tamilnadu epaper

சத்தீஸ்கரில் நடைபெற்ற என்கவுன்ட்டரில் 2 மாவோயிஸ்ட்கள் சுட்டுக்கொலை

சத்தீஸ்கரில் நடைபெற்ற என்கவுன்ட்டரில் 2 மாவோயிஸ்ட்கள் சுட்டுக்கொலை

ராய்பூர்:

சத்தீஸ்கரில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்ட்டரில் 2 மாவோயிஸ்ட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.


இதுகுறித்து அம்மாநில காவல் துறையினர் நேற்று கூறியதாவது: சத்தீஸ்கரின் நாராயண்பூர் மாவட்டத்தின் கொண்டகோன் எல்லையை ஒட்டி அமைந்துள்ள கிலாம்-பார்கம் கிராமங்களில் பாதுகாப்பு படையினர் நக்சல் எதிர்ப்பு நடவடிக்கையை துரிதப்படுத்தினர்.


அப்போது, மாவோயிட்களுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடைபெற்றது. செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்ற இந்த என்கவுன்ட்டரில் மாவோயிஸ்ட் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்களிடமிருந்து ஏகே-47 ரக துப்பாக்கி, இதர ஆயுதங்கள், வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டன. என்கவுன்ட்டர் நடந்த இடத்தில் தீவிர தேடுதல் வேட்டை தொடர்கிறது.


உயிரிழந்தவர்களில் ஹல்தார் என்பவர் மாவோயிஸ்ட் இயக்க தளபதிகளில் ஒருவராக செயல்பட்டு வந்தவர். மற்றொரு நபர் ரமி என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது. இவர் கிழக்கு பஸ்தார் டிவிசன் மாவோயிஸ்ட் உறுப்பினர். ஹல்தார் மற்றும் ரமியின் தலைக்கு ஏற்கெனவே முறையே ரூ.8 லட்சம் மற்றும் ரூ.5 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்டிருந்தது.


தற்போதைய நடவடிக்கையும் சேர்த்து இந்த ஆண்டில் இதுவரை 140 மாவோயிஸ்ட்கள் பல்வேறு என்கவுன்ட்டர் நிகழ்வுகளில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இவ்வாறு காவல் துறையினர் கூறினர்.