கர்நாடக மாநிலத்தின் தலைநகரான பெங்களூரு, கன்னடம் தமிழ் மற்றும் தெலுங்கு பேசும் மக்களை கொண்டுள்ளது.
பரபரப்பான ஷாப்பிங் மால்கள், வாகனங்கள் நிறைந்து வழியும் சாலைகள், வானுயர கட்டிடங்கள் போன்றவற்றோடு காணப்படும் பெங்களூர், இன்றைய இளைய தலைமுறையால் மிக சுலபமாக பொருந்திக்கொள்ள கூடிய ஒரு நவீன அடையாளம். விஜயநகர சாம்ராஜ்யத்தின் கீழ் ஒரு குறுநில மன்னராக இருந்த கெம்பே கவுடாவால் 1537- ஆண்டு, தற்சமயம் பெங்களூர் என்று அழைக்கப்படும் இந்த நகரம் உருவாக்கப்பட்டுள்ளது.
இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், இந்தியாவில் மின்சாரம் அறிமுகமான முக்கிய நகரங்களில் பெங்களூரும் ஒன்று. 1906'ஆம் ஆண்டில், ஷிவனசமுத்திரம் நீர்மின் திட்டத்தின் உதவியுடன் பெங்களுருக்கு மின்சாரம் வந்தது.
ஐடி (தகவல் தொழில் நுட்பம்) நிறுவனங்களின் கேந்திரமாக விளங்குவதால் இந்தியாவின் *சிலிகான் வேலி* என்று அழைக்கப்படுகிறது.
இந்தியாவின் அதிக மக்கள் நெருக்கமுள்ள நகரங்களில் மூன்றாவதாக திகழ்கிறது. கடல் மட்டத்திலிருந்து 3113 அடியில் (949 மீட்டர்) உள்ளதால் இது மிக இதமான பருவநிலையை பெற்றுள்ளது.
இங்கு பொதுவாக வெப்பநிலை கோடைக்காலத்தில் 20⁰C இருந்து 36⁰C ஆகவும், குளிர் காலத்தில் 17⁰C இருந்து 27⁰C ஆகவும் உள்ளது.
பெங்களூர் எல்லா முக்கிய பெருநகரங்களுடனும் சாலை, ரயில் மற்றும் விமான மார்க்கத்தால் இணைக்கப்பட்டுள்ளது.
பெங்களூரில் பல முக்கிய தொழிற்சாலைகளும், தொழில் நுட்ப மற்றும் ஆய்வு நிறுவனங்களும் அமைந்துள்ளன. ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட்(HAL), பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட்(BEL), பாரத் எர்த் மூவர்ஸ் லிமிடெட்(BEML), ஹிந்துஸ்தான் மெஷின் டூல்ஸ்(HMT) போன்ற பிரபல நிறுவனங்கள் மற்றும் இந்திய அரசின் அதிகாரகாரபூர்வ விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இந்தியன் ஸ்பேஸ் ரிசர்ச் ஆர்கனிசேஷன் (ISRO) அமைப்பின் தலைமை அலுவலகமும் இங்கு உள்ளது.
தகவல் தொழில் நுட்பத்துறையில் சர்வதேச அளவில் பிரசித்தி பெற்றுள்ள இன்ஃபோசிஸ், விப்ரோ மற்றும் டிசிஎஸ் போன்ற நிறுவனங்கள் தங்கள் தலைமை அலுவலகங்களையும் செயல் தளங்களையும் பிரம்மாண்ட அளவில் பெங்களூரில் நிறுவி இருப்பதால் நகரத்தின் பொருளாதாரம் பெருமளவில் உயர்ந்துள்ளது. இது தவிர சர்வதேச நிறுவனங்களான சாம்சங், எல்ஜி, ஐபிஎம் போன்றவையும் இங்கு தங்கள் அலுவலகங்களை உருவாக்கியுள்ளன. இங்குள்ள வேலை வாய்ப்புச் சூழல் காரணமாக உலகில் எல்லா பகுதிகளிலிருந்தும் பலர் இங்கு குடியேறியுள்ளதால் பெங்களூர் பல இனங்களும், பல சர்வதேச கலாசாரங்களும் கலந்து காட்சியளிக்கும் சமூகமாக மாறியுள்ளது. இந்தியாவின் அறிவியல் கழகமான பெருமைமிக்க இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சைன்ஸ் (IISC) இங்கு அமைந்துள்ளது. அது தவிர மேலாண்மை பல்கலைகழகமான இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனஜ்மேண்ட்(IIM) மற்றும் எண்ணற்ற தொழில்நுட்ப, மருத்துவ, மேலாண்மை கல்லூரிகள் போன்றவை உள்ளன.
சிறந்த முறையில் மற்ற நகரங்களுடன் போக்குவரத்து வசதிகளால் இணைக்கப்பட்டிருக்கும் பெங்களூரில் ஜவஹர்லால் நேரு பிளானட்டோரியம், லால் பாக் மற்றும் கப்பன் பாக் என்றழைக்கப்படும் மிகப்பெரிய தோட்டப் பூங்காக்கள், அக்வாரியம் எனப்படும் மீன் காட்சியகம், வெங்கடப்பா ஆர்ட் காலரி, விதான சௌதா, பானர்கட்டா தேசிய பூங்கா போன்ற பல சுற்றுலா அம்சங்களும் ஸ்தலங்களும் நிரம்பியுள்ளன. மேலும் பெங்களூரிலிருந்து முத்தியால மடுவு (முத்து பள்ளத்தாக்கு), மைசூர், சிரவணபெலகோலா, நாகர்கோல், பண்டிபூர், பேலூர் மற்றும் ஹலேபேட் போன்ற சுற்றியுள்ள முக்கியமான சுற்றுலா தலங்களுக்கு செல்வது எளிதாக உள்ளது.
மூன்று நாட்கள் போதும் பெங்களூரை சுற்றி பார்க்க!!!
வந்தாரை வாழவைக்கும் தமிழகம் போல் வேலை தேடி வருபவர் எவரையும் வெறுங்கையுடன் அனுப்பாது இந்த அழகிய நகரம்.
கீதா ராஜா சென்னை