"ஏண்டி... 'இன்னைக்கு தேங்காய் சட்னி செய்!'னு தானே சொன்னேன்?" கோபமாய்" />
தன் தட்டில் புதினா சட்னி விழுந்த மறுநிமிடமே "விருட்"டென எழுந்து மாலினியின் கன்னத்தில் பேய்த்தனமாய் அறைந்தான் முத்து.
"ஏண்டி... 'இன்னைக்கு தேங்காய் சட்னி செய்!'னு தானே சொன்னேன்?" கோபமாய் கேட்டான்.
"அது... வந்து.... நீங்க சொல்றதுக்கு முன்னாடியே.... நான் புதினா சட்னி ரெடி பண்ணிட்டேங்க.... அதான்!".
அவள் பேசி முடிக்கும் முன் முகத்தில் இன்னொரு பேயறை.
தொடர்ந்து தோள்பட்டை, முதுகு, கழுத்து, என எல்லா இடங்களிலும் அடை மழையாய் அடி மழை.
ஒரு கட்டத்தில் தாங்க முடியாத வலியால் துடித்த மாலினி, சட்டென பின்னோக்கிச் சென்று,
"போதும் .....இதுக்கு மேலே ஒரு அடி விழுந்தாலும் ....வேற மாதிரி ஆயிடும்' கர்ஜித்தாள்.
"என்னடி. வேற மாதிரி ஆயிடும்?... திருப்பி அடிப்பியோ?" சிரித்தவரா கேட்டான் முத்து.
"எளியாரை வலியார் அடிச்சா.. வலியாரை தெய்வம் அடிக்கும்" என்றாள் மாலினி.
"ஓ.... அப்ப தெய்வம் வருமா?.... வந்து என்னை அடிக்குமா?" சொல்லி விட்டு "ஹா.... ஹா..." வென வாய் விட்டுச் சிரித்தவனைப் பரிதாபமாய்ப் பார்த்தாள் மாலினி.
அடுத்த பத்தாவது நிமிடம் அதே பொதினா சட்னியை, முழுவதுமாய்த் தின்று தீர்த்து விட்டு, ஏப்பம் விட்டவாறே வெளியே சென்று.... காரை ஸ்டார்ட் செய்து மின்னல் வேகத்தில் பறந்தான் முத்து.
சரியாக இருபதாவது நிமிடம் முத்துவின் போனிலிருந்து அழைப்பு வந்தது. "சொல்லுங்க" அசுவாரஸிமாய்க் கேட்டாள்.
"அம்மா நான் கவிதா தியேட்டர் ஏரியாவில் இருந்து பேசுறேன்!'வேறொரு குரல் பேசியது.
"சொல்லுங்க!" என்றாள்.
"அம்மா.... இந்த மொபைல்க்காரர்..... கார்ல வேகமா வந்து ரோட்டோரமா போயிட்டிருந்த ஒரு ஸ்கூல் சிறுமி மேல மோதிட்டாரு!.. இந்த ஏரியா ஜனங்க அவரைப் பிடித்து தர்மஅடி போட்டுட்டு இருக்காங்க,!... போகிற போக்கைப் பார்த்தால் அவரை குத்துயிரும்... குலையுயுருமாய் ஆக்கி ஆஸ்பத்திரியில போட்டுடுவாங்க போலிருக்கு!.... கொஞ்சம் சீக்கிரமாக் கிளம்பி..... போலீஸோட வாங்கம்மா!".
"சாரி ராங் நம்பர்!" சொல்லி விட்டு இணைப்பிலிருந்து வெளியேறினாள்.
"வலியாரைத் தெய்வம் அடிக்கும்" அவள் உதடுகள் முண்முணுத்தன.
(முற்றும்)
முகில் தினகரன், கோவை