கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள பிரேதப் பரிசோதனைக் கூடம் முன்பு திரண்ட சக மாணவர்கள் .
கோவை: தனியார் மருத்துவமனையின் 4-வது மாடியில் இருந்து கீழே குதித்து கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம் நாச்சிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் மனைவி வானதி. இவர்களது மகள் அனுப்பிரியா (19). கடந்த 6 வருடங்களுக்கு முன்னர் கோவிந்தராஜ் உயிரிழந்து விட்டார். கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் செயல்படும் பாராமெடிக்கல் கல்லூரியில் அனுப்பிரியா முதலாமாண்டு படித்து வந்தார். விடுதியில் தங்கியிருந்து வகுப்புக்குச் சென்று வந்த இவர் செவ்வாய்க்கிழமை இரவு கல்லூரி மருத்துவமனையின் 4-வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
தகவலறிந்து வந்த பீளமேடு போலீஸார் அனுப்பிரியாவின் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். விசாரணையில், 4-ம் ஆண்டு மாணவி ஒருவர் ரூ.1,500 பணம் வைத்திருந்த கைப்பை மாயமானது தொடர்பாக அனுப்பிரியாவிடம் மருத்துவமனை மற்றும் கல்லூரி நிர்வாகம் விசாரித்ததால் மனமுடைந்து, அவர் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
மாணவி உயிரிழப்பு குறித்து தகவலறிந்த சக மாணவ, மாணவிகள், உயிரிழந்த மாணவியின் உறவினர்கள் கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள பிரேதப் பரிசோதனைக் கூடத்தின் முன்பு இன்று (ஏப்.16) திரண்டனர். அவர்கள் செய்தியாளர்களிடம் கூறும்போது, “விசாரணை என்ற பெயரில் கல்லூரி நிர்வாகம் மாணவியை கடுமையாகப் பேசியதால்தான் அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும். மாணவி குடும்பத்துக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்” என்று கூறினர்.
பின்னர் அவர்கள் மாணவியின் உடலை வாங்க மறுத்து, அங்கு காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, போலீஸார் முன்னிலையில், கல்லூரி நிர்வாகத்தினர், மாணவியின் உறவினர்கள், மாணவர்கள் பிரதிநிதியுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, அனுப்பிரியாவின் உறவினர்கள் அவரது உடலைப் பெற்றுச் சென்றனர்.