நூலின் பெயர்:கவியமுதம் !
-நூலாசிரியர்:கவிஞர் இரா.இரவி !
மதிப்புரை:
பேராசிரியர் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் ச.சந்திரா !
வெளியீடு : வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தி. நகர், சென்னை-17. பக்கங்கள் : 172, விலை : ரூ. 100/-
பேச 044 24342810 . 24310769.
மின் அஞ்சல் [email protected]
இணையம் www.vanathi.in
கோபுர வாயில்:
வெற்றிக்கான இலக்குகள் பதினான்கு; புத்தபெருமானிடம் கேட்கப்பட்ட வினாக்கள் பதினான்கு; ஈரேழு லோகங்கள் பதினான்கு ;நல்லாட்சிக்கானப் பண்புகள் பதினான்கு;இதிகாசமாம் இராமாயணத்தின் கதாப்பாத்திரங்கள் பாடங்கற்றுக்கொண்ட ஆண்டுகள் பதினான்கு;இடைச்சொல்லில் இடம்பெறும் பொருட்கள் பதினான்கு;கவிஞர் இரவி அவர்கள் வெளியிட்டுள்ள நூல்களின் எண்ணிக்கையும் பதினான்கு .ஆம்..அவரது பதினான்காவது நூலான கவியமுதம் இலக்கிய வாசகர்களுக்கெனப் பாங்காய்ப் பகிர்ந்து பந்தியில் பரிமாறப்பட்டிருக்கின்றது.
பகுப்பும் தொகுப்பும்:
ஆதவன் ஒன்று;அகம்புறம் இரண்டு;திருக்குறள் பகுப்பு மூன்று;திசைகள் நான்கு;புலன்கள் ஐந்து;திருமுருகன் வதனம் ஆறு;மகளிர் பருவம் ஏழு;கவியமுதம் என்னும் இரா.இரவியின் நூற்பகுப்பு எட்டு! இந்நூலில் பகுத்தறிவுப் பகலவன் முதல் நெம்புகோல் நெல்சன் மண்டேலா வரை, வார்த்தை சித்தர் வாலி முதல் இயற்கை சித்தர் நம்மாழ்வார் வரை,தில்லையாடி வள்ளியம்மை முதல் அழ.வள்ளியப்பா வரை,ஆற்றல் நாயகன் அண்ணா முதல் நீதி நாயகன் சந்துரு வரை,கர்மவீரர் காமராசர் முதல் தனக்குத் தானே கவிதாஞ்சலி எழுதிச் சென்ற கண்ணதாசன் வரை,தெய்வகுரலோன் டி.எம்.எஸ்.முதல் செய்திச் சிகரம் சிவந்தியார் வரை -என மண்ணுலகம் நீத்து விண்ணுலகம் சென்ற சான்றோர்கள் அனைவரையும் புதுக்கவிதை வடிவில் 'பூமராங்க்'-போல் வாசிப்போர் மனதில் புகவைக்கின்றார் கவிஞர் இரவி.
பாற்கடலா?நூற்கடலா?
திருப்பாற்கடலைக் கடைந்தால் மட்டுமே அமிழ்தத்தில் பங்கு உண்டு என்பது புராணச் செய்தி!கவி இரவியின் இந்த நூற்கடலை வாசகர்களாகிய நீங்கள் கஷ்டப்பட்டு கடையவேண்டாம்!இஷ்டப்பட்டு வாசித்தாலே போதும்!கவியமுதம் தானாக கரத்தில் கிட்டும்!ஆம்!எட்டுவிதமானத் தலைப்புக்களில் இதுவரை அறிவுக்கு எட்டாதச் செய்திகளை இலக்கிய இலக்கண நயத்துடன் இரட்டைவட தங்கச்ச் சங்கிலியாக தமிழன்னைக்குச் சூட்டியுள்ளார் கவி இரவி!
பாட்டியலா?பட்டியலா?
தமிழின் அருமை, மாமதுரையின் பெருமை,தமிழனின் பெருந்தன்மை,வாசிப்பின் மேன்மை -என அத்தனையையும் எடுத்துக் கூற முடியாமல் கவிஞர் இரவி பரிதவித்துப்போகும் அளவிற்கு பட்டியல் நீண்டாலும் கவித்துவம் நிறைந்திருப்பதால் வாசிப்போர் மனதில் அத்தனையும் ஆழப்பதிகின்றது என்பதே உண்மை !
உதாரணத்திற்கு ஒன்றிரண்டு இதோ!
காந்தியை அரையாடை மனிதராக்கியது மதுரை!
காந்தியின் இறுதியாடை இருக்குமிடமும் மதுரை!
