ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் விதர்பா - கேரளா அணிகள் மோதி வருகின்றன. நாக்பூரில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் விதர்பா அணி 379 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக டேனிஷ் மாலேவர் 153 ரன்கள் விளாசினார். தொடர்ந்து விளையாடிய கேரளா அணி 3-வது நாள் ஆட்டத்தில் 125 ஓவர்களில் 342 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
அதிகபட்சமாக கேப்டன் சச்சின் பேபி 98, ஆதித்யா சர்வதே 79 ரன்கள் எடுத்தனர். 37 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை விளையாடிய விதர்பா அணி நேற்றைய 4-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 90 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 294 ரன்கள் குவித்தது. தொடக்க வீரர்களான பார்த் ரேகாடே 1, துருவ் ஷோரே 5 ரன்களில் ஆட்டமிழந்தனர். எனினும் டேனிஷ் மலேவர், கருண் நாயர் ஜோடி அபாரமாக விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டது.
டேனிஷ் மலேவர் 162 பந்துகளில், 5 பவுண்டரிகளுடன் 73 ரன்கள் எடுத்த நிலையில் அக்சய் சந்திரன் பந்தில் ஆட்டமிழந்தார். 3-வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 182 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து களமிறங்கிய யாஷ் ரத்தோடு 24 ரன்களில் வெளியேறினார். அபாரமாக விளையாடிய கருண் நாயர் 184 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் சதம் விளாசினார். முன்னதாக கருண் நாயர் 31 ரன்களில் இருந்த போது முதல் சிலிப் திசையில் கொடுத்த கேட்ச்சை அக்சய் சந்திரன் தவறவிட்டிருந்தார்.
இந்த வாய்ப்பை கருண் நாயர் சரியாக பயன்படுத்திக் கொண்டார். 4-வது நாள் ஆட்டத்தின் முடிவில் விதர்பார் அணி 90 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 249 ரன்கள் எடுத்துள்ளது. கருண் நாயர் 132, அக்சய் வத்கர் 4 ரன்களுடன் களத்தில் இருந்தனர். கைவசம் 6 விக்கெட்கள் இருக்க 286 ரன்கள் முன்னிலை பெற்றுள்ள விதர்பா அணி இன்று கடைசி ஆட்டத்தை எதிர்கொள்கிறது.