புரட்சித் துறவி என போற்றப்படும் ராமானுஜர் 1017 ஆம் ஆண்டு சித்திரை மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் ஸ்ரீபெரும்புதூரில் அவதரித்தார். இவரது பெற்றோர் அசூரிகேசவ சோமயாஜுலு - காந்திமதி. 'இளையபெருமாள்' என பெற்றோர் இவருக்கு பெயர் சூட்டினர். 8 வயதில் உபநயனம் செய்யப்பட்டது. அவரது தந்தையே முதலில் கல்வியறிவு கற்பித்தார். 16ஆவது வயதில் காந்திமதி என்பவரை மணம் புரிந்தார். தந்தையின் மறைவுக்கு பிறகு குடும்பத்துடன் காஞ்சிபுரம் இளையபெருமாளை ஸ்ரீரங்கம் அழைத்துச் செல்ல வந்து கொண்டிருந்தார் பெரியநம்பி. அப்போது பெரியநம்பியிடம் கல்வி பயில ஸ்ரீரங்கம் சென்று கொண்டிருந்தார் இளையபெருமாள். இருவரும் மதுராந்தகம் ஏரிக் காத்தராமர் கோயிலில் சந்தித்துக் கொண்டனர். இளையபெருமாளை அங்கேயே சீடனாக ஏற்ற பெரியநம்பி பஞ்சசமஸ்காரம் என்ற சடங்கு செய்து 'ராமானுஜர்' என பெயரிட்டார். அந்தப் பெயரே நிலைத்து விட்டது.
மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபட்டால் ராமானுஜர் துறவறம் மேற்கொண்டார். அவரது துறவுக் கோலத்தைப் பார்த்த திருக்கச்சி நம்பிகள் 'யதிராஜரே' என அழைத்தார். அதாவது 'துறவிகளின் அரசன்' என்பது பொருள். இராமானுஜர் பிட்சைக்குப் போகும் போது ஆண்டாளின் பாசுரங்களைப் பாடுவது வழக்கம். இதனால் 'திருப்பாவை ஜீயர்' என அழைக்கப்பட்டார். ராமானுஜரை பெருமாளாகவே கண்ட மக்கள் பக்தியுடன் 'எம்பெருமானார்' என அழைத்தனர்.
ராமானுஜர் சில ஆண்டுகள் கர்நாடக மாநிலம் திருநாராயணபுரத்தில் வாழ்ந்தார். பிறகு அங்கிருந்து ஸ்ரீரங்கம் கிளம்பும் போது அங்குள்ளவர்கள் வருந்தினர். பின்னர் அவர்கள் விரும்பிய படி தன்னைப் போலவே ஒரு சிலையை உருவாக்கச் சொன்னார். அதைக் கட்டித் தழுவி தன் ஆற்றலை செலுத்திய ராமானுஜர், ''நான் இந்த சிலை வடிவில் உங்களுடன் இருப்பேன்'' என ஆசிர்வதித்தார். இதே போல அவதரித்த தலமான ஸ்ரீபெரும்புதுாரிலும் அவர் வாழும் காலத்திலேயே ராமானுஜருக்கு சிலை வைக்கப்பட்டது. அதையும் ராமானுஜரே பிரதிஷ்டை செய்தார்.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் வழிபாட்டு முறைகளை ஒழுங்குப்படுத்திய ராமானுஜர் அங்கேயே தங்கியிருந்தார். 120 வயதை அடைந்த அவரின் உடல்நிலையும் பலவீனம் அடைந்தது. தனது வாழ்நாளை முடித்து விட்டு பரமபதத்தை அடைந்தார். இதனை 'திருநாட்டுக்கு எழுந்தருளல்' என வைணவர்கள் குறிப்பிடுவர். அவரது பூதவுடல் ஸ்ரீரங்கம் கோயிலில் வசந்த மண்டபம் அருகே தென்கிழக்கு மூலையில் தனி சன்னதியில் எழுந்தருளச் செய்து வழிபடலாயினர். இத்திருமேனியை 'தானான திருமேனி' என்பர்.
பச்சைக் கற்பூரம், குங்குமப்பூ, அரிய மூலிகைகளால் பதப்படுத்தப்பட்டதால், இன்றும் உயிருடன் இருப்பது போல் காட்சி தருகிறார்.
வைணவன் என்றாலே பெருமாளின் பக்தன் தான். கடவுளின் முன் அனைவரும் ஒன்றே என்னும் சமத்துவ தர்மத்தை 1000 ஆண்டுகளுக்கு முன்பே உருவாக்கிய புரட்சித் துறவி ராமானுஜர். இந்த நன்நாளில் 'ஸ்ரீமதே இராமானுஜாய நமஹ' என அவரது திருவடிகளை சரண் அடைவோமாக..!