ஜல் ஜல் நாட்டிய ஒலி கேட்கும் மதுரை!
ஜில் ஜில் ஜிகர்தண்டா கிடைக்கும் மதுரை!"(ப.134)
அகமா?புறமா?
கவியமுதம் நூலை வாசிக்கும் பொழுது ஒருபுறம் நம்பிக்கை கதவு திறக்கின்றது!மறுபுறமோ நாயகி வீட்டு ஜன்னல் மூடுகின்றது!கவிஞர் பல வேளைகளில் சமூக மோசநிலையைச் சுட்டிக்காட்டுகின்றார்.சிலவேளைகளில் பாசவலையில் சிக்கித்தவிக்கவும் செய்கின்றார்.இதோ நம்பிக்கை நட்சத்திரமாக,
தோல்விக்கு தோல்விகொடு நீ!
ஓய்வுக்கு ஓய்வுகொடு நீ!(ப.16)
அதீத அன்பிற்கு சான்றாக,
கிழித்த கோட்டைத் தாண்டுவதில்லை! நீ
அழித்தக் கோட்டை நான் போடுவதே இல்லை!(ப.98)
கவிதையா?காவியமா?
கவி இரவியின் இந்நூலில் கழைக்கூத்தாடி கவிதையின் கருவாகின்றான்.அகவிழியுடையோர் கல்நெஞ்சத்தையும் கரையவைக்கும் உருவமாய் ஆகின்றனர்.வாடகைவீடு குறித்த வாட்டமான கவிதை நம்மைக்கேட்காமலேயே நம் இதயத்திற்குள் புகுந்துவிடுகின்றது!கவிதைகளில் அஃறிணை உயிர்கூட அறிவுரை கூறவருகின்றது!ஆம்!மயில் நம் மனக்கவலை தீர்க்கின்றது!விதைகள் பயணிக்க ,விருட்சமோ உயிர்பெற்று, நம்மை நோக்கி உன்னத வினாவை எழுப்புகின்றது!தற்கால சமூக இழிநிலையால் இரா.இரவியின் கவியோட்டத்தில் மணி கூட ஒலிக்க மறுக்கின்றது!
சர்க்கரைப்பொங்கல் கூட கசக்கின்றது!புத்தகம் காமதேனுவைக் காண பூவுலகு தாண்டி சொர்க்கலோகம் செல்கின்றது!மலைகள் வாசிக்கும் நம்முடன் மனம்விட்டுப் பேசுகின்றன!வாழ்த்துமொழிகள் ஒரு பக்கம் என்றால் ,சமுதாயத்தின் தாழ்நிலையைச் சாடி வசவுமொழிகள் மறுபக்கம் என கவியமுதம் புத்தகம் நகருகின்றது!பக்கத்திற்குப் பக்கம் பகுத்தறிவு இந்நூலில் பறைசாற்றப்படுகின்றது!மொத்தத்தில் ஒரு பல்பொருள் அங்காடிக்குச் சென்றால் நமக்குத் தேவையானப் பொருட்கள் கைசேர்வதுபோல் பலதரப்பட்ட செய்திகளும் அறிவுரைகளும் இந்நூலின்வழி வாசகர் மனத்தைச் சென்றடைகின்றன என்று கூறினால் அது மிகையான ஒன்றல்ல!
சாட்டையடி கவிதை:
"சராசரியாக வாழ்ந்தது போதும் பெண்ணே!
சரிநிகர்சமானமாய் வாழவேண்டும் பெண்ணே!(ப.106)
முரண் நயம்:
"பெரியார்!அவர் ஒருவர்மட்டுமே பெரியார்!
பெரியார்முன் மற்ற அனைவருமே சிறியார்!(ப.54)
கண்ணீரைப்பொழியவைக்கும் வரிகள்!(விழியிழந்தோர்)
கண்ணாமூச்சி விளையாடி கால்தவறி விழுவீர்கள்!
காலமெல்லாம் எங்களுக்கோ கண்ணாமூச்சி
விளையாட்டானது!(ப.156)
மனதார....
காலத்தோடு கைகோர்த்துச் சென்று கவிதை பல படைத்துவரும் இரா.இரவி அவர்கள் இலக்கியவானில் மென்மேலும் ஒளிர்விட்டு பிரகாசிக்க என் போன்ற இணையதள வாசகியரின் மனமார்ந்த வாழ்த்துக்கள்!
"இதுவரை இந்நூலை வாசிக்காதோர் ரூ.100 அளித்து வாங்கிப்படியுங்கள்!
இந்நூலை வாங்கி வாசித்தோர் மீண்டும் ஒருமுறை ஆழ்ந்து படியுங்கள்!