tamilnadu epaper

ரூ.8 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் ஒருவர் கைது

ரூ.8 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் ஒருவர் கைது

நாகப்பட்டினம் மாவட்டம் விழுந்தமாவடியைச் சேர்ந்தவர் எம். அலெக்ஸ்(32). இவர் மீது ஏற்கனவே போதைப் பொருள் கடத்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், சுமார் ஒரு வாரகாலமாக, சென்னையிலுள்ள மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு (என்சிபி) காவல்துறையினர் அவரைக் கண்காணித்து வந்ததாகக் கூறப்படுகிறது. கடந்த ஏப்.14-ஆம் தேதி நள்ளிரவு புதுக்கோட்டை மாவட்டம் மேலவிலக்குடி பகுதியில் அலெக்ஸை, போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 95 கிராம் எடையுள்ள மெத்த பெட்டமைன் என்ற போதைப் பொருள் மற்றும் ரூ. 2 லட்சம் ரொக்கப் பணம் ஆகியவையும் கைப்பற்றப்பட்டன. அந்த போதைப் பொருள் சுமார் ரூ.8 கோடி மதிப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, அலெக்ஸை புதுக்கோட்டை அத்தியாவசியப் பண்டங்கள் சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை ஆஜர்படுத்தி, புதுக்கோட்டை மாவட்டச் சிறையில் அடைத்தனர். இந்த போதைப் பொருளை அலெக்ஸ் ராமேசுவரம் வழியாக இலங்கைக்கு கடத்த திட்டமிட்டிருந்ததாகத் தெரிகிறது.