tamilnadu epaper

அப்பாவுக்காக

அப்பாவுக்காக


அப்பா சந்தோஷத்தில் பூரித்துப் போயிருந்தார். 

பங்களா போல வீடு கட்டி கிரஹப்பிரவேசம் இன்று

நடத்திக் கொண்டிருக்கும் தன் மகனின் வளர்ச்சியை எண்ணி! 


கிராமத்திலிருந்த அப்பாவை நகரத்தில் சொகுசாக வாழவைக்க

தன்னோடு இருக்குமாறு வற்புறுத்தி அழைத்து வந்திருக்கிறான் குமார். 


திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் மற்றும் அன்பான மனைவி. 


கிராமத்தில் அப்பாவுக்குக் கிடைக்காத அத்தனை வசதிகளுடன் அப்பாவுக்கு நல்ல விசாலமான தனி அறை! 

எல்லா விதமான வசதிகளும் அப்பாவுக்கு ரொம்ப பிடித்துப் போய் விட்டது. இப்படி சொர்க்கமாய் இருக்கும் நகரத்தை யாருக்குத்தான் பிடிக்காது. அதனால் தான் அனைவரும் பட்டணத்தைத் தேடி வந்த வண்ணம் இருக்கிறார்கள் போலும் என்று மனதிற்குள் நினைத்தவர் அந்த குளுகுளு அறையில் இலவம் பஞ்சு மெத்தையில் தன்னை மறந்து நன்றாக உறங்கி விட்டார். 


காலையில் கண் விழித்ததும் பேரப் பிள்ளைகள் 'தாத்தா தாத்தா' என்று அப்பாவைத் தேடி ஓடி வந்தனர். மருமகளும் அவரைத் தன் அப்பா போலவே நினைத்து பணிவிடை செய்தாள். 


யாருக்குக் கிடைக்கும் இந்த மாதிரி வாழ்க்கை. 

அலுவலகம் முடிந்து வீடு திரும்பியதும் குமார் முதலில் அப்பாவின் ரூமுக்குத்தான் முதலில் செல்வான். 

"அப்பா! இந்த நகர வாழ்க்கை உங்களுக்குப் பிடித்திருக்கிறதா? ஏதாவது குறை இருக்காப்பா? " என்று கரிசணையோடு கேட்பான். 

"எனக்கு என்னப்பா குறை? நீ நல்லா பாத்துக்கற! போதாததற்கு மருமகளும் நீ இல்லாத நேரங்களில் என்னை தன் அப்பா போல பாசமாக இருக்கிறாள். 

பேரன்கள் என் மேல் 

பிரியமாக இருக்கின்றனர். வேறு எனக்கு என்ன வேண்டும்?" என்று மகிழ்ச்சியாகக் கூறினார். நகர வாழ்க்கை அப்பாவுக்கு புதியது என்பதால் நகர வாழ்க்கையே அப்பாவுக்கு அதிசயமாய் இருந்தது. 


குமாருக்கு நீண்ட நாள் கனவு. அப்பாவை நன்றாக கவனிக்க வேண்டும் என்று. குமாரை அவ்வளவு பாசமாக வளர்த்தார் அப்பா! 


பதிலுக்கு கிராமத்தில் அப்பா பட்ட கஷ்டத்துக்கு

நகரத்தில் கடைசிவரை 

தன்னோடு இருக்க வேண்டும்! அவருக்கு எந்தக் குறையும் இருக்கக் கூடாது என அக்கறையுடன் இருந்தான் குமார். 


சில நாட்கள் கழித்து அப்பாவின் போக்கில் நிறைய மாற்றம் தெரிந்தது. மிகவும் சோர்வாகக் காணப்பட்டார். குமாரின் மனைவியும் இதைக் கவனிக்கத் தவறவில்லை. உடனே பதறிப் போன குமார்

"என்னப்பா! ஒரு மாதிரி இருக்கீங்களே! ஊர் ஞாபகம் வந்திருச்சா? நான் ஏதும் தப்பா பேசிட்டனா? "


"அதெல்லாம் ஒண்ணுமில்லப்பா குமார்! ஒரே இடத்தில் இருக்கவும் அப்படி இருக்கும் போல! காடு, கரை அப்படீன்னு சுத்தித்திரிஞ்ச ஆளு நான்!"


இதைப் புரிந்து கொண்ட குமார் அடுத்த நாளே வெளி இடங்களுக்கு குடும்பத்தோடு அப்பா மற்றும் எல்லோரரையும்

அழைத்துச் சென்றான். 


