சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் ஆப்கானிஸ்தான் - இங்கிலாந்து அணிகள் இடையிலான ஆட்டத்துக்கு முன்பு வரை சலிப்பூட்டுவதாக இருந்தது. இதனால் ஒருநாள் கிரிக்கெட் போட்டி குறித்து ஐசிசி சிந்திக்க வேண்டும் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அஸ்வின் தனது யூடியூப் சானலில் கூறியிருப்பதாவது: தற்போது நடைபெற்று வரும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஆப்கானிஸ்தான் - இங்கிலாந்து போட்டிக்கு முன்பு, ஒருநாள் கிரிக்கெட்டுக்கு எதிர்காலம் இருக்கிறதா என்று யோசித்துக் கொண்டிருந்தேன். டி20 போட்டிகளை காண அதிகளவில் ரசிகர்கள் வருகின்றனர். ஏனெனில் இது நான்கு மணி நேரத்திற்குள் முடிவடைகிறது. ஆப்கானிஸ்தான் போன்ற அணிகளின் கட்டமைப்பு மேம்பட்டவுடன் டெஸ்ட் கிரிக்கெட் மேலும் சிறந்து விளங்கும் என்று நான் நினைக்கிறேன்.
ஆனால், ஒருநாள் போட்டிகளில் வலிமை இல்லை. 2013-14-ம் ஆண்டு வரை ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்ஸில் ஒரு பந்து மட்டுமே பயன்படுத்தப்பட்டது. 2015-ம் ஆண்டில் புதிய விதி அமல்படுத்தப்பட்டது, இதன்படி ஐந்து பீல்டர்கள் வட்டத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர், மேலும் இரண்டு பந்துகள் அறிமுகப்படுத்தப்பட்டன.
இந்த விதிகள் பல வழிகளில் இந்தியாவின் சுழற்பந்து வீச்சின் ஆதிக்கத்தை செல்லாததாக்கியது என்று நான் நினைக்கிறேன். இது என் கருத்து மட்டுமே. ரிவர்ஸ் ஸ்விங் இப்போது விளையாட்டிலிருந்து போய்விட்டதால் இது விளையாட்டை பெருமளவில் பாதிக்கிறது. விரல் சுழலின் பங்கும் குறைக்கப்பட்டுள்ளது.
தென்னாப்பிரிக்காவில் 2027-ம் ஆண்டு நடைபெற உள்ள 50 ஓவர் உலகக் கோப்பை தொடர் ஐசிசிக்கு உண்மையான சவாலாக இருக்கும். விளையாட்டு மிகவும் மெதுவாக செல்வதால் இதுகுறித்து முடிவு எடுக்க வேண்டிய விளிம்பில் ஐசிசி உள்ளது. என் மனதில் ஒரு கேள்வி உள்ளது, இன்றைய கிரிக்கெட்டில் 50 ஓவர் கிரிக்கெட்டுக்கு இடம் இருக்கிறதா? என்பதுதான். ஆப்கானிஸ்தான் - இங்கிலாந்து போட்டி வரை சாம்பியன்ஸ் டிராபி தொடர் மிகவும் சலிப்பூட்டுவதாக இருந்தது. ஒருநாள் கிரிக்கெட் போட்டி பற்றி தீவிரமாக சிந்திக்க வேண்டிய நேரம் இது.
இவ்வாறு அஸ்வின் கூறியுள்ளார்.