2025 ஆம் ஆண்டு நாம் பயன்படுத்தும் முதன்மை உலோகங்களான தங்கம் மற்றும் வெள்ளி மீதான தேவை மற்றும் முதலீடு உள்ளிட்ட இன்ன பிற காரணங்களால் இந்த இரு உலோகங்களுக்கும் ‘ஜாக்பாட்’ ஆண்டாகவே அமைந்திருக்கிறது.
நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் “கிடுகிடுவென... ராக்கெட் வேகத்தில்... வராலாறு காணாத... புதிய உச்சத்தில்...” என ‘தங்கம் விலை’ ஒரு பக்கமிருந்தாலும், அனைவரையும் வியக்க வைக்கும் வகையில் திடீரென அனைவரின் கண்ணும் அந்த சாம்பல் நிற ‘பளீச்’ உலோகமான வெள்ளியின் பக்கம் திரும்பியிருப்பதுதான் அந்தக் ‘கிடுகிடு’ விலை உயர்வுகளுக்கு காரணமாக அமைந்தது.
2025 புத்தாண்டு அன்று (ஜனவரி 1) ஒரு கிராம் 93 ரூபாயாக இருந்த வெள்ளி, நாள்தோறும் ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் என ஏறிக்கொண்டிருந்தது. ஆனால், டிசம்பரில் ரூ. 285 வரை உயர்ந்தது; கிலோவுக்கு ரூ. 9,000, ரூ. 11,000 எனவும் வேகமாக எகிறத் தொடங்கியது.
கிறிஸ்துமஸ் நேரத்தில் ‘கிடுகிடு’வென 255 ரூபாய் வரை உயர்ந்தது. குறிப்பிடத்தக்க உச்சமாக டிசம்பர் 27 ஆம் தேதி ஒரே நாளில் வெள்ளி கிராமுக்கு ரூ. 20-ம், கிலோவுக்கு ரூ. 20,000-ம் உயர்ந்து ரூ. 2.74 லட்சத்துக்கும் விற்பனையானது.
அதோடு நின்றுவிடவில்லை; அதே நாள் மாலையில் கிலோவுக்கு ரூ. 11,000 உயர்ந்து ஒரே நாளில் கிலோவுக்கு ரூ. 31,000 உயர்ந்து, கிராமுக்கு ரூ.285 என்ற புதிய உச்சத்தைத் தொட்டு சாமானிய மக்களுக்கு மேலும் கலக்கத்தை ஏற்படுத்தியது. ஒரே ஆண்டில் 200 மடங்குக்கும் அதிகமான விலை ஏற்றத்தைக் கண்டிருக்கிறது வெள்ளி.
கடந்த 50 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 24,000 மடங்கு வெள்ளி விலை உயர்ந்திருக்கிறது. 5 ஆண்டுகளில் 330 சதவிகிதம். தங்கத்தின் விலை ஏற்றத்துடன் ஒப்பிடும்போது 4 மடங்கு அதிகம். ஒரே நாளில் வெள்ளி 8 சதவிகிதம் லாபத்தைக் கொடுத்ததும் அன்றே முதல்முறை.
சில்வர் தர்ஸ்டே!
இது வரலாறு காணாத உச்சமாக இருக்கலாம். ஆனால், வெள்ளி கடந்து வந்ததையும் சற்று வரலாற்றைத் திரும்பி பார்ப்பதும் இந்த நேரத்தில் அவசியமான ஒன்றாகவே இருக்கிறது.
சரியாக 45 ஆண்டுகளுக்கு முன் இதே ‘கிடுகிடு’விலை உயர்வை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வதற்காக அமெரிக்காவைச் சேர்ந்த வணிகர்களான ‘ஹண்ட் பிரதர்ஸ்’ என்ற இரு சகோதரர்கள் மற்றும் டெக்சாஸ் எண்ணெய் அதிபர்கள் நெல்சன் பங்கர் ஹண்ட் - வில்லியம் ஹெர்பர்ட் ஹண்ட் இருவரும் சேர்ந்து வெள்ளிக்கான தேவையை அதிகரிப்பதற்காக அதை முடக்கிவைக்க முயன்றிருக்கின்றனர்.
