tamilnadu epaper

சேலைக் கட்ட ஆசை .

சேலைக்  கட்ட ஆசை .

ரெட்டியபட்டி எஸ் மணிவண்ணன்.

 

               நடிகை சுவேதா அப்போதுதான் குளித்து முடித்தாள். நைட்டியில் இருந்த சுவேதா மின்விசிறியின் முன் நின்று கொண்டு ஈரக் கூந்தலை உலர்த்தினாள் .

அவள் மனசு எல்லாம் இன்று எந்த சேலையைக் கட்டுவது என்ற நினைப்பில் அலை பாய்ந்தது .பீரோவில் சேலைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது ..சுபேதாவுக்கு சேலை கட்டுவது என்றால் ரொம்ப பிடிக்கும் ..சேலை பைத்தியம் என்று கூட சொல்லலாம்.

 விதவிதமான சேலை ரகங்களை படப்பிடிப்புக்கு போகும் போதெல்லாம் வாங்கி வந்து விடுவாள் இவ்வளவு சேலை உனக்கு தேவையா...? நீ என்ன கட்டப் போறயா...? என்று அம்மா அடிக்கடி கூறுவாள் .

 உண்மைதான் தாய் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மைதான்.. சுவேதாவுக்கு தெரியும் சேலை கட்ட நேரமில்லை ...ஓயாத படப்பிடிப்பு ...இரவு பகல் என்று இடைவிடாத படப் பிடிப்பு ....தூங்கும் நேரம் தவிர மற்ற நேரங்களில் சினிமா .. சினிமாதான்..

இயக்குனர் கொடுக்கும் உடையத்தான் அணிந்து நடிக்க வேண்டும் ..ஆசைப்பட்ட சேலையை அணிந்து அழகு பார்க்க முடியாது ..வீட்டில் ஓய்வாக இருக்கும் போது...அரை மணி நேரம் அல்லது ஒரு மணி நேரம் பிடித்த சேலைய கட்டிக்கொண்டு மகிழ்ச்சி அடைவாள் .

 ஈரத் தலையை உலர்த்தியவள்... பீரோவை திறந்து அடுக்கி வைக்கப்பட்டிருந்த சேலையில் பிடித்தமான ஒரு சேலையைத் தேர்வு செய்து பொருத்தமான ஜாக்கெட்டையும் எடுத்துக் கொண்டு நிலை கண்ணாடியின் முன் நின்று கொண்டாள் .நைட்டிக்கு விடை கொடுத்துவிட்டு சேலைக்கு மாறினாள் . சேலையில் தான் அழகாக இருப்பது போல் மகிழ்ச்சி அடைந்தாள். அவள் மகிழ்ச்சி அடுத்த நிமிடமே களைந்து போனது..

 படப்பிடிப்புக்கான கார் வாசலில் நிற்கும் சத்தம் கேட்டது. பர்வதம்அறைக்குள் நுழைந்தாள்.. மகள் சேலையில் அழகாக இருப்பதை ரசித்தாள். அடுத்த நொடியே மனம் கலங்கினாள்.

மகள் சினிமாவில் அரைகுறை ஆடையுடன்... கவர்ச்சி நடனமே ஆடுகிறாள்... இவள் கதாநாயகியாக நடித்தாள்தான் விதவிதமாக சேலை கட்ட முடியும் ....இவள் ஆசை நிறைவேறுமா... பர்வதம் வேதனையுடன் பார்த்தாள்.