tamilnadu epaper

ஆந்திராவில் கோயில் சுவர் இடிந்து விழுந்து 7 பேர் உயிரிழப்பு, பலர் காயம்

ஆந்திராவில் கோயில் சுவர் இடிந்து விழுந்து 7 பேர் உயிரிழப்பு, பலர் காயம்

விசாகப்பட்டினம்:

ஆந்திரப் பிரதேசம் - விசாகப்பட்டினத்தின் சிம்மாசலம் கோயிலில் புதிதாக கட்டப்பட்ட சுவர் இடிந்து விழுந்ததில் 7 பக்தர்கள் உயிரிழந்தனர்; பலர் காயமடைந்தனர்.


ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ளது சிம்மாசலம் கோயில். இங்கு சந்தனோத்சவம் திருவிழாவையொட்டி புதன்கிழமை அதிகாலையில் இருந்தே தரிசனதுக்காக பக்தர்கள் குவிந்திருந்தனர். அப்போது, ரூ.300 கட்டண வரிசையில் பக்தர்கள் நின்றிருந்தபோது, அருகில் இருந்த சுவர் திடீரென இடிந்து விழுந்தது.



புதிதாக கட்டப்பட்டு 20 நாட்களே ஆன அந்த 20 அடி சுவர் இடிந்து விழுந்ததில், வரிசையில் நின்றிருந்த பக்தர்கள் பலரும் இடிபாடுகளில் சிக்கினர். இதில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காயமடைந்த பலரும் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

 

இந்தக் கட்டிட விபத்து குறித்து தகவல் அறிந்த சில நிமிடங்களில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர், மாநில பேரிடர் மீட்புப் படையினர், காவல் துறை மற்றும் தீயணைப்பு படையினர் இணைந்து இடிபாடுகளில் சிக்கிய மக்களை மீட்கும் பணியை தொடங்கினர். இதில் பலர் மீட்கப்பட்டனர்.


பலத்த காற்று வீசியதில், புதிதாக கட்டப்பட்ட கோயில் சுவர் இடிந்து விழுந்ததாகவும், அந்தச் சுவர் பலவீனமான அடித்தளத்தைக் கொண்டிருந்ததாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.