இதனால், 1979-ல் ஒரு டிராய் அவுன்ஸ் (30 கிராம்) 6 டாலரில் இருந்து 1980 மார்ச் 27 ஆம் தேதி (வியாழக்கிழமை) ஒரே ஆண்டில் 49.5 டாலர் வரை உயர்ந்திருக்கிறது. ஓராண்டில் 713 சதவிகிதம் அளவுக்கான உயர்வு. இதைக் கண்டுபிடித்த அமெரிக்க அரசு வெள்ளிக்கான கடுமையான விதிகளை விதிக்க, வசமாக மாட்டிக்கொண்ட ஹண்ட் பிரதர்ஸால் வெள்ளி விலை எகிறிய வேகத்திலேயே மீண்டும் 4 டாலர்களுக்கு வந்திறங்கியிருக்கிறது. வெள்ளியை நம்பி அப்போது முதலீடு செய்தவர்களுக்கு ‘கோவிந்தா’தான். அதே நிலைதான் இப்போதும் தொடருவதாக பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
1979 ல் தங்கம் 60 சதவிகிதம் விலை உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியது. 46 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தற்போதுதான் அந்த நிலையை எட்டியிருக்கிறது.
பின்னர் பெரிய அளவிலான சரிவைச் சந்தித்திருந்தாலும், தங்கம் மத்திய வங்கிகளின் கையிருப்பு காரணமாகவும், எந்த நாட்டுக்குச் சென்றாலும் கிட்டத்தட்ட ஒரே விலையில் ஏற்றுக்கொள்ளப்படுவதும் மீண்டும் அந்த நிலையை எட்டுவதற்கு காப்பாற்றியிருக்கிறது.
ஆனால், வெள்ளி ஒருமுறை கிடுகிடுவென ஏறி கீழே விழுந்தால் எழுவதற்குப் பல பத்தாண்டுகள் தேவைப்படும் என்றும் பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். விழுந்தால் பெரியளவிலான இழப்பைச் சந்திக்க எப்போதும் தயாராக இருக்கவும் அறிவுறுத்தி வருகின்றனர்.
வெள்ளியின் விலை, 2011-ல் ஒரு அவுன்ஸ் 48 டாலர் வரை சென்று, மீண்டும் 12 டாலர்களிலும், 2020ல் ஒரு அவுன்ஸ் 30 டாலர்கள் வரை சென்று மீண்டும் 18 டாலர்களில் வந்து விழுந்ததும் வரலாறுதான்.
டிரம்ப்பின் வருகையும் வெள்ளியின் உயர்வும்
தங்கம், வெள்ளி விலை உயர்வை டிரம்ப் வருகைக்கு முன், பின் என எளிமையாகப் பிரிக்கலாம். அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப், ஜனவரியில் பதவியேற்ற பின்னர் டாலர் மீதான நம்பிக்கைக் குறைவு, கடுமையான வரிவிதிப்பால் சீனா, இந்தியா, ரஷியா உள்ளிட்ட நாடுகள் முடிந்தவரை தங்கத்தின் கையிருப்பை அதிகப்படுத்தியதன் விளைவு தங்கத்தின் விலை ஏற்றத்துக்கு வழிவகுத்ததும் சிறு முதலீட்டாளர்கள், தங்கத்துக்கு மாற்றாக வெள்ளியைப் பார்த்ததும் மிகப் பெரிய விலையேற்றத்துக்கு வழிகோலியிருக்கிறது.
அமெரிக்காவின் டாலருக்கு நிகராகவே கச்சா எண்ணெய் உள்ளிட்ட அயல்நாட்டுப் பரிவர்த்தனைகள் நடைபெற்று வந்தன. அதிபர் டிரம்ப்பின் வருகைக்குப் பின்னர், டாலர் மீதான நம்பிக்கைக் குறைவு காரணமாக அதற்கு நேரெதிரான இருப்பு நாணயமாக (Reserve Currency) தங்கத்தில் முதலீடு செய்ததும், இதனால் கடும் விலையேற்றத்தால் மாற்றாக முதலீட்டாளர்கள் வெள்ளியை நோக்கிப் படையெடுத்ததும் முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது.
