tamilnadu epaper

கற்றது கண்ணழகு !

கற்றது கண்ணழகு !


நூல் ஆசிரியர் : கவிஞர் கட்டளை ஜெயா !நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !


கற்பகம் புத்தகாலயம், நடேசன் பூங்கா அருகில், தியாகராய நகர், சென்னை-17. விலை : ரூ. 35.00

நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

*****

       அட்டைப்பட வடிவமைப்பு உள் அச்சு படங்கள் யாவும் மிக நேர்த்தியாக உள்ளன. நூல் ஆசிரியர் கவிஞர் கட்டளை ஜெயா, கவிஞர் தபூ சங்கர் போல நூல் முழுக்க காதல் ! காதல் ! காதல் தவிர வேறில்லை என்று எழுதி உள்ளார். ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் பிரிசுரமான காதல் கவிதைகளைத் தொகுத்து நூலாக்கி உள்ளார்.


       காதலியை அழகி என்று வர்ணிப்பது தான் காதலன் வேலை. அதையே ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக வர்ணிக்கின்றனர். 


       தங்க ஆசாரி வீடுகளில் 

       குப்பையைச் சேமித்து

       தங்கத் தூசுகளை 

       மீட்டெடுப்பது மாதிரி

       உன்வீட்டுக் 

       குப்பைகளைச் சேமித்து

       அழகுத் தூசுகளை 

       மீட்டெடுக்கலாம்.


       கேள்விப்பட்ட பழமொழியை வைத்து வேறுவிதமாக சிந்தித்து கவிதை வடிப்பது ஒரு யுத்தி. அந்த விதத்தில் வடித்திட்ட கவிதை ஒன்று.


      பசி வந்தாலும் 

    புலி 

    புல்லைத் தின்னாது !

    காதல் வந்தால் 

    புலி 

    பூவைத் தின்னும் !


       புலி பூவைத் தின்னுமா? என்று கேள்வி கேட்கக் கூடாது. இங்கு புலி என்பது புலி அல்ல. புலி என்பது காதலன் என்பதன் குறியீடு. பூ என்பது, பூ அல்ல. குணமாற்றத்திற்கான குறியீடு பூ.


 பொதுவாக கல்விச்சான்றிதழ்களில், உடலில் உள்ள மச்சம், தழும்பு பற்றிய விபரம் குறிப்பது வழக்கம். அதனை உணர்ந்து வடித்த கவிதை நன்று.


       உன் கல்விச் சான்றிதழை 

       நான் பார்க்கும் போது 

       நீ வெட்கப்படுகிறாய்!

       உனக்கு 

       மச்சம் எங்கெங்கு உள்ளதென 

       அதில் எழுதியிருக்கிறது.


       காதலியின் அங்க அடையாளம் அறிந்து கொள்ள நூலாசிரியர் கவிஞர் கட்டளை ஜெயா குறுக்கு வழி ஒன்று சொல்லித் தருகிறார்.


       காதலன் காதலையை சந்திக்கப் போகும் போது புதுச்சட்டை அணிந்து செல்வான். ஆனால் இங்கு காதலிக்காக பாம்புச் சட்டை மாற்றிக் கொள்வதாக எள்ளல் சுவையுடன் எழுதியது நன்று.


       நீ செல்லும் பாதையில் பாம்புச்சட்டை 

       கிடப்பதைப் பார்த்து பயப்படாதே

       நீ வருவதாய் செய்தியறிந்த பாம்பு 

       பழைய சட்சையக் 

       கழற்றிப் போட்டு விட்டு 

       புதுச்சட்டை

       அணிந்து கொள்ளப் போயிருக்கும்.


       கவிதைக்கு பொய் அழகு என்பது மெய்ப்பிக்கும் விதமாக நூல் முழுவதும் காதல் பொய்கள் சுவைபட எழுதி உள்ளார்.


       ஆனந்த விகடன் (காதல் ஸ்பெஷல்) நூலில் வந்த கவிதை வித்தியாசமான சிந்தனை. படிக்கும் வாசகர்களுக்கும் அவரவர் முத்தமிட்ட அனுபவத்தை நினைவூட்டும் கவிதை.

      

    உன் கண்ணாடிக் கன்னத்தில் 

    முத்தமிடும் போது

    என் உதட்டில் 

    நானே முத்தமிடுவது போல் தெரிகிறது.


       பெண்களின் கூந்தலுக்கு வாசம் இயற்கையா? செயற்கையா? என்று சங்க காலத்தில் எழுந்த கேள்விகள் இன்றும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றது என்பதை உணர்த்திடும் கவிதை. வாசம் மிக்க மலர்கள் அணிவதால் தான் கூந்தலுக்கு வாசம் வருகின்றது என்பதே உண்மை.


