tamilnadu epaper

எம்புரான்' பட அதிபரிடம் ரூ.1.5 கோடி பறிமுதல்; டைரக்டருக்கு நோட்டீஸ்

எம்புரான்' பட அதிபரிடம் ரூ.1.5 கோடி பறிமுதல்; டைரக்டருக்கு நோட்டீஸ்

சென்னை, ஏப். 5


'எம்புரான்' படத் தயாரிப்பாளர் கோகுலம் கோபாலனிடம் வருமானவரி சோதனையில் ரூ.1.5 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.


மோகன்லால் நடிப்பில் மலையாள நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான 'லூசிபர்' படத்தின் 2ம் பாகமாக உருவான 'எல் 2 எம்புரான்' கடந்த 27ம் தேதி வெளியானது. மஞ்சுவாரியர், டோவினோ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இப்படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.


இதற்கிடையில், தமிழ்நாடு மற்றும் கேரளாவில் ‘எம்புரான்’ படத் தயாரிப்பாளர் கோகுலம் சிட்பண்ட்ஸ் கோபாலனுக்குச் சொந்தமான இடங்களில் நேற்று அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அதன்படி கோகுலம் சிட்பெண்ட், நீலாங்கரை இல்லம் உள்ளிட்ட 4 இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது.


சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடைபெற்றதாக கூறப்பட்ட குற்றச்சாட்டின் கீழ் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. சோதனை நிறைவுபெற்ற நிலையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் கோகுலம் சிட்பண்ட் நிறுவனத்தில் ரூ.1.5 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.


டைரக்டருக்கு நோட்டீஸ்


படத்தில் ஒரு சில காட்சிகள் குறித்து சர்ச்சையும் எழுந்தது. இதற்கு அந்த படத்தில் நடித்த மோகன்லால் வருத்தம் தெரிவிக்க, சர்ச்சைக்குரியதாக கருதப்பட்ட சில காட்சிகள் நீக்கப்பட்டன. இந்நிலையில், இந்த படத்தை இயக்கிய நடிகரும், இயக்குநருமான பிருத்விராஜூக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது.


எம்புரான் படத்துக்கு முன்னதாக கோல்ட், ஜனகண மன, கடுவா ஆகிய 3 படங்களை பிருத்விராஜ் தயாரித்து இருந்தார். அந்த படங்களில் அவர் நடித்தும் இருந்தார். ஆனால் நடிகருக்கான ஊதியத்தை பெறாமல், இணை தயாரிப்பாளர் என்ற அடிப்படையில் ரூ.40 கோடி வரை சம்பளம் பெற்றார் என செய்திகள் வெளியாகின. இதையடுத்து, பிருத்விராஜ் இயக்கிய 3 படங்களின் கோல்ட், ஜனகண மன, கடுவா வருமானம் தொடர்பான கணக்குகளை சமர்ப்பிக்குமாறு கேட்டு வருமானவரித்துறை நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. அந்த நோட்டீசில் இம்மாதம் 29ந் தேதிக்குள் விளக்கம் அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது.