tamilnadu epaper

உதவி

உதவி

கீர்த்தி

 

வேணுவின் சொந்த கிராமத்திலிருந்து வந்திருந்த ஒரு சிலர் முன்னறையில் அமர்ந்திருந்தார்கள்.

 

“இப்ப என்னால எந்த உதவியும் செய்ய முடியாது. பின்னாடி யோசிக்கலாம்” சொன்ன கணவன் வேணுவை ஜாடை காட்டி உள்ளறைக்கு அழைத்தாள் ரேகா.

 

“ஏங்க இப்படி முகத்துல அடிச்ச மாதிரி அவங்ககிட்டே சொன்னீங்க?” கிசுகிசுப்பாய்க் கணவனிடம் கேட்டாள்.

 

“இருபது வருஷத்துக்கு முன்னாடி ஊர்ல டிப்ளமா படிச்சுட்டு வேலை இல்லாம இருந்தப்போ, நான் தண்டச்சோறு தின்னுட்டு கோயில்காளை மாதிரி சுத்திட்டு இருக்கிறதா என் காதுபடவே பேசினாங்க. அந்த அவமானத்துல நான் ஊர்லயிருந்து புறப்பட்டு வந்து பல இடங்கள்ல வேலை பார்த்து, பிறகு சொந்தமா தொழில் செய்து இப்ப ஓரளவு நல்ல நிலைமையில இருக்கேன். அதைத் தெரிஞ்சுக்கிட்டு வெட்கமே இல்லாம இப்ப என்கிட்டே உதவி கேட்டு வந்துருக்காங்க” சிடுசிடுப்பாய்ச் சொன்னான் வேணு.

 

“எதுக்காக உதவி கேட்டு வந்திருக்காங்க?”

 

“ஏதோ ஊர்ப்பசங்க படிக்கிறதுக்காக ஐடிஐ தொடங்கப் போறாங்களாம். உடனே என் ஞாபகம்தான் வந்ததாம். அன்னிக்கு என்னைக் கேலி பண்ணினவங்களுக்கு இப்ப நான் எதுக்காக உதவி செய்யணும்?” கோபமாகக் கேட்ட கணவனை அமைதியாகப் பார்த்தாள் ரேகா.

 

“அன்னிக்கு ஊர்க்காரங்க கிண்டல் பண்ணினதாலதானே வைராக்கியமா ஊரைவிட்டு வந்து ஜெயிச்சிருக்கீங்க. ஒருவேளை அவங்க ஏதும் சொல்லாம இருந்திருந்தா நீங்களும் ஊரையே சுத்திக்கிட்டு அப்படியே இருந்திருக்கவும் வாய்ப்பிருக்குல்ல. இன்னிக்கு இந்த நிலைமைக்கு நீங்க வர்றதுக்கு மறைமுகமா உங்க ஊர்க்காரங்களும் காரணம்தாங்க. கண்டிப்பா உங்க ஊர்க்காரங்களுக்கு ஏதாவது உதவி செய்யணும்...” ரேகா சொல்ல,

 

அவளைக் கூர்ந்து பார்த்த வேணு, செக் புக்கை எடுக்கப் போனான்.