ஆலங்குளம், ஏப்.20:
ஆலங்குளத்தில் பெண்கள் ஆயத்த ஆடை குழுமத்தினை காணொலி காட்சியில் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
தென்காசி மாவட்டத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் கீழ் செயல்படும் மாவட்ட தொழில் மையம், தென்காசி அலுவலகம் மூலம் தமிழக அரசின் குறுங்குழும திட்டத்தின் கீழ் நிறுவப்பட்டுள்ள ஆலங்குளம் பெண்கள் ஆயத்த ஆடை தயாரிப்பாளர்கள் குழுமத்தை முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
இதையொட்டி ஆலங்குளத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆலங்குளம் பெண்கள் ஆயத்த ஆடை தயாரிப்பாளர்கள் குழுமத்தில் நிறுவப்பட்டுள்ள இயந்திரங்களை மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர், தென்காசி நாடாமன்ற உறுப்பினர் .மரு.ராணிஸ்ரீகுமார், ஆலங்குளம் யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன் ஆகியோர் குத்துவிளக்கேற்றி பார்வையிட்டு இக்குழுமத்தின் ஆடை வடிவமைப்பு மாதிரியை வெளியிட்டனர்.
மேலும், ஆலங்குளம் பெண்கள் ஆயத்த ஆடை தயாரிப்பாளர்கள் குழுமம் திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் சிட்கோ இண்டஸ்ட்ரியல் எஸ்டேட்டில் அமைந்துள்ள பொதிகை சாய்பாபா அப்பேரல்ஸ் என்ற நிறுவனத்துடன் ஆயத்த ஆடைகள் உற்பத்திக்கான முதல் புரிந்துணர்வு ஒப்பந்தத்தினை பரிமாறிக் கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் மாரியம்மாள், ஆலங்குளம் வட்டாட்சியர் ஓசன்னா, முன்னோடி வங்கி மேலாளர் கணேசன், தென்காசி மாவட்ட குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவன சங்கத் தலைவர் அன்பழகன், ஆலங்குளம் பேரூராட்சி செயல் அலுவலர் திரு.சிவகுமார், மாவட்ட தொழில் மைய அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், ஆலங்குளம் பெண்கள் ஆயத்த ஆடை தயாரிப்பாளர்கள் குழும இயக்குநர் வளர்மதி அவர்கள் மற்றும் குழும உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.