வணக்கம்
15.04.2025 'தமிழ்நாடு இ பேப்பர். காம்' வழக்கம் போல் அனைத்துச் செய்திகளையும் தாங்கிய நாளிதழாக வெளிவந்திருக்கிறது.
சாதிய ஏற்றத்தாழ்வு இல்லாத சமுதாயம் அமைப்போம் என்று அண்ணல் அம்பேத்கரின் ஒவ்வொரு பிறந்த நாளின் போதும் சொல்வது சொல்வதாகவே இருக்கிறது. அதற்கான முன்னெடுப்பு கொஞ்சம் கூட இல்லை என்பதுதான் வேதனை.
சுரைக்காய்க்கு உப்பில்லை என்பது பழமொழி. சுரைக்காய் தின்றால் நம் உடலில் சேரும் தேவையற்ற உப்பை வெளியேற்றம் செய்து விடும். வெயிலுக்கு உகந்த நீர்ச்சத்து மிகுந்த காய்கறியாம் சுரைக்காயை உணவில் சேர்ப்போம்.
செண்டூரில் பல்லவர் கால சண்டிகேஸ்வரர் சிற்பம், சுடுமண் சிற்பம் கிடைத்த இடங்களில் அகழ்வாய்வு நடத்தி வேறு சிற்ப ஆவணங்கள் கிடைக்கின்றதா என்று பார்க்க வேண்டும்.
டிஜிட்டல் அரெஸ்ட் மோசடியில் 14 லட்சத்தை இழந்த ஒடிசா துணைவேந்தர் என்பது அதிர்ச்சி செய்தி. எத்தனை விழிப்புணர்வைத் தூண்டும் அலைபேசி அழைப்பு வாசகம் இருந்தாலும், காணொளி காட்சிகள் கண்டிருந்தாலும் பதற்றத்தில் தன்னிலை இழந்து விடும் சூழல் நிலவும். அதிலிருந்து தற்காத்துக் கொள்ள வேண்டும்.
இதையும் தெரிந்து கொள்வோம் கட்டுரையில் ராமேஸ்வரத்தில் இருக்கும் நீலேஸ்வர லிங்கம், சேது மாதவர் சந்நிதி பாதாள பைரவர் சந்நிதி பற்றி தெரிந்து கொள்ள உதவியது. நீலேஸ்வர லிங்கம் தரிசனம் பெற ராமேஸ்வரம் செல்ல வேண்டும் என்கிற ஆவல் அதிகரிக்கிறது.
தினம் ஒரு தலைவர்கள் வரிசையில் பி.எஸ்.பி பொன்னுசாமி பற்றிய கட்டுரை அன்னாருக்கு பெருமை சேர்க்கும் விதமாக அமைந்திருந்தது.
கா.மு.ஷெரீப் ஐயாவின் தியாக உணர்வு பாட்டும் நானே பாவமும் நானே கட்டுரையில் மிளிரந்தது.
திருநெல்வேலியில் பார்க்க வேண்டிய இடங்கள் குறித்த கட்டுரை கோடைக்கால சுற்றுலா பயணிகளுக்கு நல்ல வழிகாட்டி.
-தாணப்பன் கதிர்
( ப. தாணப்பன் )