புதுடெல்லி,
இந்தியாவில் 140 கோடிக்கும் அதிகமான மக்கள் உள்ளனர். ஆனால் 21 ஆயிரத்து 285 நீதிபதிகள் மட்டுமே உள்ளனர். அதாவது 10 லட்சம் பேருக்கு 15 நீதிபதிகள் என்ற அளவிலேயே உள்ளனர். 1987 சட்ட ஆணைய பரிந்துரைப்படி 10 லட்சம் பேருக்கு 50 நீதிபதிகள் இருக்க வேண்டும் என்று கூறி இருந்தது.
ஐகோர்ட்டுகளில் இந்த ஆண்டில் நீதிபதி பணியிடங்களில் 21 சதவீத காலியிடங்கள் இருப்பது, அவர்கள் மீது அதிக பணிச்சுமை ஏற்பட காரணமாக உள்ளது. மாவட்ட கோர்ட்டுகளில் உள்ள ஒரு நீதிபதி சராசரியாக 2 ஆயிரத்து 200 வழக்குகளை கவனிக்கிறார். அலகாபாத் மற்றும் மத்தியபிரதேச ஐகோர்ட்டுகளில் ஒரு நீதிபதி தலா 15 ஆயிரம் வழக்குகளை விசாரிக்கிறார்.
மாவட்ட கோர்ட்டுகளில் பெண் நீதிபதிகளின் ஒட்டுமொத்த பங்கு, 2017-ல் 30 சதவீதத்தில் இருந்து 38.3 சதவீதமாக அதிகரித்துள்ளது, 2025-ல் ஐகோர்ட்டுகளில் 11.4 சதவீதத்தில் இருந்து 14 சதவீதமாக அதிகரித்து உள்ளது.
ஐகோர்ட்டுகள் மற்றும் சுப்ரீம் கோர்ட்டை ஒப்பிடும்போது, மாவட்ட கோர்ட்டுகளில் பெண் நீதிபதிகளின் விகிதாசாரம் அதிகமாக உள்ளது. அங்கு 6 சதவீதம் பெண் நீதிபதிகள் உள்ளனர். ஆனால் 15 ஐகோர்ட்டுகளில் ஒரு பெண் தலைமை நீதிபதி மட்டுமே உள்ளார்.
மாவட்ட நீதித்துறையில், பழங்குடியின நீதிபதிகள் 5 சதவீதமாகவும், எஸ்.சி. பிரிவு நீதிபதிகள் 14 சதவீதமாகவும் உள்ளது. 2018 முதல் இதுவரை 698 ஐகோர்ட்டு நீதிபதிகள் நியமனத்தில் வெறும் 37 நீதிபதிகள் மட்டுமே எஸ்.சி., மற்றும் எஸ்.டி. பிரிவை சேர்ந்தவர்கள்.
இதர பிற்படுத்தப்பட்ட பிரிவு நீதிபதிகளின் பங்களிப்பு நீதித்துறையில் 25.6 சதவீதமாக உள்ளது. சட்ட உதவிக்கான தேசிய தனிநபர் செலவு ஆண்டுக்கு ரூ.6.46 ஆகவும், நீதித்துறைக்கான தேசிய தனிநபர் செலவு ஆண்டுக்கு ரூ.182 ஆகவும் உள்ளது. நீதி வழங்குவதில் 18 பெரிய மற்றும் நடுத்தர மாநிலங்களில் கர்நாடகா முதலிடத்தில் உள்ளது, 2022 முதல் கர்நாடகம் இந்த முதல் இடத்தை தக்க வைத்துக்கொண்டுள்ளது.
ஆந்திர பிரதேசம், தெலுங்கானா, கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகியவை கர்நாடகாவைத் தொடர்ந்து பட்டியலில் அடுத்தடுத்த இடம் பிடிக்கின்றன. டாடா அறக்கட்டளை வேறுசில சில சமூக அமைப்புகளின் உதவியுடன், இந்திய நீதி அறிக்கை-2025 என்ற பெயரில் புள்ளிவிவரங்களை சேகரித்து இந்த தகவல்களை வெளியிட்டு உள்ளது. இந்திய நீதித்துறைக்கு தேவையான அடிப்படை மாற்றங்களை உடனடியாக நிறைவேற்றும் பொருட்டு இந்த அறிக்கை வெளியிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.