tamilnadu epaper

சிறை பிடித்து வைத்திருக்கும் இந்திய மீனவர்கள் விடுதலை: இலங்கை அதிபரிடம் மோடி வலியுறுத்தல்

சிறை பிடித்து வைத்திருக்கும் இந்திய மீனவர்கள் விடுதலை:  இலங்கை அதிபரிடம் மோடி வலியுறுத்தல்

கொழும்பு, ஏப் 5


''இலங்கை சிறைகளில் இருக்கும் இந்திய மீனவர்களை விடுவிக்க வேண்டும்; அவர்களது படகுகளையும் அவர்களிடமே திரும்ப ஒப்படைக்க வேண்டும்'' என இலங்கை அதிபர் அனுராவிடம் பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார்.


கொழும்பு நகரில் இலங்கை அதிபர் அனுரா குமார திசநாயகவை மோடி சந்தித்தார். இரு நாடுகளுக்கு இடையே, புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.


பின்னர் பிரதமர் மோடி பேசியதாவது:


‘‘இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே பல நூற்றாண்டுகள் பழமையான ஆன்மீக மற்றும் நெருக்கமான உறவுகள் உள்ளன. உண்மையான அண்டை நாடாகவும், நண்பராகவும் நமது கடமைகளை நிறைவேற்றியிருப்பது இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் விஷயம்.


இலங்கை பெற்ற கடன்களுக்கான வட்டி விகிதத்தை குறைக்க முடிவு செய்துள்ளோம். மீனவர் விவகாரத்தில் மனிதாபிமான அணுகுமுறை வேண்டும். இலங்கை சிறைகளில் இருக்கும் இந்திய மீனவர்களை விடுவிக்க வேண்டும்; அவர்களது படகுகளையும் விடுவிக்க வேண்டும்.


தமிழர்களின் கோரிக்கைகள் கவனத்தில் கொள்ளப்படும் என நம்புகிறேன். 10 ஆயிரம் வீடுகள் பயங்கரவாத தாக்குதல், கொரோனா, பொருளாதார பிரச்னையில் இலங்கை தவித்தபோது இந்தியா துணை நின்றது. ஒவ்வொரு கடினமான சூழ்நிலையிலும் இலங்கை மக்களுடன் நாங்கள் நின்றுள்ளோம்.கடந்த 6 மாதங்களில் மட்டும், நாங்கள் 100 மில்லியன் டாலர்களுக்கு மேல் கடன்களை மானியங்களாக மாற்றி உள்ளோம்.


இலங்கை அதிபராக அனுரா குமார திசநாயக பதவியேற்ற பின் முதல் வெளிநாட்டு பயணமாக இந்தியாவை தேர்வு செய்தார். இலங்கையில் உள்ள தமிழர்களுக்காக 10 ஆயிரம் வீடுகளை இந்தியா கட்டிக் கொடுத்துள்ளது.

இலங்கை கோவில்களை

சீரமைக்க உதவி...1960ம் ஆண்டு குஜராத்தின் ஆரவல்லியில் கண்டுபிடிக்கப்பட்ட புத்தரின் நினைவுச்சின்னங்கள், இலங்கைக்கு காட்சிப்படுத்துவதற்காக அனுப்பப்படுகின்றன என்பதை உங்களுக்குத் தெரிவிப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இலங்கையில் உள்ள 3 கோவியில்களை சீரமைக்க இந்தியா உதவும். இந்தியாவில் உள்ள தமிழ் மக்களின் கோரிக்கைகளை இலங்கை பூர்த்தி செய்யும் என நம்புகிறேன். மீனவர்களின் வாழ்வாதாரம் தொடர்பான பிரச்சினைகள் குறித்தும் நாங்கள் விவாதித்தோம். இந்த விஷயத்தில் மனிதாபிமான அணுகுமுறையுடன் நாம் முன்னேற வேண்டும் என்பதை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம்.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

நிதி அளித்ததற்கு நன்றி இலங்கை அதிபர் அநுர குமார திசநாயக பேசுகையில், இந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் தரும் வகையில், எந்த செயலும் இந்த மண்ணில் நடக்காது. இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான நட்பு நெருக்கமானது. டிஜிட்டல் பொருளாதார மேம்பாட்டின் முக்கியத்துவத்தை இலங்கை உணர்ந்திருக்கிறது. ரூ.300 கோடி நிதி தந்ததற்கு நன்றி’’ என்று கூறினார்.


மோடிக்கு இலங்கையின் உயரிய விருது இந்தியா மற்றும் இலங்கையின் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தவும், இரு நாடுகளின் பகிரப்பட்ட கலாச்சார மற்றும் ஆன்மீக பாரம்பரியத்தை மேம்படுத்தவும் பிரதமர் மோடி மேற்கொண்ட விதிவிலக்கான முயற்சிகளை கவுரவிக்கும் வகையில், இலங்கை அரசாங்கத்தால் பிரதமர் மோடிக்கு மதிப்புமிக்க ஸ்ரீலங்கா மித்ர விபூஷண பதக்கம் வழங்கப்பட்டது.


