மிகுந்த மன உளைச்சல் மனிஷாவிற்கு.
திருமணமாகி ஆறு மாதங்கள் ஓடிவிட்டன.
மனிஷாவின் கணவன் கந்தர்வ் ஒருநாள் கூட... ஏன்?... ஒருவேளை கூட அவளது சமையலைப் பாராட்டியதே இல்லை.
பாராட்டக்கூட வேண்டாம்... 'நல்லாருக்கு' என ஒற்றை வார்த்தையைக் கூட அவன் திருவாய் உதிர்த்ததில்லையே என்ற ஏக்கம் அவளுக்குள் இருந்தது.
பிறந்த வீட்டிலும் அவளது நண்பிகள் வட்டாரத்திலும் அவளது சமையலுக்கு அமோக வரவேற்பு இருந்த பொற்காலத்தை எண்ணி பெருமூச்சு விட்டாள்.
"உன்னுடைய சமையல் 'நள' பாக சமையல் மட்டுமல்ல. உடலுக்கு ஆரோக்கியமான 'நல' பாக சமையலும் கூட..” எனப் பாராட்டும் தந்தை..
“உன் அறுசுவை சமையலை ருசித்து, உன் கணவர் சொக்கிப் போய், நீ சொன்னதை எல்லாம் கேட்பார்" என செல்லமாக கிண்டல் செய்யும் தாய்...
"அக்கா! நீ சமையல் சம்பந்தமா யூடியூப் சேனல் ஆரம்பிச்சா தமிழ்நாட்டின் நம்பர் ஒன் யூடியூபர் நீதான்" என உற்சாகமூட்டும் தம்பி...
மற்றும், அசத்தும் சமையலுக்காக அவளை முத்தமிட்டு பாராட்டும் அவளது நண்பிகள் அனைவரும் நினைவுக்கு வந்து போனார்கள்.
ஒரு நாள்.
இரண்டாம் ஆண்டு தொடக்கத்திலேயே, 8 லட்சம் வாசகர்களைக் கொண்ட பிரபல மின்னிதழை வாட்ஸ் அப்பில் படித்துக்கொண்டிருந்த மனிஷா மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தாள்-
எழுத்தாளரான அவளது கணவன் கந்தர்வ் எழுதிய கீழ்கண்ட கவிதையைப் படித்து-
*சம்சாரத்தின் சமையல்...*
*ருசித்திட ருசித்திட*
*அவள் மேல்*
*மேலும் மேலும்*
*மையல்!*
*-ரிஷிவந்தியா,தஞ்சாவூர்.*