சிந்து நதி நீர் பகிர்வு ஒப்பந்தம் காலவரையின்றி நிறுத்திவைக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் இந்தியா 2 அணைகளை அப்பகுதியில் கட்டி வருவதாக சிந்து நதிக்கான முன்னாள் ஆணையரும், சிந்து நதி நீர் ஒப்பந்தத்தின் தொழில்நுட்ப ஆலோசகருமான ஏ.கே.பஜாஜ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: கடந்த வாரம் ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய படுகொலையை தொடர்ந்து சிந்து நதி நீர் பகிர்வுக்கான ஒப்பந்தத்தை இந்தியா ரத்து செய்துள்ளது. இதைத்தவிர அட்டாரி எல்லை பகுதி மூடல், பாகிஸ்தானியர்களுக்கு விசா ரத்து போன்ற பல முக்கிய முடிவுகளையும் இந்தியா எடுத்துள்ளது.
இந்த நிலையில், சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை கைவிடுவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாகவே, அந்த ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்வதற்காக ஒரு கட்டமைப்பை அரசு உருவாக்கியுள்ளது.
அதன்படி, சிந்து நதி அமைப்பில் பகுல்துல் மற்றும் பர்சார் ஆகிய இரண்டு புதிய நீர் சேமிப்பு அணைகளை கட்டுவதற்கான பணிகளை அரசு துரிதப்படுத்தி வருகிறது.
இந்த இரண்டு நீர் சேமிப்பு திட்டங்களும் தயாரானால், இந்தியா தனது தேவைக்கேற்ப சிந்து நதி அமைப்புடன் இணைக்கப்பட்டுள்ள நதிகளில் இருந்து அதிக அளவில் தண்ணீரை சேமித்து வைக்க முடியும். அதுமட்டுமல்லாமல், அந்த நீரை ராஜஸ்தான், பஞ்சாப் மற்றும் ஹரியானா போன்ற மாநிலங்களுக்கு விவசாயம் தொடர்பான பணிகளுக்கு திருப்பி விட முடியும். இவ்வாறு பஜாஜ் தெரிவித்துள்ளார்.
சிந்து நதி நீர் ஒப்பந்தம் கடந்த 1960-ம் ஆண்டு உருவானது. பல்வேறு காலகட்டங்களி்ல் இந்தியா -பாகிஸ்தான் உறவுகளில் கடுமையான நெருக்கடிகள் எழந்தபோதும் இந்த திட்டத்தை இந்தியா நிறுத்தவில்லை. ஆனால், பஹல்காம் தாக்குதலையடுத்து சிந்து நதி நீர் பகிர்வுக்கான ஒப்பந்தத்தை இந்தியா அதிரடியாக ரத்து செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.