லாகூர், பிப்.27-
ஆப்கானிஸ்தான் தொடக்க ஆட்டக்காரர் 23 வயதான இப்ராகிம் ஜட்ரன் நேற்றைய இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 12 பவுண்டரி, 6 சிக்சருடன் 177 ரன்கள் குவித்து பிரமிக்க வைத்தார். சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் சதம் நொறுக்கிய முதல் ஆப்கானிஸ்தான் வீரர் இவர் தான். ஏற்கனவே 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட்டிலும் சதத்தை ருசித்த முதல் ஆப்கானிஸ்தான் வீரர் என்ற சிறப்பு இவருக்கு உண்டு. இப்ராகிம் ஜட்ரன் மேலும் சில சாதனைகளை வசப்படுத்தியுள்ளார்.
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்சில் அதிக ரன் எடுத்த வீரர் என்ற சாதனையை இங்கிலாந்தின் பென் டக்கெட்டிடம் இருந்து (ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 165 ரன்) இப்ராகிம் ஜட்ரன் தட்டிப்பறித்தார்.
2022-ம் ஆண்டு இலங்கைக்கு எதிராக இப்ராகிம் ஜட்ரன் 162 ரன்கள் எடுத்ததே ஆப்கானிஸ்தான் வீரர் ஒருவரின் அதிகபட்ச ஸ்கோராக இருந்தது. தனது முந்தைய சாதனையை மாற்றி அமைத்துள்ளார்.
நடப்பு சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் இதுவரை நடந்துள்ள அனைத்து ஆட்டங்களிலும் ஏதாவது ஒரு வீரர் சதம் அடித்துள்ளனர். இங்கிலாந்து- ஆப்கானிஸ்தான் இடையிலான ஆட்டத்தில் ஜட்ரன், ஜோ ரூட் சதம் அடித்தனர். இதையும் சேர்த்து மொத்தம் 11 சதங்கள் பதிவாகியுள்ளன. பாகிஸ்தானை தவிர்த்து மற்ற 7 நாட்டு அணியிலும் சதம் எடுக்கப்பட்டுள்ளது.
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் 2002 மற்றும் 2017-ம் ஆண்டில் தலா 10 சதங்கள் அடிக்கப்பட்டதே அதிகபட்சமாக இருந்தது. அச்சாதனை தற்போது முறியடிக்கப்பட்டுள்ளது.
2023-ம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் ஆப்கானிஸ்தான் அணி லீக்கில் 69 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்துக்கு அதிர்ச்சி அளித்திருந்தது. அதன் தொடர்ச்சியாக மற்றொரு ஐ.சி.சி. தொடரில் மறுபடியும் இங்கிலாந்துக்கு ‘ஆப்பு’ வைத்துள்ளது.