சென்னை:
ஆள்மாறாட்டம் மற்றும் போலி ஆவணங்கள் மூலம் ரூ.5 கோடி மதிப்புடைய வீட்டுடன் கூடிய நிலத்தை அபகரித்த குற்றச்சாட்டில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருவல்லிக்கேணி மேயர் சிட்டிபாபு தெருவைச் சேர்ந்தவர் தாராசந்த். விளையாட்டுப் பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார்.
வீட்டுடன் கூடிய நிலம்: அதில், ``தேனாம்பேட்டையில் எனது தாயார் பெயரில் ரூ.5 கோடி மதிப்புடைய வீட்டுடன் கூடிய நிலம் இருந்தது. அதை எனது தாயார் போல் ஆள்மாறாட்டம் செய்தும், போலி ஆவணங்களை தயார் செய்தும் சிலர் மோசடி செய்து அபகரித்துவிட்டனர். எனவே, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்து எங்களது வீட்டை மீட்டுத் தர வேண்டும்'' எனத் தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து மத்திய குற்றப்பிரிவு போலீஸார் விசாரிக்க காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டார். அதன்படி, போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். இதில், ஆள்மாறாட்டம் மற்றும் போலி ஆவணங்கள் மூலம் சொத்தை அபகரித்தது தொடர்பாக கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த கலைச்செல்வி (59), சென்னை கோடம்பாக்கம் பாரதீஸ்வரர் காலனியைச் சேர்ந்த ஸ்ரீதர் (60) ஆகியோர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், மோசடிக்கு உடந்தையாக இருந்ததாக ஏற்கெனவே கைது செய்யப்பட்ட ஸ்ரீதர் என்பவரின் மகன் பிரசாந்த் (31) என்பவரை தற்போது போலீஸார் கைது செய்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.