திடீர் விலை ஏற்றம் ஏன்?
நமக்குத் தெரிந்தது எல்லாம் வெள்ளியில் மோதிரம், கொலுசு, செயின், பாத்திரங்கள், சில வீடுகளில் சாமி சிலைகள், விளக்குகள், கோயில்களில் சிலைகளுக்கான கவசங்களில் பயன்படுத்தப்படுவதுதான்.
ராக்கெட் வேகத்தில் நாள்தோறும் விலை ஏறுவதைப் பற்றி தெரிந்துகொண்ட நாம் என்றாவது ராக்கெட்டில் வெள்ளி பயன்படுத்துவதைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறோமா? ஆம், ராக்கெட்டுகளில் வெப்பக் கடத்துதலைத் தடுக்கவும், மின்னணு போர்டுகளிலும், செயற்கைக் கோள்களிலும் வெள்ளி அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது.
சீனா தங்கம் வாங்கிக் குவிப்பதும் பல உலக நாடுகளின் மத்திய வங்கிகள் தங்க கையிருப்பை உயர்த்தி வருவதும் தங்கம் விலை உயர்வுக்கான காரணமாக இருக்கலாம். ஆனால், பெட்ரோல், டீசல் எரிபொருளுக்கு மாற்றாக மின் வாகனங்களின் உற்பத்தியும் வெள்ளிக்கான மவுசைக் கூட்டிவிட்டிருக்கிறது.
குறிப்பிடத்தக்க சில தரவுகளின்படி, அமெரிக்காவில் தொழிற்சாலைப் பயன்பாட்டில் 58 சதவிகிதம் வெள்ளியே முதன்மையான உலோகமாக இருக்கிறது [அதிகளவிலான வெள்ளி உற்பத்தியில் (எடுப்பதில்) மெக்சிகோ இரண்டாவது இடத்திலும், அமெரிக்கா 9-வது இடத்திலும் இருக்கின்றன]
உச்சம் தொட்ட வெள்ளியின் தேவை
பசுமை எரிசக்தித் தொழில்நுட்பம், சூரிய ஒளி மின் தகடுகள் உற்பத்தி, மின்னணு வாகனங்கள் உற்பத்தி, மின்துறை, 5ஜி உள்கட்டமைப்பு, செமிகண்டக்டர் உற்பத்தி போன்றவை உலகளவில் வெள்ளி கிடைக்கும் அளவுக்கும் தேவைக்கும் இடையே இருக்கும் வேறுபாடுகள்தான் வெள்ளி விலையை ஏற்றிவிட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றன.
தங்கம் முதலீடுகளுக்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. ஆனால், வெள்ளி முதலீடு மட்டுமன்றி, தொழிற்சாலைப் பயன்பாட்டிற்காகவும் பயன்படுத்தப்படுகிறது. வெள்ளி வெறும் ஆபரணமாக மட்டுமல்ல, இயந்திரங்கள், ரோபோட்கள், செல்போன்கள், அவ்வளவு ஏன் மருந்து தயாரிப்பிலும் பயன்படுத்தப்படுகிறது.
சூரிய மின்தகடு, லித்தியம் பேட்டரி, மின்சார வாகனங்கள், மின்கம்பிகள், கைப்பேசிகள், கணினிகள், செயற்கை நுண்ணறிவு சாதனங்கள் என அனைத்து வகையான மின் மற்றும் மின்னணு சாதனங்களில் வெள்ளியின் பயன்பாடு அதிகரித்துள்ளது. கார்களில் மட்டுமின்றி, கிருமிகளையும் கொல்லும் வெள்ளி, மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படுகிறது.
மருத்துவமனை கருவிகள், மருந்துகள், சிகிச்சை அளிக்கும் கருவிகளில் வெள்ளி இருக்கிறது. பல காலமாக மருத்துவத் துறை வெள்ளியை நம்பியே இருக்கிறது. செய்யறிவால் உருவாக்கப்படும் ரோபோட்டுகள் இயங்கத் தேவையான சிப்களில் வெள்ளி இருக்கிறது. வெள்ளி விலை எவ்வளவு உயர்ந்தாலும், இந்தப் பயன்பாடுகளிலிருந்து தொழிற்சாலைகள் வெள்ளியை இப்போதைக்கு மாற்ற முடியாது. வெள்ளியின் தேவை அதிகரிக்கத் தொடங்கியிருப்பதும், விலை உயர்வுக்குக் காரணமாகியிருக்கிறது என்பதை அறிய வேண்டும்.