எல்லா இடங்களிலும் நல்ல ஜாலியாக இருந்தாலும் எதையோ பறிகொடுத்தது போலவே இருந்தார் அப்பா! 


அப்பாவுக்கு ஏதோ ஒன்று அசௌகரியத்தைக் 

கொடுத்திருக்கிறது என்பது மட்டும் ஓரளவுக்கு குமாரால் யூகிக்க முடிந்தது. 


ஒருநாள் இதுபற்றி தன் மனைவியிடம் கேட்கும் போது, " நீங்கள் எப்படி அவ்வளவு பிரியமாக இருக்கிறீர்களோ அந்த அளவுக்கு நான் பாசத்துடன் அப்பாவைக் கவனித்துக் கொள்கிறேன். நம்ம பசங்களும் தாத்தா தாத்தா என்று அவருடன் தான் விளையாடுகிறார்கள். 

அப்பாவுக்கு என்ன குறையாக இருக்கும் என்று தெரியலைங்க!" என்று வருத்தத்துடன் குமார் மனைவி கூறினாள். 


ஒருநாள் அப்பாவை மெடிக்கல் செக்கப் என்று கூறி மருத்துவமனைக்கு அழைத்து வந்தான் குமார். எல்லா டெஸ்ட் களின் முடிவும் நார்மல் என்றே வந்தது. 


இவ்வளவு தூரம் மகனும் மருமகளும் பிரியமாக இருப்பதால் இனி அவர்களைத் தொந்தரவு செய்ய வேண்டாம் என்று

மகனை அழைத்து, 

"இங்க பாரு குமாரு! எனக்கு ஊரில் நிறைய வேலை இருக்கு! நீங்கள் எல்லாரும் நல்லா இருக்கிறீங்க! எனக்கு அந்த சந்தோஷம் ஒன்றே போதும்! எனக்குத் தோணும் போது கண்டிப்பாக வருவேன். வேறு எதுவும் என்னைக் கேட்க வேண்டாம்!'

என்ற அப்பாவைக் கட்டிப் பிடித்த படி அழுது கொண்டே இருந்தான் குமார். 


அப்பாவை வழியனுப்பி வைத்து விட்டு நேராக அப்பாவின் அறைக்குள் சென்று மிகவும் வருத்தமாக அமர்ந்திருந்தான். 



பிறகு எழுந்து அப்பாவின் அறையை ஒருமுறை சுற்றும் முற்றும் பார்த்தான். 

அப்போது இலேசாகத் திறந்திருந்த டாய்லெட் அறையில் பொருத்தப்பட்ட வெஸ்டென் டாய்லெட்

அமரும் மேடையில் கறைகளும் அந்தப் பிளேட் முழுவதும் மண்ணாக வும் இருந்தது. 

மருத்துவமனைக்கு அப்பாவை அழைத்துச் செல்லும் போது ஒரு கால் மட்டும் இலேசாகத் தாங்கி தாங்கி நடந்தது ஞாபகத்திற்கு வந்தது. 


அப்படியானால் அப்பாவுக்கு வெஸ்டன்

டாய்லெட் பயன்படுத்தத் தெரியாமல் மலம் கழிக்க மிகவும் சிரமப்பட்டிருக்கிறார். எப்படி உட்கார வேண்டும் எனத் தெரியாமல் கால் வழுக்கி விழுந்து இருக்கலாம். 


சிறுவயதில் எத்தனையோ விஷயங்களைக் கற்றுக் கொடுத்த அப்பா இதைப்போய் எப்படிக் கேட்பது என்று வெட்கப்பட்டு கொண்டு 

இருந்திருக்கிறார். 


"எனக்கு இது தெரியாமல் போய்விட்டதே" என்று

நொந்தபடி அப்பாவின் அறையை விட்டு வெளியே வந்தான் குமார். 


இது பற்றி யாரிடமும் குமார் வெளியில் சொல்லவில்லை. 


அடுத்த நாள் அப்பாவின் அறையில் இந்தியன் டாய்லெட் கட்டுவதற்கு ஏற்பாடு செய்திருந்தான். 


குமாரின் மனைவிக்கு ஒன்றும் புரியவில்லை. 

ஆனால் குமாருக்கு மட்டும் தெரிந்திருந்தது அப்பா கண்டிப்பாக ஒருநாள் வருவாரென்று!!! 


-பிரபாகர்சுப்பையா, 

 மதுரை-625012.