tamilnadu epaper

ஒருதலைக் காதல்.

ஒருதலைக் காதல்.

 

ஒரு பெரியவரின் வீட்டிற்கு வாரந்தோறும் சனிக்கிழமை ஒருவன் செல்வது வழக்கம்.

அப்போது அந்த வீட்டில் இருந்த இளம் பெண் இந்நிகழ்வை கண்டாள். அவனின் அழகு அவளை ஈர்த்தது. அவளை அறியாமலேயே அவனை காதலிக்கத் தொடங்கினாள். ஒருமுறை அவள் வீட்டிற்கு வந்த வாலிபன் விடை பெற்றுச் செல்லும் போது, சார். ஒரு நிமிடம்.. என்றாள். சொல்லுங்கள் என்றான் அவன். போகிற வழியில் இந்த கடிதத்தை அஞ்சல் செய்து விடுங்கள் என்றாள். சரி என்று கூறிவிட்டு வாங்கிச் சென்றான். அஞ்சல் பெட்டியில் போடும் போது தான் அந்தக் கடிதத்தை அவன் பார்த்தான். முகவரி எழுதப்படாமல் இருந்தது. ஆனால் அனுப்புநர் முகவரியில் ராதா என்ற முழு முகவரியுடன் அலைபேசி எண்ணும் எழுதப்பட்டிருந்தது. திரும்பவும் அவர்கள் வீட்டிற்குச் சென்று அந்தப் பெண்ணை பார்த்துக் கேட்டான். என்னங்க...முகவரி எழுதாமல் கொடுத்து விட்டீர்களே என்றான். மன்னிக்கவும்.மறந்துவிட்டேன். கொடுங்கள் எழுதி கொடுத்து விடுகிறேன் என்று வாங்கிக் கொண்டாள். முகவரியில் மரமண்டை, கோவை. என்று எழுதிக் கொடுத்தாள். சரி நான் வருகிறேன் என்று கூறிச் சென்று கடிதத்தை அஞ்சல் செய்யும்போது முகவரியைக் கவனித்தான். மரமண்டை கோவை என்று மட்டும் எழுதப்பட்டிருந்தது. அதைக் கவனித்த அவன் கடிதத்தை அஞ்சல் செய்யாமல் வீட்டிற்கு எடுத்துச் சென்றான்.கடிதத்தைப் பிரித்து பார்த்தான். உங்களுக்கு என்னைப் பிடித்திருக்கிறதா? உங்களை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது என்று எழுதியிருந்தாள். உடனே அவன் கடிதத்தில் குறிப்பிட்டு இருந்த அலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு ஹலோ என்றான். மறுமுனையில் ஹலோ.. யார் நீங்கள் என்றாள். அதற்கு அவன் நான்தான் மரமண்டை பேசுகிறேன் என்றான். 

உடனே அவளுக்கு துள்ளல் உணர்வு ஏற்பட்டது. கூடவே வெட்கம் வந்தது. என்ன பேசுவது என்று தடுமாறினாள். உடனே மன்னியுங்கள் என்று கூறினாள். எதற்கு என்றான். அவள் அப்படி எழுதியமைக்கு என்றாள். பரவாயில்லை.. அதனால் என்ன? நகைச்சுவைக்காகத் தானே எழுதியிருந்தீர்கள் எனறான். கடிதத்தைப் படித்துப் பார்த்தீர்களா என்றாள். ம்ம்.... என்றான் அவன். உங்கள் அபிப்பிராயம் என்ன என்று கேட்டாள். அதற்கு அவன் மன்னியுங்கள். ஏற்கனவே எனக்குத் திருமணம் ஆகிவிட்டது. வேறு யாராவது ஒருவருக்கு மரமண்டை என்று எழுதுங்கள் என்று கூறி போனை வைத்தான். அவளுக்குத் தலை சுற்றியது. அவமானமாகவும் இருந்தது.

16.02.25.

அன்புடன்

உ.மு.ந.ராசன் கலாமணி

4, சுபி இல்லம்

கிழக்குப் பூங்கா தெரு கோபிசெட்டிபாளையம் 638452.