ஒரே உலோகம் விலை உயர்ந்த ஆபரணங்கள் தயாரிக்கவும் தொழிற்சாலைகளிலும் பயன்படுத்தப்படுகிறது என்றால் அதில் முதலிடம் எப்போதும் வெள்ளிக்குத்தான். வீட்டுப் பயன்பாடு என்றாலும் விண்வெளி பயன்பாடு என்றாலும் முன்னணியில் இருப்பது இந்த வெளீர் சாம்பல் நிற உலோகம்தான்.
மின்சக்தி தயாரிக்கும் சூரிய ஒளி தகடுகளில் ஒவ்வொரு சோலார் தகடுகளுக்கும் 20 கிராம் வரை வெள்ளி தேவைப்படுகிறது. உலகம் முழுவதும் நாள்தோறும் பல லட்சக்கணக்கான சூரிய ஒளி தகடுகள் தயாரிக்கப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன. அதிக சூரிய சக்தி உற்பத்தி செய்யப்படும்போது, அதிக வெள்ளியும் பயன்படுத்தப்படுகிறது.
2023 ஆம் ஆண்டில் சோலார் துறையில் வெள்ளி பயன்பாடு 4,000 டன் (140 மில்லியன் அவுன்ஸ்) இருந்த நிலையில், 2024-ல் அது 5,500 டன்னாக (190 மில்லியன் அவுன்ஸுக்கு) உயர்ந்துள்ளது. அதாவது, ஒரே ஆண்டில் சுமார் 40 சதவீதம் அதிகரித்துள்ளதாகக் கூறுகின்றனர் பொருளாதார வல்லுநர்கள்.
மின்சாரத்தில் இயங்கும் கார்களில் வெள்ளி இருக்கிறது. ஒவ்வொரு மின்கார கார்களிலும் 20 முதல் 50 கிராம் வெள்ளி பயன்படுத்தப்படுகிறது. இது சாதாரண கார்களைவிட 3 மடங்கு வெள்ளிப் பயன்பாடு அதிகம். 5ஜி டவர்களில்கூட வெள்ளி இடம்பெறுகிறது. வேறு ஒரு உலோகத்தால், இவ்விடங்களில் வெள்ளியின் பயன்பாட்டை மாற்றவே முடியாது.
மின்சார கார்களின் வருகை
செல்போன் தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் சாம்சங் நிறுவனம் சமீபத்தில் 9 நிமிஷங்கள் சார்ஜ் ஏற்றினால் 600 கி.மீ. செல்லக்கூடிய மின்சாரக் காருக்கான 100 கிலோ வாட் பேட்டரி ஒன்றைத் தயாரித்திருக்கிறது. இதில் ஒரு காருக்கு மட்டும் ஒரு கிலோ அளவுக்கு வெள்ளி தேவைப்படும் என்றும் கூறப்படுகிறது. இதனால், 16,000 மெட்ரிக் டன்னாக இருந்த வெள்ளியின் தேவை ஆண்டொன்றுக்கு 25,000 மெட்ரிக் டன்னாக அதிகரித்திருக்கிறது.
கடந்த 2020 ஜனவரியில் ஒரு கிலோ வெள்ளி வெறும் ரூ. 39,000 -க்கு மட்டுமே விற்பனையான நிலையில், இப்போது 7 மடங்கு விலை உயர்ந்து (டிசம்பர் 27 ஆம் தேதி நிலவரப்படி), ஒரு கிலோ ரூ. 2.85 லட்சத்தைத் தாண்டியுள்ளது.
தங்கத்துக்கு நிகரான அளவில் வெள்ளி விலை உயர்வது வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாதது என்று வியாபாரிகளும், பொருளாதார நிபுணர்களும் தெரிவிக்கின்றனர்.