tamilnadu epaper

ஆணவம்…

ஆணவம்…

பட்டுக்கோட்டைராஜா

``இந்த தறுதலையைத் தவமிருந்து பிள்ளையாப் பெத்ததுக்கு நீ பேசாம மலடியாவே இருந்திருக்கலாம் மரகதம்!”- மார்த்தாண்டம் தாண்டவமாடினார்.                                             

``அப்படியெல்லாம் சொல்லாதீங்க… தெய்வக் குற்றமாகிடும்!” என்றாள் மரகதம்.

அம்மா-அப்பாவை அமைதியாகப் பார்த்திருந்தான், அசோகன்.அவனுக்குள் அந்தக் கணத்தில் ஒரு யோசனை உதித்தது.

மார்த்தாண்டம், வெளியே போன பின் அம்மாவிடம் சன்னமாய் வினவினான்-``அம்மா, அப்பாகிட்ட தெய்வக் குற்றம்னு சொன்னியே, அது என்ன?”

``அது ஒண்ணுமில்லப்பா, எங்களுக்குக் கல்யாணம் முடிஞ்சி பத்து வருசமாகியும் குழந்தைவரம் கிடைக்கலை… அப்போ நம்ம குலதெய்வம் ஐயனாருக்கு நான் மொட்டை போடுறதா வேண்டிக்கிட்டேன்…அப்புறம்தான் நீ பிறந்தே!”

``ஓ, அப்படியா சங்கதி….அப்பாகிட்ட ஒரு விசயத்தைத் தெளிவாச் சொல்லிடும்மா… அவரோட சம்மதமில்லாமல் என் கல்யாணம் நடக்காது… காதல்-கத்திரிக்காயெல்லாம் அப்புறம்தான்!”-என்றான் அசோகன். அம்மா அவனைக் கட்டிக் கொண்டாள். ஃ ஃ ஃ அந்தவாரக் கடைசியில் குலதெய்வத்துக்கு மார்த்தாண்டம் கிடாவெட்டிப் பூசை போட்டார். அவர் தன் மகனின் திருமண விசயம் குறித்து ஐயனாரிடம் கேட்க வேண்டுமென நினைத்த அந்தக் கணத்தில் பூசாரிக்கு அருள் வந்துவிட்டது. அதுவே அவருக்கு நல்ல சகுனமாகப் பட்டது.

``அய்யனாரப்பா, என் மகன் கல்யாணம் குறிச்சு எனக்கு நீ ஒரு முடிவைச் சொல்லு… எனக்கும் அவனுக்கும் அதனாலேயே சண்டை வருது!”

மரகதமும் ஓடிவந்து மார்த்தாண்டத்தின் பக்கம் நின்றாள்- ``மார்த்தாண்டா, இப்போ நான் சொல்றதுதான் முடிவு…அதுல நீ மாறக் கூடாது…உன் மகன் மனசுல நினைக்கிற பெண்ணையே அவனுக்குக் கட்டி வச்சாதான் உன் வம்சம் வளரும்…இல்லேன்னா வாரிசு அத்துப் போய்டும்…!”- என்றார் பூசாரி. 

மார்த்தாண்டத்துக்குத் திக்கென்றானது. ஆனாலும் தெய்வ வாக்கை மீற முடியாது.

யோசனையோடு அவர்கள் கோவிலை விட்டுக் கிளம்பினார்கள். அவர்கள் போன அடுத்தவினாடியே பூசாரியைச் சந்தித்த அசோகன், பேசியபடி அவருக்கு ஐநூறு ரூபாய் கொடுத்துவிட்டு ஆசீர்வாதம் வாங்கினான். ஃ ஃ ஃ

முகவரி; பி.எல்.ராஜகோபாலன், 19-சவுக்கண்டித்தெரு, பட்டுக்கோட்டை-614601.