tamilnadu epaper

கார்

கார்

``இது ரொம்ப விநோதமாயிருக்கு…மதியம் வாங்கி வீட்டுல கொண்டுவந்து நிறுத்தின காரை பொழுது விடிஞ்சி காணலைன்னா எனக்கு ஆச்சர்யமா இருக்குய்யா!”-என்றார் இன்ஸ்பெக்டர் சந்திரன்.

``நான் சொல்றது சத்தியம் சார்…நாலு லட்சம் கொடுத்து செகண்ட்-ஹேண்டுல வாங்கினேன்.. சிகப்பு கலர் வெர்னா….இதோ ஆர்.சி-புக்கெல்லாம் கூடக் கொண்டு வந்திருக்கேன்!”-என்றான் டிரைவர் முருகன். மஞ்சள் பையிலிருந்த டாகுமெண்ட்களை எடுத்து மேஜை மீது வைத்தான்.

``உன்னை நான் சந்தேகப் படலய்யா…ஆச்சர்யமா இருக்குன்னுதான் சொன்னேன்…அப்போ உன்னை யாரோ தொடர்ந்து வந்திருக்கான்…சரி, காரை எங்கே-யார்கிட்டேர்ந்து வாங்கினே?”

``வல்லம்-தஞ்சாவூர் மாவட்டம், தாமுங்கிறவர்கிட்டேர்ந்து வாங்கினேன் சார்…வழியில் குலதெய்வம் கோவிலுக்குப் போய்ட்டு, ராத்திரி பத்துமணிக்கு வீட்டு வாசல்ல கொண்டுவந்து நிறுத்திட்டுச் சந்தோசமாப் படுத்தேன்…சொந்தமா கார் வாங்கணும்ங்கிறது என் கனவு சார்.”

``சரி, உன் வீடு சென்னையில் எங்கிருக்கு?”

``ராயப்பேட்டை, பெருமாள் கோவில் தெரு… வாடகை வீடுதான் சார்.”

சந்திரன் அந்த இடத்தைக் கண்களில் கொண்டு வந்தார்.-``நல்ல வேளை, அந்த இடத்துல நாலஞ்சி `சி.சி.டி.வி கேமரா’ இருக்கு… வண்டியை எடுங்கய்யா!”- போலீஸ்-ஜீப் கிளம்பியது.

முருகன் வீட்டுக்கு எதிரே இருந்த லைட்- போஸ்டில் இருந்த கேமராவைக் கழற்றி எடுத்துக் கொண்டு, அருகில் இருந்த ஒரு வீடியோ கடைக்குச் சென்றார்கள்.கேமராவை கடைக்காரனிடம் கொடுத்து நேற்றிரவின் பதிவுகளை ஓட்டச் சொன்னார் சந்திரன். முருகனைப் பக்கத்தில் நிறுத்திக் கொண்டார்.

மானிட்டரில் காட்சிகள் ஓடின. அதிகாலை மூன்று மணிக்கு தெருவில் நின்ற வண்டியில் ஒருவன் சாவி போட்டுத் திறந்தான்.-``அவன் முகத்தை ஜூம் பண்ணிக் காட்டுய்யா.”

அந்த முகத்தைப் பார்த்ததும் முருகன் கத்தினான்-``சார் இவன்தான் சார்…இவன்கிட்டதான் நான் வண்டி வாங்கினேன்…கார் சாவி ஒண்ணுதான் இருக்குன்னு கொடுத்தான் சார்… இன்னொரு சாவி அவனே வச்சிட்டிருந்திருக்கான்…!”

எல்லோரும் சிரித்தார்கள்.

``முருகா,கவலைப்படாத…இன்னிக்குச் சாயுங்காலம் உனக்கு வண்டி கிடைச்சிடும்!”-என்றார் சந்திரன்.

                          ஃ ஃ ஃ

முகவரி; பி.எல்.ராஜகோபாலன், 19-சவுக்கண்டித்தெரு, பட்டுக்கோட்டை-614601.