சென்னை:
இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தில் அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
இரட்டை இலை சின்னத்தை பழனிசாமிக்கு ஒதுக்கியதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம், ஓ.பி. ரவீந்திரநாத், ஒருங்கிணைப்பு குழுவை சேர்ந்த புகழேந்தி, கே.சி.பழனிச்சாமி, ராம்குமார் ஆதித்தன், சூரியமூர்த்தி, காந்தி உள்ளிட்டோர் தேர்தல் ஆணையத்தில் மனு அளித்தனர். தேர்தல் ஆணையம் அந்த மனுக்கள் மீது விசாரணை நடத்த தடை சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்திருந்தது. அந்த தடையை சென்னை உயர்நீதிமன்றம் நீக்கியதை தொடர்ந்து, அனைத்து தரப்பினரும் ஆஜராகுமாறு தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.
அதன்படி, இரட்டை இலை சின்னம் தொடர்பாக இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் விசாரணை நடைபெற்றது. பழனிசாமி சார்பில் முன்னாள் அமைச்சரும் அதிமுக எம்பியுமான சி.வி.சண்முகம், ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் ஓ.பி.ரவீந்திரநாத், வழக்கறிஞர் ராஜலட்சுமி மற்றும் புகழேந்தி, கே.சி.பழனிச்சாமி, சூரியமூர்த்தி, ராம்குமார் ஆதித்தன் உள்ளிட்டோரிடம் விசாரணை நடந்தது.
விசாரணைக்குப் பின்னர், சி.வி.சண்முகம் கூறும்போது, “அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்கள், கட்சிக்கு தொடர்பே இல்லாதவர்கள் தேர்தல் ஆணையத்தில் மனுதாக்கல் செய்துள்ளனர். அதுதொடர்பாக விசாரணை நடைபெற்றது. பழனிசாமி சார்பில் அதிமுகவின் கருத்துகளை வழக்கறிஞர்கள் மூலம் தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்துள்ளோம்.
அதிமுகவுக்கு தொடர்பு இல்லாதவர்கள் அளித்துள்ள இந்த மனுக்கள் விசாரணைக்கு உகந்தது அல்ல. தொடக்க நிலையிலேயே தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம். கட்சியின் உள் விவகாரங்கள், கட்சியின் பிரச்சினைகளில் தலையிடவும் கட்சி விதிகளில் செய்யப்படும் திருத்தங்களை விசாரிக்கவும் தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் இல்லை" என்றார்.
ஓ.பி.ரவீந்திரநாத் கூறும்போது, “அதிமுக, இரட்டை இலை விவகாரத்தில் பழனிசாமிக்கு எந்த அதிகாரமும் இல்லை. அதிமுக ஒருங்கிணப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தான் உண்மையான அதிமுக ஆவார். அவருக்கு தான் இரட்டை இலை சின்னம் ஒதுக்க வேண்டும்” என்றார்.
ஒருங்கிணைப்பு குழுவைச் சேர்ந்த புகழேந்தி கூறும்போது, “தேர்தல் ஆணைய ஆவணத்தில் தற்போது வரை அதிமுகவுக்கு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என உள்ளது. அதிமுகவுக்கு நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதாதான்” என்றார். மேலும், புகழேந்தி ஏற்கெனவே கொடுத்த மனுக்களின் நகல்களை இணைத்து புதிய மனு ஒன்றை தேர்தல் ஆணையத்துக்கு சமர்ப்பித்தார்.