புதுடெல்லி, ஏப். 21 –
செல்போன் மூலம் பண பரிமாற்றம் இப்போது வழக்கமான ஒன்றாகி விட்டது. பத்துரூபாய் பொருளுக்கும் கூகுள்பே மூலம் பணம் அனுப்புகின்றனர்.
கூகுள் பே உள்ளிட்ட யுபிஐ பரிவர்த்தனைகள் அதிகரித்துள்ளதால் அதற்கு ஜிஎஸ்டி வரி விதிக்க மத்திய நிதி அமைச்சகம் பரிசீலித்து வருவதாக செய்திகள் வெளியானது. 2,000 ரூபாய்க்கும் அதிகமான யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட உள்ளதாக தகவல்கள் பரவின. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இதையடுத்து மத்திய நிதி அமைச்சகம் ஒரு விளக்கம் அளித்துள்ளது. யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பது பற்றி வெளியான செய்திகள் அடிப்படை ஆதாரமற்றவை. முற்றிலும் தவறானவை. இது போன்றதொரு திட்டம் எதுவும் பரிசீலனையில் இல்லை என நிதி அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
வணிகர்கள் தொடர்புடைய சில குறிப்பிட்ட யுபிஐ பணம் வசூலிப்புக் கருவிகள் மூலமான பரிவர்த்தனைகளுக்கு மட்டும் பொருந்தும் என்றும் நுகர்வோருக்கும் அதற்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் மத்திய நிதி அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.