில் அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டார்.
இந்தியா மீண்டும் ரஷ்யா விடமிருந்து எண்ணெய்யை வாங்கினால் கடுமையான வரிகள் விதிக்கப்படும் என்றும், அமெரிக்காவிடம் எண்ணெய் வாங்க ஒப்புக்கொண்டது. இதனால் இந்த ஒப்பந்தம் கையெழுத்தான தாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் உத்தவின் மூலம் இந்தியா மீது இருந்த வரி தற்போது 18 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கியதால் கூடுதலாக விதிக்கப்பட்ட 25% வரி ரத்து செய்யப்படுவதாகவும், இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் குறித்து இந்தியா - அமெரிக்கா கூட்டறிக்கை வெளியிட்டுள்ளது.
டிரம்ப் உத்தரவுக்கு நன்றி தெரிவித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
பிரதமர் மோடி நன்றி
அந்தப் பதிவில் அவர் கூறியிருப்பதாவது:–
“இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கு சிறப்பான செய்தி! நமது இரு பெரிய நாடுகளுக்கு இடையே நாங்கள் இடைக்கால ஒப்பந்தம் செய்திருக்கிறோம். அதற்கான கூட்டறிக்கை வெளியாகி உள்ளது. இதற்கான அடிப்படையான விஷயங்களில் எங்களுக்குள் உடன்பாடு ஏற்பட்டுள்ளது.
இரு நாடுகளுக்கு இடையேயான ஒப்பந்தத்தின் அர்ப்பணிப்புக்காக அமெரிக்க அதிபர் டிரம்ப்க்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த ஒப்பந்தம் இரு நாடுகளுக்கு இடையேயான நம்பிக்கையையும், ஆழமான பங்களிப்பையும் பிரதிபலிக்கிறது.
இந்தியாவில் சிறு, குறு விவசாயிகள், தொழில்முனைவோர், ஸ்டார்ட் அப் நிறுவனர்கள், மீனவர்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்குவதன் மூலம், மேக் இந்தியா திட்டம் வலுவாகிறது. இதனால், பெண்களுக்கும் இளைஞர்களுக்கும் அதிகளவிலான வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும். உலகளாவிய வளர்ச்சிக்கு பங்களிக்கும். வளர்ச்சி அடைந்த இந்தியா என்ற பயணத்தில் நாம் முன்னேற்ற பாதையில் செல்லும் நிலையில் மக்களுக்கு அதிகாரம் அளிக்கும். உலகளாவிய கூட்டாண்மைகளை உருவாக்க நாங்கள் உறுதி பூண்டுள்ளோம். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.
புதிய வேலைவாய்ப்பு
இதுகுறித்து மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், பிரதமர் மோடியின் தலைமையின் கீழ், இந்தியா - அமெரிக்காவுடன் ஒரு இடைக்கால ஒப்பந்தம் செய்திருக்கிறது. இது இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு, குறிப்பாக குறு, சிறு மற்றும் நடுத்தர விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்கு இந்திய சந்தையில் 30 டிரில்லியன் டாலர் அளவுக்கு பயனளிக்கும்.
இந்தியாவில் ஏற்றுமதி அதிகரிக்கப் பட்டால் பெண்களுக்கும் இளைஞர்களுக்கும் லட்சக்கணக்கான புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஜவுளி, தோல் பொருள்கள், கைவினைப் பொருட்கள், வீட்டு அலங்காரப் பொருட்கள் மீதான அமெரிக்காவின் வரிகள் 18%ஆக குறைக்கப்பட்டுள்ளது.
இந்திய மருந்துப் பொருள்கள், ஆபரணங்கள் போன்றவற்றுக்கு பூஜ்ஜிய வரி விதிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்திய விவசாயிகளின் நலனைக் காக்க, விவசாய மற்றும் பால் பண்ணை பொருட்களுக்கு இந்த ஒப்பந்தத்தில் முழு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இந்திய விமானப் பாகங்களுக்கு விலக்கு அளிக்கவும் அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் சுமார் 500 பில்லியன் டாலர் அளவுக்கு அமெரிக்காவிலிருந்து எரிசக்தி மற்றும் தொழில்நுட்பப் பொருள்களை இறக்குமதி செய்யவும் இந்தியா ஒப்புதல் அளித்திருக்கிறது.