tamilnadu epaper

ஐ.பி.எல்: சென்னை அணிக்கு டோனி மீண்டும் கேப்டன்

ஐ.பி.எல்: சென்னை அணிக்கு டோனி மீண்டும் கேப்டன்

சென்னை, ஏப்.11-


ஐ.பி.எல். கிரிக்கெட்டில் காயத்தால் ருதுராஜ் கெய்க்வாட் விலகி இருப்பதால் எஞ்சிய போட்டிகளில் சென்னை அணியின் கேப்டனாக டோனி பணியாற்றுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த பேட்ஸ்மேன் ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு, கவுகாத்தியில் கடந்த 30-ந்தேதி நடந்த ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் வேகப்பந்து வீச்சாளர் துஷர் தேஷ்பாண்டே பவுன்சராக வீசிய பந்து வலது முழங்கையில் தாக்கியதால் காயம் ஏற்பட்டது. காயத்தையும் பொருட்படுத்தாமல் கடந்த இரு ஆட்டங்களில் ருதுராஜ் விளையாடினார். அதில் 5 மற்றும் 1 ரன் வீதமே எடுத்தார்.


இந்த நிலையில் வலி அதிகமானதால் ஸ்கேன் எடுத்து பார்க்கப்பட்டது. இதில் முழங்கையில் மயிரிழை அளவுக்கு எலும்புமுறிவு ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இதனால் அவர் எஞ்சிய ஐ.பி.எல். தொடரில் இருந்து விலகியுள்ளார். அவருக்கு பதிலாக டோனி மீண்டும் சென்னை அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டு இருக்கிறார். நேற்று நிருபர்களை சந்தித்த சென்னை அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் இந்த தகவலை தெரிவித்தார்.


பிளமிங் மேலும் கூறுகையில், ‘பந்து தாக்கி காயமடைந்த ருதுராஜ் கெய்க்வாட் வலியுடனே தொடர்ந்து விளையாடினார். எக்ஸ்ரே சோதனையில் காயத்தன்மை தெளிவாக தெரியவில்லை. இதையடுத்து எம்.ஆர்.ஐ. பரிசோதனை மேற்கொண்டதில், முழங்கையில் எலும்புமுறிவு இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் துரதிர்ஷ்டவசமாக எஞ்சிய போட்டிகளில் இருந்து அவர் விலகியுள்ளார். அதனால் நாங்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளோம். இனி எஞ்சிய ஆட்டங்களில் டோனி தலைமை தாங்கி வழிநடத்துவார். கெய்க்வாட்டுக்கு பதிலாக மாற்று வீரர் யார் என்பதை பார்க்க வேண்டும். அணியில் சில சிறந்த வீரர்கள் உள்ளனர். அவர்களில் ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்கும்’ என்றார்.


43 வயதான டோனியின் தலைமையில் சென்னை அணி 5 முறை கோப்பையை உச்சிமுகர்ந்து சாதனை படைத்திருக்கிறது. அணிக்கு அடுத்த தலைமையை உருவாக்கும் நோக்குடன் 2022-ம் ஆண்டு ரவீந்திர ஜடேஜா கேப்டனாக நியமிக்கப்பட்டார். டோனி ஒரு வீரராக அணியில் நீடித்தார். ஆனால் ஜடேஜாவால் எதிர்பார்த்த அளவுக்கு ஜொலிக்க முடியாததால் பாதியிலேயே பின்வாங்கினார். இதனால் எஞ்சிய சீசனில் டோனியே மறுபடியும் அணியை வழிநடத்த வேண்டியதானது. தொடர்ந்து 2023-ல் கோப்பையையும் வென்றுத் தந்தார்.


இதன் பின்னர் 2024-ம் ஆண்டில் இருந்து தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ் கெய்க்வாட்டிடம் கேப்டன்ஷிப் கொடுக்கப்பட்டது. கடந்த ஆண்டு அவரது தலைமையில் சென்னை அணி 7 வெற்றிகளுடன் ரன்ரேட்டில் சற்று பின்தங்கியதால் பிளே-ஆப் சுற்றுக்குள் நுழையும் வாய்ப்பை தவற விட்டது.


இப்போது ருதுராஜ் கெய்க்வாட்டும் காயத்தில் சிக்கி இருப்பதால் மீண்டும் டோனியை கேப்டன் பதவி தேடி வந்துள்ளது. ஆனால் இந்த முறை டோனிக்கு உண்மையிலேயே கடும் சவால் காத்திருக்கிறது எனறு தான் சொல்ல வேண்டும்.


இதுவரை 5 ஆட்டங்களில் ஆடி 4-ல் தோற்றுள்ள சென்னை அணி எஞ்சிய 9 ஆட்டங்களில் குறைந்தது 7-ல் வெற்றி பெற்றால் தான் பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறுவது குறித்து நினைத்து பார்க்க முடியும்.


அதனால் இனி ஒவ்வொரு ஆட்டமும் வாழ்வா- சாவா ஆட்டம் போன்றே இருக்கும். சேப்பாக்கத்தில் இன்று நடக்கும் கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் டோனியின் சாதுர்யமான கேப்டன்ஷிப்பை பார்க்க ரசிகர்களும் ஆவல் கொண்டுள்ளனர். நடப்பு தொடரில் டோனி 5 ஆட்டங்களில் ஆடி 7 சிக்சர் உள்பட 103 ரன்கள் எடுத்துள்ளார். விக்கெட் கீப்பிங்கில் 5 பேரை ஆட்டமிழக்க செய்திருக்கிறார்.


மொத்தத்தில் ஐ.பி.எல்.-ல் டோனி தலைமையில் சென்னை அணி இதுவரை 212 ஆட்டங்களில் ஆடி 128-ல் வெற்றியும், 82-ல் தோல்வியும் சந்தித்துள்ளது. 2 ஆட்டத்தில் முடிவு கிடைக்கவில்லை.