       பெண்களின் கூந்தலுக்கு 

    இயற்கையிலே 

    வாசம் உண்டு 

    உன் தலைமுடி ஒன்று விழுந்த 

    சாம்பார் 

    எத்தனை வாசமாய இருக்கிறது 

    பார்.


       காதலிக்கும் போது இருந்த பார்வை மணமான பின்னும் தொடர வேண்டும். காதலியாக இருக்கும் போது சாம்பாரில் முடி கண்டால் வாசமான சாம்பார் என்று பாராட்டும் மனநிலை மணமானதும் ‘சனியனே சாம்பாரில் உன் தலைமுடி’ என்று திட்டும் போது தான் காதல் திருமணம் கசந்து விடுகிறது. " உன் முடி தலையில் இருந்தாலும் அழகு. இந்த இலையில் இருந்தாலும் அழகு ."என்று பாராட்டினால், எள்ளலை புரிந்து கொண்டு மனைவி அடுத்த முறை உணவில் முடி விழாமல் கவனமாக இருப்பாள். இப்படி பல சிந்தனைகளை விதைத்தது ஒரு கவிதை.


       குழந்தைக்கு அன்னை ஊட்டி விடும் நிலாச் சோறு கேள்விப்பட்டு இருக்கிறோம். சாப்பிட்டும் இருக்கிறோம். நூலாசிரியர் கவிஞர் கட்டளை ஜெயா இவர் எழுதியுள்ள நிலாச்சோறு அவர் பெயர் போல வித்தியாசமானது.


       நீ ஊட்டிவிடும் 

    உணவை 

    உன் முகம் பார்த்துக் கொண்டே

    சாப்பிடுவது தான் 

    எனக்கு நிலாச்சோறு.


       இப்போது எந்தப் பெண் சோறு ஊட்டி விடுகிறாள் என்று நீங்கள் கேட்பது எனக்கு கேட்கிறது. தினம் இல்லாவிட்டாலும் என்றாவது ஒரு நாள் ஊட்டி விடச் சொல்லி உண்பதும் ஊட்டி விடுவதும் சுகமான அனுபவம் தான். நூலாசிரியர் உணர்ந்து தான் எழுதி உள்ளார். பாராட்டுக்கள்.


காதலி சிரிக்கும் போது, காதலன் சிரிப்பதும் காதலி வருந்தும் போது காதலன் வருந்துவதும்.கணவன் மனைவி ஆன பின்னும் மாற்றம் இன்றி தொடர்ந்தால் தான் காதல் திருமணம் இனிக்கும். காதலனாக இருந்தவன் கணவனாக மாறியதும் மாறாமல் அன்பு செலுத்துவதே மகிழ்ச்சிக்கு வித்தாகும்.

                  

       நீ சிரிக்கும் போது 

       உன் முன் 

       கோமாளியாகி விடுகிறேன்

       நீ அழும் போது 

       உன் முன் 

       பிணமாகி விடுகிறேன்.


       துணையின் இன்ப துன்பங்களில் துணை இருப்பேன் என்ற உறுதிமொழி தான் திருமணத்தின் போது கேட்கப்படுகின்றது. சொல்லப்படுகின்றது. சொல்லோடு நின்று விடாமல் சொன்ன சொல்படி நடந்தால் வாழ்க்கை இனிக்கும்.


       கவிதைக்கு கற்பனை அழகு என்பதை மெய்ப்பிக்கும் விதமான கவிதை.


       எனக்கு 

   நான்கு கைகள் இருந்தால் 

   என்ன செய்வேன் தெரியுமா?

   இரண்டு கைகளால் 

   உனக்குத் தாலி கட்டும் போது

   அடுத்த இரண்டு கைகளால் 

   எல்லோருடனும் சேர்ந்து

   அட்சதை தூவுவேன்.


       “கற்றது கண்ணழகு” நூலின் பெயரே கவித்துவமாக உள்ளது. கட்டளை ஜெயா கவிதைகளில் காதல் எழுதியது மட்டுமன்றி காதலிக்கு தாலிக்கு கட்டுவேன் என்று எழுதி காதல் என்பது திருமணத்தில் முடிய வேண்டும் என்ற தமிழ்ப்பண்பாடு உணர்த்தியமைக்கு நன்றி. பாராட்டுக்கள்.


       கவிஞர் கட்டளை ஜெயா அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் .காதல் கவிதையோடு நின்று விடாமல் சமுதாயம் பற்றியும் எழுத வேண்டும்.