புதுடெல்லி:
கிளாசிக்கல் செஸ் போட்டி தரவரிசை பட்டியலை ஃபிடே வெளியிட்டுள்ளது. இதில் உலக சாம்பியனான இந்தியாவின் டி.குகேஷ் 2,787 புள்ளிகளுடன் 3-வது இடத்தை பிடித்துள்ளார். கிளாசிக்கல் தரவரிசையில் குகேஷ் 3-வது இடத்தை பிடிப்பது இதுவே முதன்முறையாகும். நார்வேயின் மேக்னஸ் கார்ல்சன் 2,833 புள்ளிகளுடன் முதலிடத்தில் தொடர்கிறார். அமெரிக்காவின் ஹிகாரு நகமுரா 2,802 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளார்.
3-வது இடத்தில் நீண்ட காலம் இருந்த இந்தியாவின் அர்ஜூன் எரிகைசி 2 இடங்களை இழந்து 2,777 புள்ளிகளுடன் 5-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். மற்றொரு இந்திய கிராண்ட் மாஸ்டரான ஆர்.பிரக்ஞானந்தா, டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றதன் மூலம் 17 புள்ளிகளை கூடுதலாக பெற்று 2,758 புள்ளிகளுடன் 8-வது இடத்தை பிடித்துள்ளார்.
மகளிர் பிரிவில் இந்தியாவின் கொனேரு ஹம்பி 2,528 புள்கிளளுடன் 6-வது இடத்தில் உள்ளார். ஆர்.வைஷாலி 2,484 புள்ளிகளுடன் 14-வது இடத்திலும், ஹரிகா துரோணவல்லி 2,483 புள்ளிகளுடன் 16-வது இடத்திலும் உள்ளனர்.