அதிபர் அனுரா குமார திசநாயகா, பிரதமர் மோடிக்கு விருதை வழங்கி கவுரவித்தார். வெளிநாட்டு சார்பில் பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்ட 22வது சர்வதேச விருதாகும். உலகளாவிய நட்புகளை அங்கீகரிப்பதற்காக சிறப்பாக நிறுவப்பட்ட இந்த பதக்கம், இந்தியா இலங்கை உறவுகளின் ஆழத்தையும் அரவணைப்பையும் பிரதிபலிக்கிறது.

விமான நிலையத்தில் வரவேற்பு தாய்லாந்து பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி விமானம் மூலம் நேற்று இரவு இலங்கைக்கு சென்றார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. மோடியை பண்டாரநாயக சர்வதேச விமான நிலையத்தில் இலங்கை வெளிவிவகாரத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தலைமையிலான உயர் நிலைக்குழு வரவேற்றது. அப்போது மூத்த அமைச்சர்கள் நலிந்த ஜெயடிஸ்சா, அனில் ஜயந்தா, ராமலிங்கம் சந்திரசேகர், சரோஜா சாவித்ரி பால்ராஜ், கிறிஸ்ஹந்தா அபேசேனா உள்ளிட்டோர் வரவேற்றனர்.


பின்னர் தலைநகர் கொழும்புவில் உள்ள தாஜ்சமுத்ரா நட்சத்திர விடுதியில் தங்கினார். அப்போது அங்கு அவரை இந்திய வம்சாவளியினர் உற்சாகத்துடன் வரவேற்றனர்.


இதுதொடர்பாக மோடி தனது எக்ஸ் வலை தள பக்கத்தில் கூறும்போது, கொழும்பில் உள்ள இந்திய சமூகத்தினர் எனக்கு வழங்கிய ரம்மியமான வரவேற்புக்கு மழை கூட தடையாக இருக்கவில்லை. அவர்களது அன்பான அரவணைப்பு மற்றும் உற்சாகத்தினால் நான் மிகுந்த நெகிழ்ச்சி அடைந்தேன். அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்தார்.


மோடியை வரவேற்கும் வகையில் சாலைகளில் பிரமாண்ட விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன.


பிரதமர் மோடி இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் ராமேசுவரம் மீனவர்கள் 11 பேரை நிபந்தனையின்றி விடுவித்து இலங்கை கோர்ட் உத்தரவிட்டது.


ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த மாதம் 27-ந்தேதி 11 மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். இந்த மீனவர்கள் நடுக்கடல் பகுதியில் மீன்பிடித்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படை எல்லை தாண்டி மீன்பிடித்தாக கூறி 11 மீனவர்களையும் கைது செய்தனர். இவர்கள் இலங்கை யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர். 11 மீனவர்களின் வழக்கு விசாரணை வருகிற 9-ந்தேதி விசாரணைக்கு வர இருந்த நிலையில் நேற்று இலங்கை யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகள், கோர்ட்டில் மீனவர்களின் வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர். அதன் அடிப்படையில் ஊர்க்காவல்துறை கோர்ட் நீதிபதி நளினி சுபாஸ்கரன் வழக்கை விசாரித்தார். அப்போது ராமேசுவரம் மீனவர்கள் 11 பேரையும் எந்தவித நிபந்தனையும் இன்றி விடுவித்து உத்தரவிட்டார்.


விடுவிக்கப்பட்ட இந்த மீனவர்கள் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரகத்திடம் ஒப்படைக்கப்பட்டனர். பின்னர் அங்கிருந்து ராமேசுவரம் வர உள்ளனர்.

பாம்பனில்ரெயில் பால விழா

இலங்கை நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு இந்தியா திரும்பும் மோடி நாளை(ஞாயிற்றுக்கிழமை) ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் கடலின் நடுவே ரூ.545 கோடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ரெயில் பாலம் திறப்பு விழாவில் பங்கேற்கிறார். அதன் பின்னர் மாலையில் டெல்லிக்கு புறப்பட்டு செல்கிறார்.


உயரிய விருதான மித்ர விபூஷண விருதினைப் பெற்றுக் கொண்ட பிரதமர் மோடி, திருக்குறள் சொல்லி தனது நன்றியை தெரிவித்தார்.


அதாவது செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல வினைக்கரிய யாவுள காப்பு எனும் நட்பின் பெருமையை உணர்த்தும் திருக்குறளை பிரதமர் மோடி கூறினார்.


அதாவது, நட்பு கொள்வது போன்ற அரிய செயல் வேறு எதுவும் இல்லை. அதுபோல் பாதுகாப்புக்கு ஏற்ற செயலும் வேறொன்றுமில்லை என்று விளக்கமும் பிரதமர் மோடி அளித்துள்ளார்.