ஜென் Z போராட்டத்தால் ஸ்தம்பித்த நேபாளம்: 14 பேர் பலி, 100+ காயம்; பின்னணி, நிலவரம் என்ன?

ஜென் Z போராட்டத்தால் ஸ்தம்பித்த நேபாளம்: 14 பேர் பலி, 100+ காயம்; பின்னணி, நிலவரம் என்ன?

காத்மாண்டு:

நமது அண்டை நாடான நேபாளத்தை அதிரவைத்துக் கொண்டிருக்கின்றனர் அந்நாட்டின் ஜென் Z தலைமுறையினர். சமூக வலைதளங்களுக்கு நேபாள அரசு தடை விதித்ததை எதிர்த்து இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பு தெரிவித்துள்ளது. இந்தப் போராட்டத்தில் இதுவரை 14 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


பொதுவாக 1997 முதல் 2012 வரை பிறந்தவர்கள் ஜென் Z தலைமுறையினர் என்று வரையறுக்கப்படுகின்றனர். தொழில்நுட்ப வளர்ச்சி அசுர வேகமெடுத்த காலத்தில் பிறந்த இவர்கள் சமூக வலைதள ஆப்களை உணர்வுபூர்வமாகவும் அணுகுபவர்களாக இருக்கின்றனர். இந்நிலையில், நேபாளத்தில் இந்த ஜென் Z தலைமுறையினர், இன்று மிகப் பெரிய போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். ஒரே நேரத்தில், தலைநகர் காத்மாண்டு மற்றும் முக்கியப் பகுதிகளான பொக்காரா, புட்வால், தாரன், கோரஹி உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கில் திரண்ட இளைஞர்கள் போலீஸாரை திக்குமுக்காட வைத்தனர்.


நிலைமை கட்டுக்கடங்காமல் செல்ல போலீஸ் தடியடி தொடங்கி துப்பாக்கிச் சூடு வரை நடத்தியுள்ளனர். இதில், இதுவரை 14 பேர் உயிரிழந்ததாகவும், 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


தடை எப்போது, ஏன்?: கடந்த 4-ம் தேதி முதலே நேபாளத்தில் சமூக வலைதள தடை அமலில் உள்ளது. ஆனால், அதற்கெதிராக அமைதிவழி போராட்டங்கள் பல நடந்தும் கூட அரசு சற்றும் இரக்கம் காட்டாத நிலையில்தான் இன்று போராட்டம் இவ்வளவு பெரிதாக வெடித்துள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் கூறுகின்றனர்.


நேபாள தொழில்நுட்பத் துறை அமைச்சர் பிருத்வி சுபா குருங் கூறுகையில், “பல்வேறு சமூக வலைதளங்களுக்கும் வரி விதிப்பு பற்றி பலமுறை விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. கடந்த ஆகஸ்ட் 17-ம் தேதி உச்ச நீதிமன்ற தீர்ப்பிலும் அரசு வழிகாட்டுதலின்படி சமூக வலைதளங்கள் பதிவு செய்துகொண்டு சில வரி விதிப்புகளுக்கு உட்படுத்திக் கொள்ளுதல் அவசியம் என்று தெரிவித்துவிட்டது. இருப்பினும் அவர்கள் உடன்படாததால் தடை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.


இப்போது நேபாளத்தில் Viber, TikTok, Wetalk, Nimbuzz போன்ற சமூக வலைதளங்களை மக்கள் பயன்படுத்த முடிகிறது. இவை பதிவு செய்துவிட்டன. டெலிகிராம் பதிவு செய்யும் நடவடிக்கையில் உள்ளது. ஆனால் ஃபேஸ்புக், மெட்டா, வாட்ஸ் அப் எல்லாம் பதிவு செய்வதற்கே இன்னும் முன்வரவில்லை. போதிய அவகாசம் கொடுத்தும் அவர்கள் தரப்பிலிருந்து நடவடிக்கை இல்லாததால் தான் தடை செய்யப்பட்டது” என்று கூறுகிறார்.


சோஷியல் மீடியா தடையா, ஊழல் எதிர்ப்பா? - மேலோட்டமாக பார்த்தால், ஜென் z தலைமுறையினரின் இந்த பிரம்மாண்ட போராட்டத்துக்கு ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் உள்ளிட்ட 26 பிரபல சமூக வலைதளங்களுக்கு நேபாள அரசு தடை விதித்தது காரணமாகச் சொல்லப்படுகிறது.


நேபாளத்தின் பிரதமராக அந்நாட்டின் மிகப் பெரிய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரான கே.பி. சர்மா ஒலி கடந்த 2024-ம் ஆண்டு பதவியேற்றார். அண்மையில் அவரது அரசு, பிரபல சமூக வலைதளங்கள் பலவும் நேபாள சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு பதிவு செய்யாவிட்டால் அவற்றிற்கு தடை விதிக்கப்படும் என்றது. நாட்டின் பாதுகாப்புக்காக அவை பதிவு செய்வதுடன், வரியும் செலுத்த வேண்டும் என்றது. இதற்கு எதிர்பு கிளம்ப, உச்ச நீதிமன்றம் வரை சென்று தான் நினைத்ததை சாதித்துக் கொண்டது அரசு. இந்நிலையில்தான் சமூக வலைதளங்கள் பலவற்றுக்கும் 4-ம் தேதி முதல் தடை நிலவுகிறது.


ஆனால், சமூக செயற்பாட்டாளர்கள் பலரும், இது பாதுகாப்பு காரணங்களுக்காக தடை என்பதைத் தாண்டி அரசாங்கத்தில் ஊழலை எதிர்ப்போர், பேசுவோரை மட்டுப்படுத்தும் முயற்சி என்று விமர்சிக்கின்றனர். நேபாள இளைஞர்கள் பலரும் ஆட்சியின் அவலத்தை சமூக வலைதளங்களில் அம்பலப்படுத்துகின்றனர். அதனை ஒடுக்கவே இந்தத் தடை என்கின்றனர்.


போராட்டக் களத்தில் உள்ள இளைஞர்கள் சிலர் அளித்த ஊடகப் பேட்டிகளில், “நாங்கள் எந்த ஓர் அரசியல் கட்சிக்கு எதிராகவும் அல்லது எந்தவொரு குழுவின் உந்துதலாலும் திரளவில்லை. மாறாக ஊழல் எதிர்ப்பு, சமூக வலைதள பயன்பாட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடைக்கு எதிர்ப்பு, வாரிசு அரசியல், பாரபட்ச அரசியலுக்கு எதிர்ப்பு போன்ற காரணங்களுக்காக தன்னெழுச்சியாகத் திரண்டுள்ளோம்” என்றனர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%