வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு:நவாஸ் கனி எம்.பி. பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு
Oct 29 2025
13
சென்னை, அக். 28–
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தது குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரிய வழக்கில், ராமநாதபுரம் தொகுதி இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சி எம்பி நவாஸ் கனி பதில் அளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
திருநெல்வேலியைச் சேர்ந்த வழக்கறிஞர் வெங்கடாஜலபதி தாக்கல் செய்த மனுவில், கடந்த 2019 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் நடந்த மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் இருந்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி எம்பி யாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நவாஸ் கனி, வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்கள் சேர்த்துள்ளதாக சிபிஐக்கு புகார் அளித்ததாக குறிப்பிட்டுள்ளார்.
2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் அவர் தாக்கல் செய்த வேட்பு மனுவில், அவரது மனைவி, மகனுக்கு, 19 கோடியே 71 லட்சம் ரூபாய் மதிப்பில் சொத்து இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். அதேசமயம், 2024 ஆம் ஆண்டு தேர்தலில் தாக்கல் செய்த வேட்பு மனுவில், 40 கோடியே 62 லட்சம் ரூபாய் சொத்து மதிப்பு எனக் குறிப்பிட்டுள்ளதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், வருமானத்துக்கு அதிகமாக, 288 சதவீதம் என, 23 கோடியே 58 லட்சம் ரூபாய் சொத்து குவித்துள்ளார். இதுசம்பந்தமாக புகார் அளித்தும் சிபிஐ எந்த விசாரணையும் நடத்தவில்லை என்பதால் புகார் மீது விசாரணை நடத்த சிபிஐக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் சிபிஐ தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், புகார் குறித்து விசாரித்ததில், 2.85 சதவீதம் அதிகம் மட்டுமே நவாஸ் கனிக்கு சொத்து உள்ளது கண்டறியப்பட்டுள்ளதாகவும், சில சொத்துக்களை விற்று அவர் வேறு சொத்துக்களை வாங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி ஸ்ரீ வஸ்தவ மற்றும் நீதிபதி அருள்முருகன் அடங்கிய அமர்வு, மனுவுக்கு பதிலளிக்கும்படி, நவாஸ் கனி தரப்புக்கு உத்தரவிட்டு, விசாரணையை மூன்று வாரங்களுக்கு தள்ளிவைத்தது.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?