நாடாளுமன்ற மக்களவையில், நிதி மசோதாவில் அரசுத்தரப்பு 35 திருத்தங்கள் சேர்க்கப்பட்டன. அவற்றில், ஆன்லைன் விளம்பரங்கள் மீதான 6 சதவீத டிஜிட்டல் வரி ரத்து செய்யப்பட்டதும் அடங்கும்.
மேற்கண்ட 35 அரசுத்தரப்பு திருத்தங்களுடன் மக்களவையில் நிதி மசோதா நிறைவேறியது. இத்துடன், பட்ஜெட் ஒப்புதல் பணியை மக்களவை முடித்து விட்டது. இனிமேல், நிதி மசோதாவை மாநிலங்களவை பரிசீலிக்கும். மாநிலங்களவை ஒப்புதல் அளித்தவுடன் பட்ஜெட் நடைமுறைகள் அனைத்தும் முடிவடையும். முன்னதாக, நிதி மசோதா மீதான விவாதத்துக்கு மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
புதிய வருமானவரி மசோதா, கடந்த மாதம் 13-ந் தேதி தாக்கல் செய்யப்பட்டது. அதை தேர்வுக்குழு பரிசீலித்து வருகிறது. அக்குழு அறிக்கை சமர்ப்பித்தவுடன், புதிய வருமானவரி மசோதா, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படும்.
நிதி மசோதா, முன்எப்போதும் இல்லாத அளவுக்கு வரி நிவாரணம் அளிக்கிறது. 2025- 2026 மதிப்பீட்டு ஆண்டில் வருமானவரி வசூல் ரூ.13 லட்சத்து 60 ஆயிரம் கோடியாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது, கணிப்பை விட 13.14 சதவீதம் அதிகம். இவ்வாறு அவர் கூறினார்.
மாநிலங்களவையில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட கொதிகலன் மசோதா, மக்களவையில் நேற்று நிறைவேற்றப்பட்டது.
கொதிகலன்கள் வெடிக்கும் அபாயத்தில் இருந்து உயிருக்கும், உடமைக்கும் பாதுகாப்பு அளிக்க இம்மசோதா வகை செய்கிறது.
கொதிகலனுக்கு உள்ளே பணி யாற்றுபவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதும், தகுதிவாய்ந்தவர்கள்தான் கொதிகலன்களை பழுதுபார்க்க வேண்டும் என்பதும்தான் மசோதாவின் நோக்கங்கள் ஆகும். நூற்றாண்டுகள் பழமையான கொதிகலன் சட்டத்துக்கு மாற்றாக இம்மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது.